வேலூர்: பள்ளியில் ஆய்வுக்கு செய்ய சென்ற வட்டார கல்வி அலுவலருக்கு மீன், இறைச்சி, பிரியாணி விருந்து அளித்தது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஒன்றிய தொடக்கக்கல்வி அலுவலகத்தில் வட்டார கல்வி அலுவலராக இருப்பவர் மோகன். இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பேரணாம்பட்டு அடுத்த எம்ஜிஆர் நகர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ஆய்வுக்கு சென்றார். அப்போது, அவருக்கு வகுப்பறையில் மதிய உணவு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் கொண்டு வந்த மீன், இறைச்சி, பிரியாணி என தடபுடல் விருந்து பரிமாறப்பட்டது. ஆர்வத்துடன் வட்டார கல்வி அலுவலரும் தலைவாழை இலை போட்டு 15க்கும் மேற்பட்ட விதம், விதமான உணவு வகைகளை ருசித்து சாப்பிட்டார்.
