பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் வைகோ தலைமையில் கருப்புக்கொடி போராட்டம்: பா.ஜ. பெண் நிர்வாகி செருப்பு வீசியதால் பரபரப்பு

திருப்பூர்: மோடி திருப்பூர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ தலைமையில் நடந்த கருப்பு கொடி போராட்டத்தில் பா.ஜ.க. பெண் நிர்வாகி ஒருவர் செருப்பை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று திருப்பூர் ரயில் நிலையம் முன் மதிமுக சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சுமார் 400 பேர் கருப்பு கொடியுடன் திருப்பூர் ரயில் நிலையம் முன் திரண்டனர். போராட்டத்தின்போது வைகோ பேசியதாவது: சுதந்திர இந்தியா கண்டிராத வகையில் பல்வேறு துரோகங்களை பிரதமர் மோடி செய்துள்ளார். காவிரி பிரச்னை, ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, முல்லை பெரியாறு உள்ளிட்ட பிரச்னைகளில் தமிழகத்திற்கு துரோகங்களை மத்திய அரசு செய்துள்ளது. தமிழகத்திற்கு வஞ்சகம் செய்த மோடி தமிழகத்தில் எங்கு வந்தாலும் போராட்டம் நடத்துவோம். வரும் நாடாளுமன்ற தேர்தலானாலும், 21 சட்டமன்ற தேர்தலானாலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். அதற்காக மதிமுக உழைக்கும்.  இவ்வாறு வைகோ பேசினார்.

செருப்பு வீச்சு:  வாகனத்தில் நின்று வைகோ பேசிக்கொண்டிருந்த போது, திருப்பூர் பாஜ வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் சசிகலா என்பவர் திடீரென ‘‘பாரத் மாதா கீ ஜே’’ என கோஷமிட்டபடி, தான்  கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் கவரில் இருந்து செருப்பை எடுத்து கூட்டத்தை நோக்கி வீசினார். இதைக்கண்ட மதிமுகவினர் தாங்கள் கையில் வைத்திருந்த கொடி பைப் மூலம் அந்த பெண்ணை தாக்கினர்.  இதில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த மதிமுக வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வைகோவை பாதுகாப்பாக அழைத்து சென்று, அருகில் இருந்த கடையில் சிறிது நேரம்  வைத்து பின்பு போலீஸ் வாகனத்தில் ஏற்றி கொண்டு வடக்கு போலீஸ் நிலையம் சென்றனர். எனினும், தடையை மீறி கூட்டம் நடத்தியதாக வைகோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பிரதமர் மோடி திருப்பூர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெரியார் இயங்கங்கள் சார்பில் குமரன் சிலை முன்பாக இந்து முன்னணி கொடி மற்றும் பாஜக கொடியை நிர்வாகிகள் தீயிட்டு எரித்தனர். இந்த போராட்டத்திற்கு மே17  இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி, திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில்,  கலந்து கொண்டவர்கள், ``மோடி திரும்பி போ, திருப்பூர் தொழிலை தீர்த்துக்கட்டிய மோடி’’ உள்ளிட்ட வார்த்தைகள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: