ஏ.சி. மின்கசிவால் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரம்: திட்டமிடப்பட்ட கொலை என்று போலீசார் தகவல்

திண்டிவனம்: திண்டிவனம் அருகே ஏ.சி. மின் கசிவில் 3 பேர் உயிரிழந்தது திட்டமிடப்பட்ட கொலை என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் ராஜி(60). இவரது மனைவி கலைச்செல்வி(52). இவர்களுடைய மகன்கள் கோவர்த்தனன்(30), கவுதம்(27). கலைச்செல்வியும், கவுதமும் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வந்தனர். கோவர்த்தனன், திண்டிவனம் நகர அ.தி.மு.க. மாணவர் அணி தலைவராகவும், திண்டிவனம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார். கோவர்த்தனனுக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 14ம் தேதி இரவு கோவர்த்தனனும், அவருடைய மனைவியும் வீட்டில் உள்ள ஒரு அறையிலும், ராஜி தனது மனைவி மற்றும் 2வது மகனுடன் மற்றொரு அறையிலும் படுத்து தூங்கினர்.

மறுநாள் அதிகாலையில் ஏ.சி. எந்திரம் வெடித்து தீப்பிடித்ததால் கலைச்செல்வியும், கவுதமும் அறையில் உடல் கருகி இறந்ததாக கூறப்பட்டது. ராஜி, வீட்டின் வராண்டா பகுதியில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே ரத்தம் உறைந்து கிடந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் திண்டிவனம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக கோவர்த்தனன் போலீசாரிடம் கூறுகையில், 6 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.சி. எந்திரம் வாங்கி இருந்ததாகவும், இதுவரை அதை சர்வீஸ் செய்யாததால் மின்கசிவு ஏற்பட்டு, ஏ.சி. எந்திரம் வெடித்து இருக்கலாம் என்று கூறினார். ஆனால் ஏ.சி. எந்திரம் வெடித்த அறையில் கிடந்த 2 மண்எண்ணெய் கேன், ரத்தக்கறை, கழிவறையில் இருந்த வாளியில் பெட்ரோல் வாசனை உள்ளிட்டவை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ஏ.சி.எந்திரம் வெடித்திருந்தால் முதலில் வெளிப்பகுதி முற்றிலுமாக சேதமாகி இருக்கும். ஆனால் ஏ.சி. எந்திரத்தின் உள்பகுதி மட்டுமே எரிந்த நிலையில் இருந்தது. இதனால் 3 பேரும் கொலை செய்யப்பட்டு, அதன் பிறகு தீ வைத்து எரித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து கோவர்த்தனனை கைது செய்த போலீசார் தனி அறையில் வைத்து நேற்று இரவு முதல் விசாரணை நடத்தி வந்தனர். அதுமட்டுமல்லாது, கொலை தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் 3 பேர் உயிரிழந்தது, திட்டமிடப்பட்ட கொலையே என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொலையினை, கோவர்த்தனனே செய்தாரா அல்லது, கூலிப்படை மூலமாகவோ அல்லது உறவினர்களை வைத்தே செய்யப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: