கவுகாத்தி: தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர், ஆஷிஷ் வித்யார்த்தி. தனது முதல் மனைவியை விட்டு பிரிந்த அவர், கடந்த 2023 மே மாதம் அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த ரூபாலி பருவாவை 2வது திருமணம் செய்துகொண்டார். கொல்கத்தாவில் ஆடை வடிவமைப்பு நிறுவனம் நடத்தும் ரூபாலி பருவாவுடன் ஆஷிஷ் வித்யார்த்தி மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு இருவரும் கவுகாத்தி சென்றனர். அங்கு ஜூ டினியாலி சந்திப்பு அருகிலுள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு சாலையை கடந்தனர்.
அப்போது அந்த வழியாக போதையில் மிதந்த இளைஞர் ஒருவர் அதிவேகமாக ஓட்டிக்கொண்டு வந்த இருசக்கர வாகனம் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆஷிஷ் வித்யார்த்திக்கு காலில் லேசான காயமும், ரூபாலி பருவாவுக்கு தலையில் பலத்த காயமும் ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய இளைஞரும் படுகாயம் அடைந்து கவுகாத்தி மருத்துவக் கல்லூரியிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆஷிஷ் வித்யார்த்தி வெளியிட்டுள்ள பதிவில், ‘எனக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது நலமாக இருக்கிறேன். எனது மனைவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதால், டாக்டர்களின் தீவிரமான கண்காணிப்பில் இருக்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
