மும்பை: ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜூன் ராம் பால், சஞ்சய் தத், சாரா அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ என்ற இந்தி படத்தை அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு, விஜய் தேவரகொண்டா, ஜூனியர் என்டிஆர், இயக்குனர்கள் எஸ்.எஸ்.ராஜமவுலி, ஷங்கர் பாராட்டியுள்ளனர். தற்போது நடிகையும், தயாரிப்பாளரும், இயக்குனரும், பாஜ எம்.பியுமான கங்கனா ரனவத் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அது வருமாறு: ‘துரந்தர் 2’ படத்தின் வெற்றியின் மூலம் நடந்துள்ள சிறப்பான விஷயம் என்னவென்றால், இதன் இயக்குனர் ஆதித்யா தர்ருக்கு மிகப்பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்து இருப்பதுதான். ஹாலிவுட் இயக்குனர்கள் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், கிறிஸ்டோபர் நோலன், குவெண்டின் டேரண்டினோ போன்றவர்கள், நடிகர்களை விட மிகப்பெரிய ஸ்டார் களாகவே பார்க்கப்படுகிறார்கள்.
ஆனால், இந்திய இயக்குனர்களுக்கு அவர்களுக்கு தகுந்த மரியாதையை நாம் கொடுப்பது இல்லை. அவர்கள் பெரும்பாலும் அதிகமாக உழைத்து, குறைவான ஊதியத்தை பெற்று, சூப்பர் ஸ்டார் நடிகர்களால் அவமதிக்கப்படுகிறார்கள். இதன் விளைவாக, இயக்குனராக வேண்டும், ஒளிப்பதிவாளராக வேண்டும் அல்லது வேறு தொழில்நுட்பக் கலைஞராக வேண்டும் என்று யாரும் ஆசைப்படுவது இல்லை. எல்லோரும் நடிகராக வேண்டும் என்றே ஆசைப்படுகிறார்கள். ஆனால், இன்று சூப்பர் ஸ்டார் இயக்குனர் உருவாகிவிட்டார். அவரை பார்க்கும் இளைஞர்கள், தாங்களும் இவ்வாறு ஒரு உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்று விரும்புவார்கள். இதன்மூலம் நமது திரைத்துறை உயர்வடையும்.
