காலந்தோறும் ஆனை முகன்

யானை என்பது வியப்பின் குறியீடு. பிரம்மாண்டத்தின் சின்னம். பானை வயிறு என்பது செல்வம். சொகுசு, சிரிப்பு ஆகியவற்றின் அடையாளம். முதலாம் நூற்றாண்டில் இருந்து யானை முகம் கொண்ட மனிதனை நாம் பழங்காலச் சின்னங்களில் கண்டு வருகிறோம். யானை பழங்காலத்தில் ஓர் இனத்தின் குல முதல்வராக அல்லது குலக் குறியாக இருந்தது. அவர்கள் யானையை வணங்கினர். அதன் முகத்தை தமது குலத்தின் அடையாளமாகக் கொண்டனர்.

தங்களின் குகை ஓவியங்கள், சிலைகள், தலையலங்காரம், மகுடம் போன்றவற்றில் யானை முகத்தைத் தமது குலச் சின்னமாகக் கொண்டனர். போரஸ் என்ற மன்னனைத் தோற்கடித்த மாவீரன் அலெக்சாண்டர் தான் தோற்கடித்த மன்னனின் யானைச் சின்னம் கொண்ட மகுடத்தை தான் அணிந்து கொண்டான். சிவனின் காளை மாடு, மான், யானைத் தோலாடை, பாம்பு அணிமணிகள் போன்றவற்றை ஆராயும் சமூகவியல் அறிஞர்கள் அவை அனைத்தும் அவன் இமயமலையில் இருந்து படை, பரிவாரங்களுடன் புறப்பட்டு தெற்கே வரும் போது வழி நெடுகத் தோற்கடித்த இனக் குழுக்களின் குல மரபுச் சின்னங்கள் என்று தெரிவித்தனர்.

முதலாம் நுற்றாண்டில் இந்தோ கிரேக்க காசுகளில் யானை முகம் கொண்ட மனிதனின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. அக்காலகட்டத்தில் யானை முகக் கடவுள் என்பது ஆண்மையின் சின்னமாகப் போற்றப்பட்டது. வலிமையான கருப்பு நிற யானை ஐராவதமாக கருத்தளவில் வளர்ந்து அது தேவர்களுக்கு உரியது என்பதால் வெண்மை நிறம் கொண்டதாக போற்றப்பட்டது. இரண்டாம் நூற்றாண்டில் பவுத்த நேபாளத்திலும் [கணேஷினி, நர்த்தன கணபதியாக] இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் யானை முகக் கடவுளை வழிபடு தெய்வமாகப் பரப்பியது. நான்கு ஐந்தாம் நுற்றாண்டுகளில் குப்தர்கள் ஆட்சிக் காலத்தில் பிள்ளையார் முதன்மை கடவுளாக்கப்பட்டார். அதற்கு உதவியாக கணேச புராணம் போன்றவை எழுதப்பட்டன. சிலர் இப்புராணங்கள் பதினோராம் நுற்றாண்டுக்குப் பிந்தியவை என்பர்.

புத்தர் கோயில்களில் உள்ள விநாயகரை மகா பைணி என்று அழைத்தனர். தமிழகத்தில் ஏற்பட்ட சைவ சமய எழுச்சி தெய்வ நம்பிக்கை இல்லாத புறச்சமயங்களை நாட்டை விட்டு விரட்டியது. ஏழு அல்லது எட்டாம் நுற்றாண்டுகளில் பவுத்த சமயம் இந்தியாவை விட்டுப் புறப்பட்டு கிழக்கே பயணித்த போது சரஸ்வதி, பிரம்மா, எமன், இந்திரன் ஆகியோருடன் யானை முகக் கடவுளும் அதனுடன் பயணப்பட்டார். அவர் வியட்நாம், தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் வழிபடு தெய்வமானார்.

எட்டாம் நூற்றாண்டில் போதி தர்மர் தமிழ்நாட்டின் காஞ்சி மாநகரத்தில் இருந்து சீனாவுக்கு பவுத்த சமயத்தைப் பரப்பச் சென்ற போது அங்கும் பவுத்தக் கடவுளர் வழிபாடு தோன்றியது. அங்கிருந்து ஜப்பானுக்கும் கொரியாவுக்கும் பவுத்தமும்பிள்ளையாரும் சென்றனர். ஜப்பானில் காங்கி தென் என்று அழைக்கப்பட்ட விநாயகர் செல்வம் அருளும் காவல் தெய்வம் ஆனார். ஒன்பதாம் நுற்றாண்டுக்குப் பிறகு இந்தியாவில் கணபதி, விநாயகர், கணேசர் என்ற பெயர்களில் தனித் தெய்வம் ஆனார். அறு வகைச் சமயத்துள் ஒன்றான

காணாபத்தியம் தோன்றியது.

காணாபத்தியமும் பிள்ளையார் தத்துவக் குறியீடும்பிள்ளையார் அல்லது கணபதி என்று அழைக்கப்படும் கடவுள் காணாபத்தியம் என்ற சமயநெறி வழிபடு தெய்வமாகப் போற்றப்படுகிறார். இவர் குண்டலினிதத்துவத்தில் மூலாதாரமாக விளங்குகிறார். தரையில் கிடக்கும் இவரது சுருண்டதும்பிக்கை சுருண்டு கிடக்கும் மூலாதாரத்தைக் குறிக்கிறது. அங்கிருக்கும் மூலாக்கினியை சுழுமுனை வழியாக எழுப்பி சுவாத்திட்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, வழியாக மத்தகம் என்ற ஆக்ஞாவிற்கு கொண்டுபோக வேண்டும். இதனால் துரிய மெய்ஞான நிலையை அடையலாம்.

மூலாக்கினியை ஓம் என்னும் பீஜாட்சரத்தின் உதவியால் எழுப்ப வேண்டும். இதுவே நாம் பிள்ளையார் ஓம் என்னும் வடிவில் காணப் படுகிறார் என்று சொல்வதற்குக் காரணம் ஆகும். ஓம் என்னும் பீஜாட்சரத்தை ஜெபித்து மூலாக்கினியை எழுப்ப வேண்டும். பின்பு, அந்த அக்கினியால் சந்திர மண்டலத்தை இளக்கி அதனால்பெறப்படும் அல்லது உணரப்படும் அமிர்தத்தை நாடிகளில் நிரப்பி ஸ்வயம் பிரகாசமாக உணர வேண்டும். இதுவே சிவராஜ யோகம் எனப்படும். சந்திரனின் ஒளி போன்ற அமிர்த வெள்ளம் ஆகாய கங்கைபோல உடல் முழுக்க பிரவாகமாகப் பாயும்போது அதனை நாடி களில் நிரப்ப இயலாதவர் ஞானப் பித்தன் ஆகிவிடுவர்.விநாயகர் சிவராஜ யோகத்தை அல்லது ஆன்மிக அனுபவத்தைத் தர வல்லவர் என்பதை அவ்வையார் விநாயகர் அகவலில் விரிவாகப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதுன் காட்டி

ஆறா தாரத்து அங்குச நிலையும்

பேரா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே

இடை பிங்கலையின் எழுத்தறிவித்து

கடையில் கழுமுனை கபாலமும் காட்டி

மூன்று மண்டலத்து முட்டிய  துணின்

நான்றெழு பாம்பி னால் உணர்த்தி

குண்டலினி அதனில் கூடிய அசபை  

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து  

மூலாதாரத்து மூண்டெழு கனலை

காலால் எழுப்பி கருத்தறி வித்தே

அமுத நிலையம் ஆதித்த இயக்கமும்

காணாபத்தியம் என்னும் சமய நெறி கணபதி தந்தருளும் பரமானந்தத்தை தரிசிக்க வழியை எடுத்தியம்புகிறது. தலமொரு நான்கும் என்பது பக்தியினால் பக்தன் இறைவனிடம் சென்று சேரும் இடத்தை குறிக்கிறது. அவை சாலோகம், சாமீபம், சாரரூபம் மற்றும் சாயுச்சியம் ஆகும். இவை முறையே சைவ சமயக் குரவர்கள் தத்தம் நெறியால் அடைந்த இடமாகும். ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலத்தினால் ஏற்படும் மயக்கத்தை அறுப்பவர் பிள்ளையார். ஐம்புலன்களை அடக்கும் வித்தையை அறிவிப்பவர் விநாயகர்.  

ஆறு ஆதாரத்திலும் குண்டலினியை ஏற்றும் போது பேசும் உரையும் அற்ற மௌன நிலை சித்தியாகும். இந்நிலையை ‘சும்மா இரு சொல்லற’ என்றார், அருணகிரிநாதர். ஞானானுபவ முயற்சியில் வேறு எது குறித்தும் சிந்திக்கவும் ஆகாது. பேசவும் ஆகாது. சந்திர கலை மற்றும் பிங்கலையின் வழியாக வரும் மூச்சை அடக்கி மூச்சு பயிற்சி மூலமாக சுழுமுனை வழியாக மேலலேற்றி கபாலத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கு ஆனந்த திருச்சபை அல்லது சித் சபை உண்டு. அங்கு  சிவ சக்தி ஐக்கியம் நடைபெறும்.  

 

ஆயிரங்கால் மண்டபத்தில் ஆடும் நடராஜர்

சித் என்பது சித் சபை. இதனை ஆயிரம் இதழ் கமலம் என்ற குறியீட்டால் விளக்கினர். ஒவ்வொரு கோயிலிலும் இருக்கும் ஆயிரங்கால் மண்டபம். ஆயிரம் இதழ்

கமலத்தில் இறைவனும் இறைவியும் ஆடும் ஆனந்தத் தாண்டவத்தைக் குறிக்கும் வகையில் அங்கு நடராஜர் சிலை ஒன்றை அமைத்து கட்டப்பட்டுள்ளது.

சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி

சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவினுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்

என்றார் அவ்வையார்.

சத் என்பது ஆகாயத்தைக் குறிக்கிறது. இது கபாலத்தில் புருவ மத்தி ஆகும். இங்கு சதாசிவத்தைத் தரிசிக்கலாம். அடுத்து சித்தத்திலே [மனத்துள்] வைத்து சிவலிங்கத்தைத் தரிசிப்பது என்றால் இதயக்கமலத்தில் வைத்து பூஜிப்பதாகும். இவ்வாறு வணங்கினால் அணுவினுக்கு அணுவிலும் அப்பாலுக்கு அப்பாலும் உள்ளும் புறமும் ஆனந்தப் பரவசம் நிறைந்து இருக்கும் நிலையை அடையலாம். இதுவே விநாயகரை வணங்குவதன் மூலமாக கிடைக்கும் இறையனுபவம் ஆகும்.

குண்டலினியும் பிள்ளையாரும் மூண்டு எழும் கனலான குண்டலினியை ஏற்றி அமிர்தப் பிரவாகத்தை அடையபிள்ளையார்தான் வேண்டும் என்று இல்லை. அது ஒரு மூச்சுப் பயிற்சியின் விளைவால் கிடைக்கும் ஆனந்தப் பரவசம். சிவனை மனதில் நினைத்து இப்பயிற்சியை மேற்கொள்பவர் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பர். பிள்ளையாரைத் துதித்து இப்பயிற்சியை மேற்கொள்வோர் ஒரேழுத்து மந்திரமான ஓம் என்பதை உச்சரிப்பர். சக்தியை நினைத்துச் செய்யும் சாக்தர்கள் ஐயும் கிலியும் சவ்வும் என்ற மூவெழுத்து மந்திரத்தை உச்சரிப்பர். முருகனை நினைத்து தியானித்து இப்பயிற்சி மேற்கொள்வோர் ஆறேழுத்து சரவணபவவை சொல்லிக் கொண்டிருப்பர். இப்பரமானந்த நிலையைப்

பிள்ளையாரைத் துதித்தும் அடையலாம்.

பிள்ளையாருக்கு கோயில் ஏழாம் நுற்றாண்டில் நரசிம்ம பல்லவன் வாதாபியில் இருந்து பிள்ளையார் சிலையைத் தமிழகத்துக்குக் கொண்டு வந்தான். சில இடங்களில் பிள்ளையாருக்கென்று தனியாகவும் குகைகளில் சிற்பம் செதுக்கி வைத்தனர். பிள்ளையார்பட்டி குகைசிற்பம் கி.பி. ஏழாம் நுற்றாண்டை சேர்ந்தது தமிழகத்தின் பழமையான பிள்ளையார் குகைகோயில் ஆகும்.

பல்லவர் காலத்தில் முதலில் குகைகளில் யானை முகம் கொண்ட கடவுள் சிலைகள் செதுக்கப்பட்டாலும் இரண்டாம் நரசிம்ம பல்லவன் காலத்தில் குகைகளில் நரசிங்கர் கோயில்கள் உருவாயின. சிங்க முகம் கொண்ட தெய்வ உருவம் செதுக்கப்பட்டது. பவுத்த சமயம் யானை முகக் கடவுளை அதிகமாகப் போற்றியது. அதை விட்டுவிட இயலாது சைவ சமயம் பிள்ளையாரை தன்னுள் இணைத்துக் கொண்டது. எல்லோரையும் அரவணைத்துக் கொள்வது சைவ சமயத்தின் வெற்றி ஆகும்.

பவுத்தத்தில் பிள்ளையார்

பவுத்த சமயத்தில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த இரு ஆண் கடவுளர். இந்திரனும் விநாயகனும் ஆவர். நேபாளத்தில் விநாயகனை நர்த்தன வினாயகராகவும் கணேஷினி என்ற பெண் வடிவிலும் வழிபடுவதுண்டு. பவுத்த சமயம் பரவிய நாடுகளில் எல்லாம் இன்றும் விநாயகர் அதிர்ஷ்ட தேவதையாக வணங்கப்படுகிறார். அவர் கல்வி, செல்வம் காவல் தெய்வம் ஆவார். அதன் மிச்ச சொச்சம் தான் இன்று இங்கு தோப்புகரணத்தை நினைவாற்றலைப் பெருகச் செய்யும் உபாயமாக கற்றுக் கொடுப்பதாகும். பிள்ளையாருக்கு புத்திப்ரியா என்றொரு பெயரும் அவருக்குரிய 21 பெயர்களில் உண்டு. இதற்குக் காரணம் யாதெனில் அவர் புத்தி என்னும் பெண்ணின் பிரியத்துக்குரியவர் என்று பொருள் கொள்வாரும் உளர். இவருக்கு சித்தி புத்தி என்ற இரு மனைவியர் உண்டு.  

புராணங்களும் பிள்ளையாரும்

மத்ஸ்ய புராணம், கணேஷ புராணம், கணபதி அதற்வர்ஷிகா, பிரம்மாண்டபுராணம், அமரகோசம் ஆகியவை பிள்ளையாரை பற்றிய தகவல்களை நமக்கு தருகின்றன. புதிதாக புராணங்கள் எழுந்தபோது ரீதி என்றொரு மனைவியையும் சேர்த்துக் கொண்டனர். புத்தி அறிவுக்கும் சித்தி ஆன்மிகத்துக்கும் ரீதி செல்வத்துக்கும் உரியவள் ஆயினர். பிள்ளையாரை வணங்கினால் அவர் மனைவியர் மூவரும் கல்வி, செல்வம் ஆன்மிகம் ஆகிய மூன்றையும் அருள்வர். பிள்ளையாருக்கு சேமம், இலாபம் என்று இரு பிள்ளைகள் உண்டென்பதும் சுபம் இலாபம் என்றிரு பிள்ளைகள் உண்டென்று சொல்வதும் அவரை செல்வத்தின் கடவுளாகப் பவுத்த சமயத்தினர் வழிபட்டதன்

காரணத்தினால் என்பதை ஆய்ந்து தெளியலாம்.  

யோகம் செய்க

பிள்ளையார் வழிபாட்டில் குண்டலினி எழுப்புதலும் சிவராஜ யோகமும் முக்கியமானதாகும். செவியின் மடலைப் பிடித்து இழுப்பதும் நெற்றிப் பொட்டின் இருபுறமும் தட்டுவதும் அல்லது கொட்டுவதும் மூளை நரம்புகளை தூண்டும் பயிற்சியாகும். அதனை நன்குணர்ந்து தினமும்

பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் இப்பயிற்சியை வற்புறுத்த வேண்டும். இந்துக் கடவுளரின் கதைகளின் முக்கியத்துவத்தை தொடர்ந்து ஆராய்ந்தால் அவற்றின் மதிப்பும் முக்கியத்துவமும் தெரியவரும். மூட நம்பிக்கைகளுக்கு இடமளிக்காமல் இறை வழிபாட்டின் இன்றியமையாத தன்மையை தத்துவச் செறிவை இளந் தலைமுறையினர் உணரச் செய்ய வேண்டும்.

முனைவர் செ. ராஜேஸ்வரி

Related Stories:

>