சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா நடித்துள்ள படம், ‘பராசக்தி’. வரும் 10ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கியுள்ளார். கடந்த 1960களில் நடந்த இந்தி திணிப்பு போராட்ட வரலாற்று பின்னணியில், தமிழின் பெருமை சொல்லும் படமாக உருவாகியுள்ள இதை இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசுகையில், ‘இப்படத்தின் ‘பராசக்தி’ என்ற பெயரே அதிக வலிமை கொண்டது. படம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த 1960களுக்கு டைம் டிராவல் மூலம் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும்.
மாணவர்கள் அதிக சக்தி வாய்ந்தவர்கள். அவர்கள் எவ்வளவு வலிமை கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதை இப்படம் அழுத்தமாக சொல்கிறது. பலரது தியாகங்களை நேர்மறையாக, மரியாதையுடன் பதிவு செய்திருக்கிறோம். ‘கொட்டுக்காளி’ படத்தின் பிரீமியர் ஷோக்கு சுதா கொங்கரா வந்தார். அப்போது ஒரு காதல் கதை சொன்னார். அவர் சொன்ன ஒரு வரி என்னை வியக்க வைத்தது. பிறகு ஸ்கிரிப்ட்டை படிக்கச் சொன்னார். ‘இப்படத்தில் நடிக்கிறேன். இன்றிரவே ஸ்கிரிப்ட்டை படித்துவிடுவேன்’ என்று சொன்னேன். ஆனால், அது ஆங்கிலத்தில் இருப்பதை பார்த்து நடுங்கிய நான், மீண்டும் அவருக்கு போன் செய்து, இதற்கு அதிக நேரம் தேவைப்படும் என்றேன்.
அடுத்த நாள், ஸ்கிரிப்ட்டை முழுமையாக படித்து முடித்திருந்த மாதிரி அவரிடம் சொன்னேன். சுதா கொங்கரா ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்று பில்ட்-அப் கொடுத்தனர். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற பிறகுதான் தெரிந்தது, அவர் எல்லா சீன்களையும் ஆங்கிலத்தில்தான் விளக்குவார்… அதுவும் ஷேக்ஸ்பியர் ஆங்கிலம் மாதிரி சொல்வார் என்ற விஷயம். அதை என்னால் பின்தொடர முடியவில்லை. பிறகு சுதா கொங்கரா என்னிடம் பேசினார். அப்போது நான், ‘எனக்கு ஆங்கிலம்தான் பிரச்னை.
இப்போது நான் கவுதம் வாசுதேவ் மேனனுடன் வாழ்வது போல் உணர்கிறேன்’ என்றேன். அன்று முதல் எல்லா சீன்களையும் தமிழிலேயே விளக்கினார். அவரிடம் இருந்து கடுமையான உழைப்பையும், முழுமையான அர்ப்பணிப்பையும் கற்றுக்கொண்டேன். ‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த்சாமி சக்தி வாய்ந்த வில்லனாக இருந்தது போல், ‘பராசக்தி’ படத்தில் ரவி மோகன் பவர்ஃபுல் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார்’ என்றார். இது ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் 100வது படமாகும்.
