பராசக்தி ஷூட்டிங்கில் எனக்கு அம்மாவாக மாறிய சுதா கொங்கரா; ஸ்ரீ லீலா நெகிழ்ச்சி

 

சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீ லீலா நடித்துள்ள ‘பராசக்தி’ என்ற படம், வரும் 10ம் தேதியன்று திரைக்கு வருகிறது. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். படம் குறித்து ரவி மோகன் கூறுகையில், ‘நான் படத்தை பார்த்து விட்டேன். இந்த ஆண்டின் மிகச்சிறந்த படமாக இது இருக்கும். சிவகார்த்திகேயன் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். அவர் இவ்வளவு பெரிய உயரத்துக்கு வந்திருக்கிறார் என்றால், அது சாதாரண விஷயம் இல்லை. அவரது ரசிகர்கள் அவருடனேயே இணைந்து ஓடிக்கொண்டு இருங்கள். 100வது படம் என்று நினைக்காதீர்கள் ஜி.வி.பி. இது தான் உங்கள் முதல் படம். இன்னும் கூட நீங்கள் 100 படங்களுக்கு மேல் இசை அமைக்க வேண்டும்.

இந்த படத்தில் ஒரு தீயை அழிக்க முயற்சி செய்கிறேன். அந்த தீயை வெளியிலுள்ள சிலர் அழிக்க பார்க்கின்றனர். இது சுயமரியாதையை காப்பாற்றுவது பற்றிய படம். எனது வாழ்க்கையில் சுயமரியாதையை திரும்ப பெறுவதற்கு போராடினேன். எனவே, ரசிகர்கள் சுயமரியாதையை மட்டும் விட்டுவிடாதீர்கள்’ என்றார். பிறகு ஸ்ரீ லீலா கூறும்போது, ‘இந்த படத்தின் பெரிய சக்தி சிவகார்த்தி கேயன் சார். பொள்ளாச்சி யில் சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுடன் போட்டோ எடுக்கும்போது, சலித்துக்கொள்ளாமல், சோர்வடையாமல் கடைசிவரைக்கும் பொறுமையாக நின்று போஸ் கொடுத்தார். அதுதான் அவருடைய நல்ல குணம். இந்த படத்தில் நடன காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. எனக்கு மெலோடி பிடிக்கும். ‘ரத்னமாலா’ மாதிரி கிளாசிக் மெலோடி பாடலை எனக்கு கொடுத்ததற்காக, மிகவும் நன்றி ஜி.வி.பி சார். இதுபோன்ற கேரக்டருக்கு நான் நீண்ட நாட்களாக காத்திருந்தேன். சுதா கொங்கரா மேடம் ஒவ்வொரு காட்சியையும் டீட்டெயிலாக இயக்கினார். படப்பிடிப்பில் என்னை அவர் ஒரு அம்மா மாதிரி பாசத்துடன், அக்கறையுடன் கவனித்துக் கொண்டார்’ என்று நெகிழ்ந்தார்.

 

Related Stories: