மதுரை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளவும், பழங்கால தொல்லியல் மற்றும் நினைவுச்சின்னங்களை பாதுகாக்கக் கோரியும் பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.துரைச்சுவாமி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசுத் தரப்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டது.அதற்கு நீதிபதிகள், ‘‘கல்வெட்டியல் துறையை ஒன்றிய அரசு மூடுவதற்கான நடவடிக்கையை எடுப்பதைப் போல தெரிகிறது. சுமார் ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழியைச் சேர்ந்தவை. தமிழ் கல்வெட்டுகளை ஏன் மைசூருவில் பாதுகாக்க வேண்டும்? கர்நாடக அரசுடன் ஏற்கனவே காவிரி பிரச்னை உள்ளது. எனவே, மைசூருவிலுள்ள கல்வெட்டுகளை தமிழகத்தில் வைத்து ஏன் பாதுகாக்க கூடாது? சமஸ்கிருதத்தில் எத்தனை கல்வெட்டுகள் உள்ளன? பார்சி மற்றும் அரபு மொழியில் எத்தனை கல்வெட்டுகள் உள்ளன? திராவிட மொழி கல்வெட்டுக்கள் எனக் கூறி, இங்கு சமஸ்கிருத மொழிக்கான கல்வெட்டியல் அலுவலரை நியமிக்க வேண்டிய தேவை என்ன? தமிழ் மொழி என்பதற்கு பதிலாக திராவிட மொழி எனக்கூறி குறைக்க கூடாது’’ என்றனர். இதற்கு ஒன்றிய அரசுத் தரப்பில், இது அரசின் கொள்கை முடிவு தொடர்புடையது என கூறப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘‘ஒரு மொழியின் அடையாளத்தை மறைக்கும் வகையில் நடவடிக்கை இருக்கக்கூடாது. அனைத்து மொழிகளும் முக்கியமானவை தான். இதற்கென முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக்கப்பட வேண்டும்’’ என்றனர்.பின்னர் நீதிபதிகள், ‘‘தொல்லியல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட 760 பணியிடங்களில் மண்டல வாரியாக எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன? அதில் கல்வெட்டியல் துறைக்கென எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன? உடையாளூரில் ராஜராஜ சோழனின் சமாதி குறித்து அறிவியல்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து ஒன்றிய அரசின் தரப்பில் அறிக்கையளிக்க வேண்டும். ஒன்றிய தொல்லியல் துறையின் கல்வெட்டியல் துறை அதிகாரி ஆஜராக வேண்டும்’’ என உத்தரவிட்டனர். …
The post கர்நாடக அரசுடன் காவிரி பிரச்னை உள்ள நிலையில் தமிழ் கல்வெட்டுகளை ஏன் மைசூருவில் பாதுகாக்க வேண்டும்? சமஸ்கிருதத்துக்கு கல்வெட்டியல் அலுவலர் எதற்கு? ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி appeared first on Dinakaran.
