குறைகள் தீர்க்கும் தெய்வீகத் தலங்கள்

நம் தமிழ்நாட்டில் நவகிரக தோஷங்கள் நீக்கும், அல்லது நவகிரகங்களின் அருளை அதிகப்படுத்தும் தலங்கள் என்ற பட்டியலில் நிறைய தலங்கள் உண்டு. பொதுவாகவே நவகிரகங்கள் தங்களுடைய குறைகளை தீர்த்துக் கொண்ட தலங்களை “நவகிரகத்  தலங்கள்” என்று எடுத்துக்கொள்ளலாம். இதில் சைவத்  தலங்களும் உண்டு. வைணவத் தலங்களும் உண்டு.

பொதுவாகச் சொல்லப்படும் பிரபலமான தலங்களோடு, நவகிரகங்களின்  அருளை   அள்ளித் தரும் முக்கியமான சில தலங்களின்  தொகுப்பை நாம் காணப் போகின்றோம்.

1.சக்ரபாணி கோயில் (சூரியன்)

கிரகங்களின் தலைமைக் கிரகம்சூரியன். ஆத்மகாரகன் என்று சொல்வார்கள்.அப்படிப்பட்ட சூரியன் தன்னுடைய ஆத்ம பலமாகிய ஒளியினை இழந்து இருள் அடைந்தார். தன்னுடைய ஒளியை மீண்டும் பெறவும், தன்  சக்தியை மீட்டெடுக்கவும் பகவானைச்   சரணடைந்தார். பகவான் விஷ்ணு  சுதர்சன வடிவில் தோன்றி சூரியனுக்கு பழைய ஒளியை அருளினார்.

சூரியன் தன்னுடைய பலத்தை திரும்ப அடைந்த தலம் என்பதால் மிகச் சிறந்த “சூரியத்  தலமாக” விளங்குகின்றது. இதனை “பாஸ்கர ஷேத்ரம்” என்று வடமொழியில் கூறுகின்றார்கள். வைகாசி மாத பௌர்ணமி திதியில், சுதர்சன சக்கரத்தில் இருந்து ஸ்ரீ சக்கரபாணி சுவாமி மூன்று கண்களுடனும், எட்டுக் கைகளுடனும் (திரி நேத்ர, அஷ்ட புஜ, ஹிரண்ய கேச என்றபடி) பொன்மயமான கேசத்துடன் அருட் காட்சி தந்தார்.  

தாயாருக்கு “சுதர்சன வல்லி”  என்ற திருநாமம். இத்தலம் கும்பகோணத்தில், காவிரி ஆற்றங்கரையில் உள்ளது. பெருமாள்சக்கர வடிவமான தாமரைப்பூவில் காட்சி தருகின்றார்.  சக்கர ராஜனுக்கு அமைந்த விசேஷமான கோயில்  இக்கோயில். இவருக்கு பூ, துளசி, குங்குமம் இவற்றோடு வில்வ அர்ச்சனையும் செய்யப் படுகின்றது. சூரிய பகவானுக்கும் பிரம்ம தேவருக்கும் அக்னி பகவானுக்கும், மார்க்கண்டேய மகரிஷிக்கும் அருட் காட்சி தந்த இடம் இது.

ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன்  நிலை பாதகமாக இருந்தாலும் அல்லது கண்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும், துஷ்ட சக்திகளின் ஆதிக்கத்தால் மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் இல்லாவிட்டாலும், இத்தலத்தில் உள்ள பெருமாளை வணங்கி அருள்பெறலாம். காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு

8 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும். கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து மிக எளிதாக இத்திருக்கோயிலை அடையலாம். கிரகங்களால் கஷ்டங்கள் ஏற்பட்டால் , “ஆழியெழ” என்று தொடங்கும் பத்து பாசுரங்களைப் படிக்கலாம். அப்பாசுரங்களில் ஒன்று. திருக்கோயிலை தரிசிக்கும்போது சொல்லவேண்டிய பாடல்.

ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை

வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம்

மோழை எழ முடி பாதம் எழ அப்பன்

ஊழி எழ உலகம் கொண்டவாறே  

2.தலைச்சங்க நாண்மதியம் (சந்திரன்)

மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருத்தலம் இது. தலைச்சங்காடு அல்லது திருத்தலைச்சங்கநாண் மதியம் என்பது இத்தலத்தின் பெயர். 108 திவ்யதேசங்களில் ஒன்று. இங்குள்ள பெருமாளுக்கு திருநாமம் நாண்மதியப் பெருமாள்( வெண் சுடர் பெருமாள்) என்ற திருநாமம்.  கிழக்கே பார்த்தபடி நின்ற கோலத்தில் அருள் புரிகின்றார். தாயாருக்கு  தலைச்சங்க நாச்சியார் (செங்கமலவல்லி நாச்சியார்) என்று திருநாமம்.

கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள தீர்த்தத்திற்கு சந்திர தீர்த்தம் என்று பெயர். இக்கோயிலின் அருகிலேயே தேவாரப்பாடல் பெற்ற சங்காரண்யேஸ்வரர் கோயிலும் அமைந்துள்ளது சிறப்பு. திருமங்கையாழ்வார் இக்கோயிலைப் பற்றி இரண்டு பாசுரங்கள் பாடி இருக்கிறார். சந்திரன் சாபம் தீர்த்த பெருமாள் என்றாலும்,சந்திர முகப்பொலிவு கொண்ட பெருமாள் என்பதே ஆழ்வார்கள் திருவுள்ளம்.

விண்ணோர் நான் மதியை விரிகின்ற

வெஞ்சுடரை கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்ற

என்பது ஆழ்வார் பாசுரம். பழந் தமிழ் இலக்கியங்களில் இத்தலம் குறித்து பல செய்திகள் உண்டு.

1. சங்கு பூக்கள் தோட்டங்களில் மிகுதியாகப் பயிரிட்டு இவ்வூர்க் கோயில்களுக்கும், இதனைச் சுற்றியுள்ள கோயில்களுக்கும் மிகுதியாக அனுப்பப்பட்டன. இந்தப் பூந்தோட்டங்களை ஒட்டியே(பூந்தோட்டம் என்ற ஊரும் அருகில் உண்டு) தலைச்சங்காடு என்ற பெயர் உருவாகி இருக்க வேண்டும் எனக் கல்வெட்டுச் செய்தி கூறுகிறது.

2. பூம்புகார் அருகில் உள்ள தலம் என்பதால் கடல் வணிக இடமாக இருந்தது. சங்குகள் விற்கப்பட்டன.  விலை மதிப்பற்ற சங்கு ஒன்று ஏந்தி நிற்பதால் தலை சங்கப் பெருமாள் என்றும் திருநாமம்.

திருக்கோயிலின் விமானத்திற்கு சந்திர விமானம் என்று பெயர். கோயில் எல்லா நேரங்களிலும் திறந்திருக்காது. காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும் என்றாலும் விசாரித்து விட்டு செல்ல வேண்டும். சந்திரதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு, பிரகாரத்தை வலம் வந்து, சந்திர விமான தரிசனத்தை செய்தால் சந்திர தோஷம் நீங்கிவிடும்.

சிவனைப்போலவே இத்தலத்து பெருமாள் சந்திரசேகரனாக, தலையில் சந்திரனை சூடிய நிலையில் காட்சி தருகிறார். தேவர்கள் பாற்கடலைக் கடைந்த பொழுது,பல பொருள்கள் தோன்றின.சந்திரனும் தோன்றினார். மஹாலட்சுமியான பெரிய பிராட்டியாரும் தோன்றினார்.  மகாலட்சுமிக்கு முன்னதாகவே தோன்றியவர் சந்திரன். அதனால் சந்திரனை  மகாலட்சுமியின் அண்ணனாகக்  கருதுவர். ஒரு முறை சந்திரனுக்கும், சந்திரனுக்கு பெண்களை திருமணம் செய்துதந்த தட்சனுக்கும் பிரச்சினை வந்தது.

சந்திரன் செய்த தவறுக்காக, அவருடைய கலைகள் குறையும் மாமனாரான தட்சன்  சாபமிட்டார். இதனால் குன்ம நோய் வந்து, நாளுக்கு நாள் சந்திரன் கலையும் களையும் இழந்து இளைத்தார். திருமாலிடம் சென்று முறையிட்ட போது, திருமால் ஸ்ரீ ரங்கம், திரு இந்தளூர், தலைச்சங்க நாண்மதியம் ஆகிய தலங்களுக்குச் சென்று, அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் சாபம்  நீங்கும் என்றார். ஸ்ரீ ரங்கம். திருஇந்தளூர் முதலிய தலங்களுக்குச் சென்று வழிபட்ட சந்திரன், நிறைவாக காவேரி நதியின் கடைக்கோடியில் உள்ள தலைச்சங்க நாண்மதியம் வந்து, புஷ்கரணியில் நீராடி இப்பெருமானை வழிபட்டான்.

சந்திரன் நீராடிய தீர்த்தம், சந்திர புஷ்கரணி  ஆனது. அவனுடைய தோஷமும் சாபமும்விலகியது. அதைப்போலவே சந்திரனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் இத்தலத்துஎம்பெருமானால்  நீங்கிவிடும். சந்திர தசை நடப்பவர்கள்,சந்திரனின் ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ஒரு முறை இத்திருத்தலத்தை சேவித்து நலம் பெறலாம்.

3.வைத்தீஸ்வரன் கோயில் முத்துக்குமாரசுவாமி சன்னதி (செவ்வாய்)

சீர்காழியில் இருந்து மாயவரம் செல்லும் வழியில் அமைந்த திருத்தலம். புள்ளிருக்கு வேளூர் என்று இத்தலத்தைச் சைவப்பெருமக்கள்  சொல்வார்கள்.

அங்காரகன் என்று சொல்லப்படும் செவ்வாய்க்குரிய தலமாக இத்தலத்தைக்  குறிப்பிடுகின்றார்கள். அங்காரகனின் தொழுநோயை இங்குள்ள இறைவன் குணப்படுத்தியதாக  தல வரலாறு. தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம்.

“என்னை பாட வைத்தவன்.எல்லா தேவர்களும்  ஏத்தும் இறைவன். சுவையான தேன். அமுதம். அற்புதமான ஆவின் பால்.அண்ணிக்குந் தீங்கரும்பு. இப்படிப்பட்ட  புள்ளிருக்கு வேளூரானாகிய வைத்தீஸ்வரனை நான் இதுவரை போற்றாமல்,சென்று தரிசிக்காமல், வீணாக  நாள் போக்கி னேனே” என்று உருக்கமுடன் பாடுகின்றார்  திருநாவுக்கரசர்.

பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப்

பன்னாள்பாமாலை பாடப் பயில்வித் தானை

எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை

எம்மானை என்னுள்ளத் துள்ளே யூறும்

அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை

அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்

புத்தேளைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்

போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

அண்மையில் குடமுழுக்கு செய்யப்பட்ட தலம் இத்திருத்தலம். இக் கோயி லில் வைத்தீஸ்வர சுவாமிக்கு இணையாக அம்பாள் தையல்நாயகி, மூலிகை தைலத்துடன் நின்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். பிரசாதமாக திருநீரும் திருச்சாந்துருண்டையும் தரப்படுகின்றன. 4448 வகை யான வியாதிகள் இங்கு தரப்படும் புற்று மண் மற்றும் அபிஷேக தீர்த்தத்தால்  தீருகின்றன. தோல்  நோய்களுக்கு இங்குள்ள புனுகு எண்ணெய் வாங்கி தேய்த்து நீராடுகின்றனர். இங்குள்ள  திருக்குளத்திற்கு  “சித்தாமிர்த குளம்” என்று பெயர். செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி இருக்கிறது.

செவ்வாய்க்கு அதி தேவதையான முருகப்பெருமான் இங்கே மிக முக்கியமான கடவுளாக, செல்வ முத்துக்குமாரசுவாமி என்கிற பெயரோடு அருள்பாலிக்கின்றார். தை மாதத்தின் பத்து நாட்கள் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு மிகச்சிறப்பான திருவிழா நடைபெறும். செல்வ முத்துக்குமார சுவாமிக்கு அர்த்தஜாம பூஜையில் , திருவடியில் சாத்தப்படும் சந்தனமும் திருநீறும் விசேஷமான பிரசாதமாக வழங்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, திருமண வரம், குழந்தைச்செல்வம், வீடு வாசல் வாங்குதல், தீராத நோய்  முதலிய பல் வேறுவிதமான குறைகளுக்காக இத்தலத்தில் வீற்றிருக்கும் வைத்தியநாத சுவாமியையும், தையல்நாயகி அம்மையையும், செல்வமுத்துக்குமாரசுவாமியையும், செவ்வாய் பகவானையும் வணங்குகின்றனர்.

செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள், செவ்வாய் தசை நடப்பில் உள்ளவர்கள்,மிருக சீரிஷம் அவிட்டம், சித்திரை, நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசியம் ஒருமுறை இத்தலத்தில் உள்ள இறைவனை வணங்கி நலம் பெறலாம்.

4.காஞ்சிபுரம் சத்யநாதர் கோயில்(புதன்)

பொதுவாக புதனுக்கு திருவெண்காடு தான் பரிகார தலமாகச் சொல்வார்கள். ஆனால் வேறு தலங்களும் உண்டு. நகரேஷு காஞ்சி என்று சொல்லப்படுகின்ற, நூற்றுக்கணக்கான திருக்கோயில்கள் நிறைந்த காஞ்சிபுரத்தில், வடகிழக்குப் பகுதியில், திருக்காலிமேடு திருக்காலீஸ்வரர் கோயில்  அமைந்துள்ளது. காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் தலைமை தபால் நிலையத்தின் எதிரே உள்ள சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம். ஒரு காலத்தில் இந்த ஆலயம் இருக்கின்ற பகுதி முழுக்க காரைச்செடி அடர்த்தியாக இருந்ததாம்.

ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது.

உள்ளே நந்தி மண்டபம், கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். வாயிலைக் கடந்தால் கருவறையைச் சுற்றியுள்ள முதல் பிராகாரம் உள்ளது. அங்கே விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மன், துர்க்கை ஆகியோருக்கும், இந்திரன், புதன், பைரவர் முதலிய தேவதைகளுக்கும் திருமேனிகள் உள்ளன. இங்குள்ள இறைவனை வழிபடுவதற்காக இந்திரன்  உண்டாக்கிய தீர்த்தம் ஒன்று உண்டு. அதற்கு இந்திர தீர்த்தம் என்று பெயர். திருஞானசம்பந்தர் இங்குள்ள இறைவனை போற்றிப் பாடியுள்ளார்.

வாரணவு முலைமங்கை பங்கினராய்

அங்கையினிற்

போரணவு மழுவொன்றங் கேந்திவெண் பொடியணிவர்

காரணவு மணிமாடங் கடைநவின்ற கலிக்கச்சி

நீரணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே.

இத்தலத்தில் உள்ள இறைவனை புதன் வழிபாடு செய்து  கிரக நிலையை அடைந்ததாகச்  சொல்கிறார்கள். மிதுன கன்னி ராசியில் பிறந்தவர்களும், புதனுடைய நட்சத்திரமாகிய ஆயில்யம், கேட்டை, ரேவதி முதலிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களும், ஜாதகத்தில் புதன் வலுவிழந்தவர்களும்,புதன் தசை நடப்பவர்களும்  இத்தலத்தில் உள்ள காரைக்காட்டு ஈசனை வணங்கி நலம் பெறலாம். இத் தலத்தில் பிரகாரத்தில் சுவாமிக்கு வலதுபுறத்தில் புத பகவான் தெற்கு பார்த்தபடி இருக்கிறார்.

5.குருவே துணையாகும் சுவாமிமலை (குரு)

பொதுவாகவே குருவுக்கு உரிய தலமாக ஆலங்குடி என்ற தலத்தையே சொல்கின்றார்கள். ஆனால் தந்தைக்கு உபதேசம் செய்த சற்குருநாதன் கோயில் கொண்டுள்ளசுவாமிமலை, குருவுக்குரிய அத்தனை காரகங்களையும் பிரதிபலிப்பது என்பதால், குருவின் திருவருள் பெற,  இத் தலத்தை நாம் சென்று வணங்கலாம். அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடு என்பது இத்தலத்திற்கு உரிய சிறப்பு. கும்பகோணத்திற்கு அருகில், காவிரி ஆற்றங்கரையில், ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோயில். எம்பெருமான் முருகன்  குருவாகி வந்து அருள் பாலிக்க வேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டுகிறார்.

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்

மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

அருணகிரிநாதருக்கு மட்டுமல்ல, அந்த ஈசனுக்கே  குருவாக அமைந்ததால் இந்த மலை  குருமலை, சிவமலை மற்றும் திருவேரகம் என்று அழைக்கப்படுகின்றது. நக்கீரரும் திருமுருகாற்றுப்படியில்  இத்தலத்து முருகனை பாடி இருக்கின்றார்கள். தல மரம் நெல்லி மரம். முருகன் சன்னதிக்கு செல்வதற்கு 60 படிகள் ஏற வேண்டும். அந்தப் படிகளில் ஏறுகின்ற பொழுது அறுபது வருடங்களின் நடந்தது  நினைவு வரும். எனவே அறுபது வயதை கடந்து மணி விழா செய்துகொண்டவர்கள் ஒருமுறை இத்தலத்தைச் சென்று சேவிப்பது நல்லது.

இதில் இன்னொரு முக்கியமான விஷயம், பெரும்பாலும் முருகனின் சன்னதியில் மயில்வாகனம் தான் இருக்கும்; ஆனால் இங்கே மட்டும் மயிலுக்கு பதிலாக யானை வாகனம் உள்ளது. இது இந்திரன் அளித்த யானை என்று சொல்லுகின்றார்கள். கருவறையில் முருகப் பெருமான் வலது கரத்தில் தண்டம் ஏந்தி  அருள் பாலிக்கின்றார். கோயிலுக்கு அருகிலேயே மற்றொரு முருகன் கோயில் ஏரகரம் கந்தசுவாமி கோயில் என்று இருக்கிறது. கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் முதலிய திருவிழாக்கள் இங்கு மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

அருண கிரிநாதர் இங்குள்ள இறைவனை போற்றிப் பாடுகின்ற பொழுது, “உனது தாமரை போன்ற திரு வடிகளை நான் அரை நிமிட நேரமாவது நினைத்தால் போதுமே ;எல்லா விதமான பெருமைகளையும், நீடித்த சுகத்தையும், நிறைந்த பெரு வாழ்வையும்,  நல்ல மதிப்பையும், சிவஞான போதத்தையும் , முக்தி யையும்  கொடுத்து நீ அருள் புரிவாயே! அடியேனுக்கு  அருமையான தமிழ் ஞானத்தை தந்த மயில் வீரனே! அழகனே! திருவேரகம் சுவாமி மலையில் எழுந்தருளி இருக்கக்கூடிய முருகப்பெருமானே!” என்று பாடுகின்றார்.

இந்த ஒரு பாடலை ஒருமுறை சிந்தித்தாலே  குருவினுடைய கடாட்சம் கிடைக்கும். அதுவும் குரு உபதேசம் செய்தசுவாமிமலையில் கட்டாயம் கிடைக்கும்.குரு தோஷம் மட்டுமல்ல, சகல கிரக தோஷங்களும் நீங்கும். சரணகம லாலயத்தை அரைநிமிஷ நேர மட்டில்

தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத

சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த

தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ

கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு

கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே

கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை

கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே

தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய

சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு

தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து

தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா

அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க

அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா

அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த

அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே.

6.திருவெள்ளியங்குடி (சுக்கிரன்)

108 திருப்பதிகளில் ஒன்று திருவெள்ளியங்குடி. வெள்ளி (சுக்கிரன்) தவம் (குடியிருந்து) செய்த தலம் என்பதால் வெள்ளியங்குடி. இந்த ஒரு தலத்தைத் தரிசித்தால் 108 தலங்களையும் தரிசித்த புண்ணியம் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்டது எனத் தல வரலாறு தெரிவிக்கிறது. உற்சவருக்கு சிருங்காரசுந்தர் என்ற திருநாமம். அலங்காரம் செய்துகொண்டு சிருங்காரமாகக் காட்சியளிப்பதால் பெருமாளுக்கு இந்தத் திருநாமம் காரணப்பெயராகிறது. ஆழ்வார்களில் திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.

கிழக்கு நோக்கி புஜங்க சயனத்தில் பெருமாள் காட்சி தருகிறார். திருநாமம் கோலவில்லி ராமர். தாயார் மரகதவல்லி. கருடன் இந்த ஒரு தலத்திலேதான் சங்கு சக்கரங்கள் ஏந்திக் காட்சி தருகிறார். மகாவிஷ்ணு சங்கு சக்கரங்களை கருடனிடம் தந்து விட்டு, கோலவில்லி ராமனாகக் காட்சி தருகிறார். தலவிருட்சம் செவ்வாழை. இது கடினமான கல்தரையில் பிராகாரத்திலேயே இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை ஒரே ஒரு தார் மட்டும் தருகிறது என்பது அதிசயம்.

இத்தலம் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு பெயரோடு விளங்கியதாக புராணச் செய்திகள் உண்டு. கிருதயுகம் பிரம்மபுத்திரம், துவாபரயுகம் சைந்திரநகரம், திரேதாயுகம் பராசரம், கலியுகம் பார்க்கவபுரம். புஷ்கலா வர்த்தக விமானம் என்ற அழகிய விமானம் உடைய இத்தலத்தில் அருள் பெற்றவர்கள் நான்முகன், இந்திரன், பரசுராமர். பெருமாளுக்கு அதிகமான திருக்கோயில்களை விஸ்வகர்மா (தேவதச்சன்) கட்டி வழங்கியது போல அசுரத் தச்சனான மயன், பெருமாளுக்கு இந்தத் தலத்தை நிர்மாணித்துக் கொடுத்து அருள்பெற்றான்.

சுக்கிரனுக்கு அருள் தந்த தலம் இது. எனவே சுக்ரபுரி எனப்படுகிறது.

வாமன அவதாரத்தில் மகாபலி தானம் தந்தபோது, வண்டு உருவம் எடுத்து கமண்டலத்தில் நீர் வராது தடுத்தார் அசுர குருவான சுக்கிரன். பகவானால் தர்ப்பையால் குத்தப்பட்டு கண் இழந்தார். கண் இழந்த சுக்கிரன், இத்தலத்தில் பிராயச்சித்தம் தேடி அருள் பெற்றார். அதற்கு நன்றியறிதலாக இவ்வாலயத்தில் அணையா தீபமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார் என்பது நம்பிக்கை. கண் குறைபாடு, திருமணத் தடை, புத்திர பாக்கியக் குறைபாடுகளுக்குப் பிராயச்சித்தமாக இத்தலம் விளங்குவதாக நம்பிக்கை. பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சார்த்துவது வழக்கம்.

மார்க்கண்டேய மகரிஷிக்குக் காட்சி தந்து அருள்பாலித்த இத்தலம் குடந்தை அணைக்கரை சாலையில் உள்ளது. (குடந்தை -18 கி.மீ, சோழபுரம் - 6 கி.மீ, திருப்பணந்தாள் 6 கி.மீ.).கோயில் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

7.திருவாலங்காடு(சனி)

பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில்,திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்திருக்கோயில் சென்னை அரக்கோணம் ரயில் பாதையில் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அற்புதமான கோயில்.

மலைமகளைப் பாகம்  அமர்ந்தார் தாமே

வானோர் வணங்கப் படுவார் தாமே

சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே

சரணென் றிருப்பார்கட்கு  அன்பர் தாமே

பலபலவும் வேடங்க ளானார் தாமே

பழனை பதியா வுடையார் தாமே

சிலைமலையா மூவெயிலும் அட்டார் தாமே

திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

என்பது நாவுக்கரசர் தேவாரம். காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த இடம். இத் தலத்து இறைவன் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கின்றார். ஊர்த்துவ நடனம் என்று சொல்லப்படுகின்ற அற்புதமான நடனத்தை நடராஜப்பெருமான் காட்டியருளிய தலம் இந்த தலம். சனியினுடைய தோஷங்களும் சனியின் புதல்வன் ஆகிய மாந்தியின்  தோஷங்கள் நீங்குவதற்கான  அற்புதமான தலம் . சனிபகவானின் புதல்வனாகிய மாந்தி இத்தலத்து இறைவனை நோக்கி தவம் புரிந்து அருள் பெற்றார்.

எனவே, இத் திருக்கோயிலில் உள்ள மாந்தீஸ்வரர்  கோயிலில்பரிகார பூஜை செய்யும்பொழுது மாந்தியால்  ஏற்படுகின்ற தோஷங்களும், அவருடைய தந்தையாகிய சனிபகவானால் ஏற்படும் தோஷங்களும் விடுபடுகின்றன. இந்த கோயிலில்  ஐந்து சபைகளும் உண்டு இங்குள்ள இறைவனுக்கு வடாரண்யேஸ்வரர் என்று பெயர். லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். ரத்தின சபையின் பெரிய ஸ்படிக லிங்கமும், பெரிய மரகத லிங்கமும் உள்ளன.

இவற்றுக்கு நான்கு கால அபிஷேகம் நடை பெறுகின்றது. ரத்தின சபையின் விமானம் பொன் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இத்தலத்தின் வெளிப்பிரகாரத்தில் உள்ள மாந்தீஸ்வரர் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சனிபகவானின் இரண்டு புதல்வர்களில் ஒருவர் மாந்தி. மாந்தி வழிபட்ட சிவலிங்கத்திற்கு மாந்தீஸ்வரர் என்று பெயர். அவருக்கு சிறப்பு பரிகார பூஜைகள் இத்தலத்தில் செய்யப்படுகின்றன.

8. திருப்பாம்புரம் (ராகு, கேது)

கும்பகோணத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பாம்புரம் திருக்கோயில். பாம்பு தொழுத இத்தலம் திருப்பாம்புரம், “பாம்புரம்” எனப் பெயர் கொண்டது. திருஞானசம்பந்தர் தன் தேவாரப் பாடல்களில் இத்தலத்தைப் “பாம்புரநன்னகர்” என்று குறிப்பிடுகிறார்.

துஞ்சுநாள் துறந்து தோற்றமு மில்லாச்

சுடர்விடு சோதியெம் பெருமான்

நஞ்சுசேர் கண்டம் உடையஎன் நாதர்

நள்ளிருள் நடஞ்செய்யும் நம்பர்

மஞ்சுதோய் சோலை மாமயி லாட

மாடமா ளிகைதன் மேலேறிப்

பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும்

பாம்புர நன்னக ராரே.

சேஷபுரீஸ்வரர் கோயில் என்று அழைக்கிறார்கள். காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 59ஆவது சிவத்தலமாகும்.ஒரு முறை கயிலாயத்தில் இருந்த சிவபெருமானை, விநாயகப்பெருமான் வழிபட்டார். அப் போது ஈசனின் கழுத்தில் இருந்த பாம்பு, விநாயகர் தன்னையும் வணங்குவதாக நினைத்து கர்வம் கொண்டது. இதனால் கோபம் கொண்ட சிவன், உலகில் உள்ள பாம்புகள் அனைத்தும் தன்னுடைய சக்தியை இழக்கும் படி சபித்தார். இதனால்  நாக இனங்கள் அனைத்தும் தங்களின் சக்தியை இழந்து தவித்தன. இதையடுத்து அவர்கள் அனைவரும் ஈசனை வேண்டி பரிகாரம் கேட்டனர்.

அதற்கு ஈசன், “அனைவரும் பூலோகத்தில் உள்ள சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரம் சென்று, சிவராத்திரி நாளன்று என்னை வழிபட்டால் சாப விமோசனம் கிடைக்கும்” என்று அருளினார். பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.

மூலவர்:    சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர், பாம்பீசர், பாம்புரநாதர்

தாயார்:    பிரமராம்பிகை, வண்டுசேர் குழலி(வண்டார் குழலி)

தல விருட்சம்:வன்னி

தீர்த்தம்:    ஆதிசேஷ தீர்த்தம்

ராகுவும் கேதுவும் ஒரே உருவமாக இருப்பது இக்கோயிலின் சிறப்பு.இங்கு வழிபட்டால் ராகு-கேதுவால் ஏற்படும் தோஷம் அனைத்தும் நீங்கும். மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ளது பேரளம் என்ற ஊர். இங்கிருந்து மேற்கே 7 கிலோமீட்டர் தூரம் சென்றால், திருப்பாம்புரத்தை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் சாலையில் கற்கத்தி என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து தெற்கே 2 கிலோமீட்டர் சென்றாலும் திருப்பாம்புரம் திருத்தலத்தை அடைய முடியும். பேரளம் மற்றும் கற்கத்தியில் இருந்து திருபாம்புரம் செல்ல ஆட்டோ வசதி உள்ளது.

தொகுப்பு: முனைவர் ஸ்ரீ ராம்

Related Stories: