ரேவதிக்கு நடந்த பாலியல் சீண்டல்

தென்னிந்திய படவுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர், ரேவதி. இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான சுரேஷ் மேனனை காதல் திருமணம் செய்த பிறகு ஹீரோயினாக நடிப்பதை குறைத்துவிட்ட அவர், கடந்த 2002ல் ‘மித்ர் மை பிரண்ட்’ என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் தேசிய விருது வென்றது. பிறகு ‘பிர் மிலேங்கே’ என்ற படத்தை இயக்கினார். ‘கேரளா கஃபே’, ‘மும்பை கட்டிங்’ ஆகிய படங்களில் சில பகுதிகளையும், ‘குட் ஒய்ப்’ என்ற வெப்தொடரையும் இயக்கினார்.

தற்போது அனுபவ் சின்ஹா இயக்கத்தில் டாப்ஸி, கனி குஸ்ருதி, மனோஜ் பஹ்வா, குமுத் மிஸ்ரா, ஜீஷன் அய்யூப் நடித்துள்ள ‘அஸ்ஸி’ என்ற படத்தில் நடித்துள்ளார். வரும் 20ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் புரமோஷனுக்காக அவர் அளித்த பேட்டியில், ‘இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிராக குறைந்தபட்சம் 80 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. எஃப்ஐஆர் பதிவு செய்யப்படாத வழக்குகள் நிறைய இருக்கின்றன. ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாதிக்கப்படுகிறாள்.

ஒரு பெண்ணின் உடலை ஒருவன் தவறாக தொடுவது, அந்த பெண்ணால் வாழ்க்கையில் மறக்கவே முடியாத காயமாக மாறிவிடும். இதுபோன்ற நேரங்களில் பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு துணையாக இருக்க வேண்டும். யாராவது தவறாக நடந்தால், அவர்களை அந்த இடத்திலேயே அடிக்கச்சொல்லி கற்றுக்கொடுக்க வேண்டும். நான் 11ம் வகுப்பு படிக்கும்போது, பேருந்தில் என்னை ஒருவன் தவறாக தொட்டான். அவனை அந்த இடத்திலேயே பளாரென்று அறைந்தேன். யாருக்கும் நான் பயப்படவில்லை.

அங்கிருந்த அனைவரும் எனக்கு துணையாக இருந்தனர். ‘யாராவது தவறாக நடந்தால், பயப்படாமல் தைரியமாக அடி’ என்று, எனது அம்மா எனக்கு கற்றுக்கொடுத்தார். அதைத்தான் அன்று செய்தேன். ஒவ்வொரு பெண்ணுக்கும் பெற்றோர் பக்கபலமாக இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: