ராகேஷ் அஸ்தானா-அலோக் வர்மா இடையேயான அதிகார மோதல் எதிரொலி : 14 சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம்

டெல்லி : சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா-  சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா இடையேயான  அதிகார மோதல் காரணமாக இருவருக்கும் நெருக்கமாக இருந்த 14 சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த டிஐஜி எம்.கே.சின்ஹா உட்பட 13 சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம்  செய்யப்பட்டுள்ளனர்.

ராகேஷ் அஸ்தானா- அலோக் வர்மா இடையேயான அதிகார மோதல்

மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ.யின் முதல் 2 உயர் பதவியை வகிக்கும் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு சிபிஐ இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே பனிப்போர் முற்றி உள்ளது. நிதி மோசடி வழக்கில் இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரோஷி மற்றும் ஐதராபாத் தொழிலதிபர் சதீஷ் சனா ஆகியோரை விடுவிக்க சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா ₹2 கோடியை லஞ்சமாக வாங்கியதாக மத்திய விஜிலென்ஸ் ஆணையருக்கு (சிவிசி) சிறப்பு சிபிஐ இயக்குனர் அஸ்தானா சமீபத்தில் புகார் கடிதம் ஒன்றை அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து, சிவிசி.யில் பதிலளித்த அலோக் வர்மா, நிதி மோசடி வழக்கில் இருந்து விடுவிக்க சதீஷ் சனாவிடமிருந்து அஸ்தானா ₹5 கோடி லஞ்சம் பெற்றிருப்பதாக குற்றம்சாட்டினார். கைதான இடைத்தரகர் மனோஜ் பிரசாத் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அஸ்தானா, அவரது குழுவில் இடம் பெற்றிருந்த டிஎஸ்பி தேவேந்திர குமார் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து கைதும் செய்தது.

சிபிஐயின் அடுத்தடுத்த அதிரடிகள்

இந்நிலையில் சிபிஐயின் புதிய இயக்குநராக நாகேஸ்வர் ராவை தாற்காலிகமாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிஐ இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநர் இடையேயான பனிப்போரால் இணை இயக்குநர் நாகேஸ்வர் ராவிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார்.சி.பி.ஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவின் அனைத்து அதிகாரங்களும் திரும்ப பெறப்பட்டது.இதனிடையே சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சிபிஐ டிஐஜி தருண் கௌபா, எஸ்.பி.சதீஷ் டாகர், இணை இயக்குநர் வி.முருகேசன் ஆகியோர் விசாரிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

சி.பி.ஐ அதிகாரிகள் பணியிட மாற்றம்

இந்நிலையில் சி.பி.ஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா- சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா இடையேயான  அதிகார மோதல் காரணமாக இருவருக்கும் நெருக்கமாக இருந்த 14 சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அலோக் வர்மாவுக்கு நெருக்கமாக இருந்த டிஎஸ்பி. ஏ.கே.பஸ்ஸி போர் பிளேயருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும்  சிபிஐ டிஐஜி.க்கள் எம்.அனில்குமார் சின்ஹா, தருண் கவ்பா, ஜஸ்பீர் சிங், அனிஸ் பிரசாத், சவுராசியா, எஸ்பி .சதீஷ்டகர் , எஸ்எஸ்.கம் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே சி.பி.ஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்தார் டி.ஐ.ஜி எம்.கே.சின்ஹா ஆவார். சிபிஐ தலைமை அலுவலக ஊழல் தடுப்பு 3-வது குழுவின் அதிகாரிகள் முழுவதுமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் குட்கா வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளும் இடமாற்றம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: