தேவ தேவியின் தெவிட்டாத அருளின்பம்

நன்றி குங்குமம் ஆன்மீகம்

ஆடி மாதம் பெண்களுக்கு சிறப்பினைத் தருகின்ற மாதம். தட்சிணாயனம் என்கின்ற புண்ணிய காலம் தொடங்கும் மாதம், சிவன் சக்தியினுள் ஒடுங்கும் காலமாக கருதப்படுகிறது. ஆடி மாதம் சக்திக்குரிய மாதமாகவே அறியப்படுகிறது. ஆடிப்பூரம் இரண்டு பெரிய விசேஷ சம்பவங்கள் நடந்த நாள். உமையவள் சக்தியாக அவதரித்த நாள். மேலும் நந்தவனத்தில் துழாய்த் (துளசி) செடிகளின் அருகில் வட்ட விழிகளுடன் கோதையாகிய ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாக அவதரித்த நாள். அம்மன் கோயில்கள் அனைத்திலும் மாங்கல்ய பூஜைகள் சிறப்புடன் நடைபெறும் மாதம் இந்த மாதம். சக்திக்கு உகந்த இம்மாதத்தை (ஆடித்) தள்ளுபடி மாதமாக’’ மாற்றிய பெருமை புடவை அங்காடிகளையும், ஆபரணக் கடைகளையுமே சேரும். காலம் மாறட்டும் மீண்டும் தொன்மை மலரட்டும்.

ஆண்மையும், பெண்மையும் சக்தியின் வடிவே

ஆண், பெண் எவராக இருந்தாலும் துன்பம் ஏற்படுகின்ற போதில், சக்தி கொடு என்று தான் கேட்பர். தங்களுக்குத் துன்பம் ஏற்படுகின்ற போது ரௌத்ரம் கொண்டு போராடத் தொடங்குகிறார்களோ. அந்த சக்தியும் இறைவி அருள்வதே ஆகும். ஊர்கின்றதும், பறப்பதும், நிற்பதும், நடப்பதும், உயிருடையதும், உயிரல்லாததும் என ஏகமும் சக்தியின் கட்டளையின் படியே இருப்பதுடன் இயங்குவதும் சக்தியின் வடிவே. மகாகவி பாரதியும் இதனை ‘‘அன்பு கனிந்த கனிவே சக்தி; ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி’’ என்கின்றான். சிவபிரானது உள்ளத்திலும் கரத்திலும் ஒளிப்பிழப்பமாக இருக்கின்ற அக்னியும் சக்தியே என்று சொல்கின்றன.

‘‘பாம்பை அடிக்கும் படையே சக்தி!

பாட்டினில் வந்த களியே சக்தி!

சம்பரைப் பூசி மலை மிசை வாழும்

சங்கரன் அன்புத் தழலே சக்தி’’

இந்த நான்கு அடிகளும் சக்தியின் பெருமையை ஓங்கி உரைக்கிறது. ஊழ்வினையை வேரறக் களைவதுடன் முகப் பொலிவையும் தருபவள் சக்தியே. சற்றே இமைகளை மூடி அமர்ந்து எந்த சிந்தனையும் இல்லாது வினாடிப் பொழுது அமர்ந்தால் புரியும். சக்தியே அனைத்தும் என்பது. சக்தியே ஏகத்தையும் ரட்சிக் கின்றவளாக இருக்கின்றாள் என்பதும் புரிய வரும். ஆதிசிவனுடைய சக்திதான் எங்கள் அன்னை. அவள் அருளே எங்களுக்கு முக்தி தரும்’’ என்பது பாரதியாரின் வாக்கு.

தவமேன்மையின் காப்பு சக்தி

கொடிய மிருகங்களும், அடர்த்தியான மரங்கள் நிறைந்த அடர் கானகத்தில் தவம் செய்ய வேண்டும் என இரு முனிவர்கள் புறப்பட்டனர். தவநிலையில் நேரடியாக அமர்ந்த ஒரு முனிவர், நேரடியாக தனக்கு முக்தியே பிரதானம் ’’ என்று அமர்ந்து விட்டார். மற்றவரோ சிறு இளஞ்செடியை சக்தி வடிவாக பாவித்து, ஆத்ம ஸமர்ப்பணம் செய்து விட்டு அமர்ந்தார். முதலாமானவர் தவத்தின் பலன் கிடைக்காது ஆசிரமம் திரும்பிச் சென்றார். இரண்டாமானவரோ, தவமேன்மையுடன் ஒளியின் பொலிவுடன் விளங்கினார். இதனையே மகாகவி பாரதியார்;

‘‘சக்தி சக்தி என்றே செய்தால் தானே செய்கே நேராகும்

அஃது தானே முக்தி வேராகும்’’

என்று தனது சக்தி திருப்புகழில் பாடுகின்றார். துர் சக்திகளை அழிக்கின்ற அளப்பரிய சக்தியாக ஆதிசக்தி போற்றப்படுகின்றார். தவயோகிகளுக்கு முதலில் தனது திருப்பாதங்களைத் தரிசனமாக காட்டுகின்றாள். பேரொளியுடன் மிளிர்கின்ற திருவடிகளே, அவர்களின் ஞானசக்தியாக வடிவெழுத்து தவப்பலனைத் தருகிறது. ஞானமார்க்கத்தினருக்கு ஆதர்ஷண சக்தியாக இருக்கின்ற சக்தி, குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்களை வழி நடத்துவது வாத்சல்ய ரூபிணியாக என்று சொல்லலாம்.

இல்லறத்தில் சக்தி

வீடுகளில் சக்தி தேவியின் இருப்பு இருக்க வேண்டும் என்றால் தூய்மையும், உண்மையும் அந்த வீட்டில் இருக்க வேண்டும். சில வீடுகளில், அழுக்குத் துணிகள் அங்கங்கு சிதறிக் கிடப்பதும், புத்தகங்கள் தாறுமாறாக இருப்பதும், தொலைக்காட்சி பெட்டியும் அதன் மேசையும், அமரும் நாற்காலிகளும் அழுக்கும் தூசுமாக இருப்பதும். ஆங்காங்கு ஒட்டடைகள் தொங்குவதும், சமையலறை மேடை கறைகளுடனும், பாத்திரங்கள் துலக்கப்படாமல் கும்பலாக போடப்பட்டிருப்பதும், குளியல் அறை வழுக்கலுடனும் ஒட்டிய பொட்டுக்களுடன் கதவும் இருப்பது, சாப்பாட்டு மேசையில் கடைகளில் வாங்கிய உணவுப் பொட்டலங்களின் மீதம், அப்படியே சிறு கொசுக்களின் மேய்ச்சலுடன் இருப்பதையும் பல இல்லங்களில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.

தூய்மையும் சுகாதாரமும் வெளியில் இருந்தால்தான் உள்ளம் சக்தியின் இருப்பிடமாகும்.

அவ்வப்பொழுது சுத்தம் செய்து கொண்டே இருப்பது அவசியமாகும். சிலர், சிறுசிறு விஷயங்களுக்குக் கூட பொய் சொல்வார்கள். அதனைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். அன்பர்களே..! ஒரு உறுதி மொழி தினமும் எடுத்துக் கொள்வது உத்தமம். வீடும், மனசும் சுத்தமாக வைத்துக்கொள்வது மற்றும் இயன்ற அளவு உண்மை மட்டுமே பேசுவது என இந்த உறுதிமொழி நிச்சயமாக சக்தியின் வடிவான செல்வமும், கல்வியும், மனநிறைவும் இல்லம் தேடி வந்து சேர உதவும். இச்செல்வங்கள் வந்து சேர்ந்திடின் இல்லறம், நல்லறமாகும் என்பதில் ஐயமில்லை.

தொகுப்பு: மகேஸ்வரி சற்குரு

Related Stories: