சென்னை: திரையுலகில் மீண்டும் ஒரு துணிச்சலான முயற்சியாக, வசனங்கள் எதுவும் இல்லாமல், முழுநீள மவுன படமாக ‘காந்தி டாக்ஸ்’ உருவாகியுள்ளது. ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இதில் விஜய் சேதுபதியுடன் அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஹைதரி, சித்தார்த் ஜாதவ் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வரும் 30ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து இயக்குனர் கிஷோர் பெலேகர் கூறியதாவது:‘காந்தி டாக்ஸ்’ என்பது மவுனத்தின் மீது வைத்த அதிக நம்பிக்கை.
இந்திய திரையுலகம் நூற்றாண்டை கடந்துள்ள நிலையில் நடிப்பும், உணர்ச்சியும் கொண்ட கதைசொல்லலுக்கு திரும்பியுள்ளோம். இதை நடிகர்கள் மிகப்பெரிய சவாலாக ஏற்றுக்கொண்டு நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை இப்படத்தின் குரலாக மாறியுள்ளது. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் மீரா சோப்ரா ஆதரவுடன் துணிச்சலான இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். ஒரு வார்த்தை கூட பேசாமல், உணர்வுகளுடன் பேசும் அபூர்வமான திரை அனுபவமாக இப்படம் இருக்கும்.
