காந்தாரி :காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்

“எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க நீங்கள் யார்?”

“அம்மா! உன்னைப் பெத்தவங்கம்மா நாங்க.சின்ன வயசுல இருந்து உனக்கு, எது எது நல்லதுன்னு பாத்துப்பாத்து செஞ்ச எங்களுக்கு, உனக்கு ஒரு நல்ல பையனாப்பாத்து கல்யாணம் செஞ்சு வெக்கணும்ங்கற எண்ணமோ, பொறுப்போஇருக்காதா? இல்லாட்டி இருக்கத்தான் கூடாதா?”“இவ்வளவு நாள் செஞ்சீங்கல்ல! அதுனால இப்ப நிம் மதியா இருங்க! எனக்கு எது நல்லது, எது கெட்டதுன்னு எனக்குத் தெரியும். என் கல்யாண விஷயத்துல, நீங்க தலையிடாதீங்க! என் விஷயத்துல அடுத்தவங்க தலையிடறது எனக்குப் பிடிக்காது”பெண்ணுக்கும் பெற்றவர்களுக்கும் இடையே நடந்த உரையாடல் இது.

பல தொலைக்காட்சி தொடர்களிலும்; பத்திரிகைகளில்  ‘குடும்பக் கதைகள்’ என்ற பெயரில் வரும் கதைகளிலும் பார்த்தும் கேட்டும் வந்த வசனங்கள்; அதாவது வார்த்தை விளையாட்டுகள் தான் மேலே நாம் பார்த்தவை. “குதி குதி என்பவர்கள் கூடக் குதிக்க மாட்டார்கள்” -என ஒரு பழமொழி உண்டு. இப்படி உணர்ச்சியைத் தூண்டி, வார்த்தை தூண்டில்களை வீசி,  வாழ்க்கையை திசை திருப்புவோர் ஏராளம். ஆற்று வெள்ளத்தில் சிக்கி அல்லல் படுபவனைப் பார்த்து, கரை மேல் நிற்பவன் கையைக்காலை ஆட்டி, வழி சொல்வதைப் போன்றவை  அவர்களுடைய செயல்கள்.

ஆனால்,  நமது முன்னோர்களான மஹான்களோ, வழிகாட்டுவதோடு மட்டும் அல்லாமல், கூடவே வந்து அவ்வப்போது வழி தவறும்போது, அறவுரையும் அறிவுரையும் சொல்லித் திருத்துவார்கள். அதோ! ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் நடக்கப்போகிறது. அதை விவரிக்கும் வியாச ஆசார்யார் அப்பெண்ணுக்கு அவ்வப்போது வழிகாட்டி, யாராலும் நிறைவேற்ற முடியாத அப்பெண்ணின் விருப்பத்தையும் நிறைவேற்றி இருக்கிறார்.

வியாச ஆசார்யார் சொல்வது இருக்கட்டும். அந்தப்  பெண்ணுக்குக் கல்யாணம் பேசப் போகிறவரும் ஓர் ஆசார்யார் தான். அவர் பீஷ்மாசார்யார்.  பீஷ்மாசார்யார் திருதராஷ்டிரனுக்கு மணமகள் தேடிக்கொண்டிருந்தார். அப்போது,காந்தார நாட்டு மன்னர் சுபலன்  என்பவருடைய மகளான காந்தாரியைப் பற்றிக் கேள்விப்பட்டார், பீஷ்மர்; உடனே விரிவாகவே விசாரித்து அறிந்தார்.

அதில் முக்கியமானது,“காந்தாரியானவள் சிவபெருமானை  வழிபட்டு,நூறு பிள்ளைகள் தனக்குப் பிறக்க வேண்டும் என  வரம் பெற்றிருக்கிறாள்” என்பதே.   அத்தகவலை அறிந்ததும் பீஷ்மர், காந்தார தேசத்து மன்னனிடம் பெண் கேட்டு ஒருவரை அனுப்பினார். போனவர் தகவல்களையெல்லாம் சொல்லி,

“திருதராஷ்டிரனுக்காகப் பெண் கேட்டு

வந்திருக்கிறேன். அவருக்குக் கண்பார்வை

கிடையாது; பிறவிக் குருடர்” என்றார்.  

காந்தார  மன்னரான  சுபலன் யோசித்தார்;“அழகு பிம்பமான நம் மகளை, போயும்போயும் பார்வையற்றவர் ஒருவருக்கா கொடுப்பது?”என எண்ணினார். ஆனால், அந்த எண்ணத்தை மற்றொரு யோசனை மாற்றிப் போட்டுவிட்டது. “திருதராஷ்டிரனுக்குப் பார்வையில்லா விட்டால் என்ன?  நல்ல குலத்தைச் சேர்ந்தவர்; பேரும்புகழும் பெற்றவர்; ஒழுக்க சீலர்.ஆகையால் அப்படிப்பட்ட திருதராஷ்டிரனுக்கு உத்தமியான நம் மகளைத் திருமணம் செய்து வைப்பதுதான் சரி; நல்லது” என்று சுபலன் தீர்மானித்து விட்டார். அவர் மனைவியும் அதை ஒப்புக் கொண்டாள்.

இருவருமாக, பெண்கேட்டு பீஷ்மரால் அனுப்பப்பட்டு வந்தவரிடம், தங்கள் ஒப்புதலைத் தெரிவித்தார்கள். தகவலை அறிந்தாள். காந்தாரி. உத்தமியான அவள்,“நம் பெற்றோர்கள் நம்மைத் திருதராஷ்டிரனுக்குக் கொடுப்பதாகத்  தீர்மானித்து இருக்கிறார்கள். அவருக்கோ பார்வை இல்லை. என் வருங்காலக் கணவரான அவர் பார்க்காத உலகத்தை, இனி நானும் பார்க்க மாட்டேன்” என்று நிச்சயித்து, ஒரு துணியை எடுத்து-அதைப் பலமடிப்பாக மடித்து,அதைத்  தன் கண்களில் கட்டிக்கொண்டாள்.

 அது மட்டுமல்ல!“எந்தக் காரணத்தை முன்னிட்டும் நான் என் கணவரை இகழாமல் இருக்க வேண்டும்”என்று தீர்மானமும் செய்து கொண்டாள்.   மகளின் மனோநிலையை சுபலன் அறிந்து கொண்டார்.அப்புறம் என்ன? காந்தாரிக்கும் திருதராஷ்டிரனுக்கும் அஸ்தினாபுரத்தில், திருமணம் முறைப்படி நடந்தது. காந்தாரியுடன் அவள் சகோதரனான சகுனியும் இலவச இணைப்பைப்போல அஸ்தினாபுரம் வந்தான். வேறு வினை வேண்டுமா என்ன? துரியோதனன் தவறுகள் அனைத்திற்கும் பெருங்காரணமானவன், இந்தச் சகுனிதான். இதேபோலத்தான் ராமாயணத்திலும், தசரதரை மணந்த கைகேயியுடன் கூனி வந்தாள்.

அயோத்தியில் ஏராளமான விபரீதங்கள் விளைந்தன. பார்வையற்றவரை மணந்து கொண்டு புகுந்தவீடு புகுந்த காந்தாரி, தன் வார்த்தைகளாலும் நடவடிக்கைகளாலும் அனைவர் மனங்களையும் கவர்ந்தாள். கணவன் வார்த்தைக்கு மாறாக, நடந்து விடுவோமோ என்று நடுங்கினாள்; கணவன் மனம் கோணாதவாறு நடந்து கொண்டாள். என்ன நடந்து என்ன செய்ய?

உத்தமியான காந்தாரி, உலகே போற்றும் மகானிடம் இருந்து ஏச்சும்பேச்சும் வாங்கப் போகிறாள்;விபரீதம் விளையப்போகிறது. ஏன்? எப்படி?

காந்தாரி கருவுற்றிருந்தாள்.நல்ல குழந்தைகளாக நூறு குழந்தைகள் பிறக்க வேண்டிய காலம். ஏற்கனவே சிவபெருமானை வழிபட்டு, தனக்கு நூறு பிள்ளைகள் பிறக்க வேண்டும் எனக் காந்தாரி வரம் பெற்றிருந்ததாகப் பார்த்தோம்.

வியாசாரியார் வேறு, அப்படியே பிறக்கும் என்று ஆசியும் வழங்கியிருந்தார். அந்த வரமும் ஆசியும் உத்தமியான காந்தாரியாலேயே சிதறப் போகின்றன. ஆம்! சிதறித்தான் போகப் போகின்றன. காந்தாரி நிறைமாதமாக இருந்த அந்த நேரத்தில், ‘குந்திதேவிக்குப் பிள்ளை பிறந்திருக்கிறது என்ற தகவல் காந்தாரிக்குத் தெரிந்தது. அதே விநாடியில் அவள் உள்ளத்தில் நுழையக்கூடாத ஒன்று நுழைந்து விட்டது. அதன் காரணமாகக் காந்தாரி செய்யக் கூடாத ஒன்றைச் செய்தாள்.அது என்ன?

“ஆ! குந்திக்குக் குழந்தை பிறந்து விட்டதா?” என்ற காந்தாரி, குந்தியின் நிலையை எண்ணி மிகவும் பொறாமைப்பட்டாள். ஓங்கி ஓங்கி வயிற்றில் இடித்துக் கொண்டாள்.  உடனே, காந்தாரியின் வயிற்றில் இருந்து, இரும்பு உருண்டையைப்போல ஒரு மாமிச உருண்டை வெளிப்பட்டது. அதைப் பார்த்ததும் காந்தாரியின் மனமும் முகமும் சுருங்கியது; அந்த மாமிசப் பிண்டத்தை எறிந்து விட ஏற்பாடு செய்தாள். அதே நேரத்தில் வியாசர் அங்கு வந்தார்; காந்தாரியைக் கடிந்து கொண்டார்;“காந்தாரி! என்ன காரியம் செய்து விட்டாய்?” என்றார்.

காந்தாரி எதையும் மறைக்கவில்லை; நடந்ததையெல்லாம் அப்படியே விவரித்தாள் வியாசரிடம்; “சுவாமி! குந்திதேவிக்கு அற்புதமான குழந்தை பிறந்திருக்கிறது என்பதைக் கேள்விப்பட்டவுடன், என்னால் தாங்க முடியவில்லை. அதைக்கேட்டு, என் வயிற்றில் இடித்துக் கொண்டேன். நான். நீங்கள் எனக்கு நூறு குழந்தைகள் பிறக்கும் என ஆசி கூறினீர்கள். ஆனால், அதற்குப் பதிலாக இதோ! இந்த மாமிசப் பிண்டம்தான் பிறந்திருக்கிறது” என்றாள்.

அதற்கு வியாசர்,“காந்தாரி! நான் சொன்னது உண்மை. விளையாட்டிற்காகக்கூட, நான் பொய் சொன்னதில்லை.

நூறு குடங்களில் சீக்கிரமாக நெய்யை நிரப்ப வேண்டும். இந்த மாமிசப் பிண்டத்தைக் குளிர்ந்த நீரால் நனைக்க வேண்டும்” என்றார்.  அதன்படியே ஏற்பாடுகள் செய்யப்பட, காந்தாரியின் வயிற்றிலிருந்து வெளிப்பட்ட மாமிசப் பிண்டம்,குளிர்ந்த நீரால் நனைக்கப்பட்டது. உடனே, அந்த மாமிசப்பிண்டம், கட்டைவிரல் அளவுள்ள நூற்று ஒரு (101) பங்குகளாகப் பிரிந்தன.

அவற்றையெல்லாம் தனித்தனியாக நெய் நிரப்பப்பட்ட, நூற்று ஒரு குடங்களில் போட்டு வரிசையாக வைத்தார் வியாசர்.   அதன்பிறகு காந்தாரியிடம்,“காந்தாரி!நடந்ததையெல்லாம் விடு! இந்தக் குடங்களை எல்லாம் பாதுகாப்பான இடத்தில் பத்திரமாக வைத்துப் பாதுகாக்கச் செய்! நாளாவட்டத்தில் ஒவ்வொரு குடத்தில் இருந்தும், ஒவ்வொரு பிள்ளை உருவாகும்” என்று சொல்லி எச்சரித்து விட்டு, வியாசர் தவம்செய்யப் போனார்.

அவர் வாக்குப்படியே பிறந்தவர்கள்தான், துரியோதனன் முதலான நூறு பேர்கள். நூற்று ஒன்றாவதாக ‘துச்சலை’ என்ற பெண் குழந்தையும் உருவானாள். ( அந்தத் துச்சலையின் கணவன்தான் ‘ ஜயத்திரதன்’ என்பவன்).நடந்த இந்த நிகழ்வுகளை எல்லாம் அப்படியே சொல்லி, இன்றைய விஞ்ஞானமும் நம்மை எச்சரிக்கிறது.

கருவுற்ற பெண்கள் கண்டகண்ட எண்ணங்களுக்கு, மனதில் இடம் கொடுக்கக்கூடாது; வெறுப்பு ,அதிர்ச்சி தரும் நிகழ்ச்சிகளைப் பார்க்கக்கூடாது; கருவுற்ற பெண்களின் கோப-தாபங்கள் , பொறாமை முதலான தீய உணர்ச்சிகள் என எல்லாமே, அவர்களின் கருவிலுள்ள குழந்தையைப் பாதிக்கும் என்றெல்லாம், இன்றைய விஞ்ஞானம் பலவாறாகப் பாடம் நடத்துகிறது. அரும்பெரும் இத்தகவல்களை, அன்றே சொன்னார் வியாசர்; சொன்னதோடு மட்டுமல்லாமல் கூடவே இருந்து வழியும் காட்டியிருக்கிறார். துரியோதனன் முதலானோரின் பொறாமை குணங்களுக்குக் காரணம், அவர்களின் தாயான காந்தாரியின் பொறாமைக்குணமே காரணம்.

அற்றனள் துயரம் எல்லாம்

அருந்தவப் பயனால் மைந்தர்ப்

பெற்றனள் குந்தியென்னும்

பேருரை கேட்ட அன்றே

உற்றனள் பொறாமை கல்லால்

உதரம் உட்குழம்புமாறு

செற்றனள் அது தனது கேடும்

ஆக்கமும் சிந்தியாதாள்

(வில்லி பாரதம்)

சற்று நேரம் பொறாமையெனும் தீய குணத்திற்கு ஆட்பட்டு விபரீதமாகச் செயல்பட்டாலும், அதன்பிறகு காந்தாரி தன் பழைய நிலைக்குத் திரும்பி விட்டாள்; அதாவது நற்குணங்களில் செயல்படத் தொடங்கி விட்டாள். அந்த நற்குணம் சூதாட்டசமயத்தில் வெளிப்பட்டது.

பஞ்ச பாண்டர்கள் தங்கள் செல்வங்கள்-ராஜ்ஜியம் - முதலான அனைத்தையும் இழந்து; தாங்கள் அடிமையாகிக் கூடவே திரௌபதியையும் இழந்து; துச்சாதனன் திரௌபதிக்கு மானபங்கம் இழைக்க முயல, கண்ணன் அருளால் திரௌபதி காப்பாற்றப்பட்டாள். அதன்பின் நடந்தவற்றையெல்லாம் அறிந்த திருதராஷ்டிரன் திரௌபதியை அழைத்து,“அம்மா! நடந்ததை எல்லாம், என் பிள்ளைகள் செய்தவற்றையெல்லாம்,எனக்காக மன்னித்து விடு!” என்று வேண்டினார்; கூடவே திரௌபதியையும் பஞ்சபாண்டவர்களையும் அடிமைத் தளையிலிருந்து விடுவித்தார்.

அது மட்டுமல்ல! தர்மரிடம் நல்வார்த்தைகள் சொல்லி, சூதாட்டத்தில் தர்மர் இழந்த செல்வங்கள் - ராஜ்ஜியம் என அனைத்தையும் திருப்பியளித்தார் திருதராஷ்டிரன்; அத்துடன்,“தர்மா! நடந்தது எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதே! நீங்கள் அனைவருமாகத் திரும்பிப்போய், நல்லவிதமாக ஆட்சி செய்து வாருங்கள்!” எனச் சொல்லி வழியனுப்பி வைத்தார்.

அதற்குள் அத்தகவல் துரியோதனன், துச்சாதனன், சகுனி, கர்ணன் எனும் நால்வருக்கும் தெரிந்தது.  உடனே,  நால்வருமாகத் திருதராஷ்டிரனிடம் ஓடினார்கள்;“பாண்டவர்களை விட்டு வைத்தால், நம் அனைவரையும் அழித்து விடுவார்கள் அவர்கள். என்னவோ, நல்லது செய்வதாக நினைத்து, கௌரவர்களின் அழிவிற்கு வழிவகுத்து விட்டீர்கள் நீங்கள்” எனப் பல விதங்களிலும் திருதராஷ்டிரன் மனதைக் கரைக்க முயன்றார்கள்.

திருதராஷ்டிரனோ,“வேண்டாம்! பாண்டவர்களுக்கு நாம் செய்த கொடுமைகள் போதும். துரியோதனா! அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக இரு!” என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆனால்,  துரியோதனனோ,“தந்தையே! நீங்கள் அர்ஜுனன் பராக்கிரமத்தையும் பீமன் பலத்தையும் உணராமல் பேசுகிறீர்கள்.  அர்ஜுனனையும் பீமனையும் நினைத்தால், எனக்குப் பயத்தால் தூக்கம் வரமாட்டேன் என்கிறது. எந்தவிதத்திலும் சரி! அவர்களை விட்டு வைக்கக்கூடாது”  என்றான் அழுத்தமாக.

துரியோதனன் வார்த்தைகளுக்குதுச்சாதனன் முதலான மூவரும் ஒரேமாதிரியாகப் பேசி உரமேற்றினார்கள். எறும்பு ஊர கல்லும் தேயும் என்பார்களே; அது உண்மையானது. பிள்ளைப் பாசத்தால், திருதராஷ்டிரன் அவர்கள்  சொற்படி நடக்கத் தீர்மானித்தார். அனைவருமாகக் கூடி, புதியதாக ஓர் ஒப்பந்தம் தீர்மானித்தார்கள். அதன்படி, மறுபடியும் சூதாட்டம் நடத்த வேண்டும். அதில் தோற்பவர்கள் பன்னிரண்டு வருடகாலம், காட் டில் வாழ வேண்டும்;ஒருவருட காலம், யார் பார்வையிலும் படாமல் மறைந்து வாழ வேண்டும்; மறைந்திருக்கும் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டால், மறுபடியும் வனவாசம் செல்ல வேண்டும் - என்பதே அவர்கள் எடுத்த தீர்மானம்.

அந்தத் தீர்மானத்தை,அங்கே சபையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த பீஷ்மர்உட்பட அனைவரும்,“வேண்டாம்! வேண்டாம்! சூதாட்டம் வேண்டாம்! ஒற்றுமையாக இருங்கள்!” என்றார்கள். ஆனால்,  பிள்ளைப்பாசத்தின் காரணமாக, அவர்கள் சொன்னது எதையுமே ஏற்காத திருதராஷ்டிரன், போய்க் கொண்டிருந்த பாண்டவர்களை மறுபடியும் அழைத்துவரச் செய்தார். அதுவரை நடந்த அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த காந்தாரி,  அப்போது குறுக்கிட்டாள்; திருதராஷ்டிரனிடம் பேசத் தொடங்கினாள்;“நான் சொல்வதைக் கேளுங்கள்!

மகாஞானியாகிய விதுரர்,  துரியோதனன் பிறந்தபோதே சொன்னார்; ‘இவன் குலத்தைக் கெடுப்பவன். இவனைப் பரலோகத்திற்கு அனுப்பி விடுங்கள்; அதாவது கொன்று விடுங்கள்’ என்று சொன்னார். இந்தத் துரியோதனன் பிறந்தபோது, நரிபோல ஊளையிட்டான்  என்பது உங்களுக்கே தெரியுமே!

“துரியோதனனால்தான், நம் குலம் முழுவதும் அழியப்போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்! தவறு செய்யாதீர்கள்! விவேகமில்லாத உங்கள் பிள்ளைகள் சொல்வதைக் கேட்காதீர்கள்! குலம் அழியும் கொடிய செயலுக்கு நீங்கள், காரணமாக இருக்க வேண்டாம்.

“கட்டின அணையைப்போய், யாராவது இடிப்பார்களா?

அணைந்த நெருப்பை,அறிவாளி ஊதுவானா? குந்தி பிள்ளைகளுக்குக் கோபம் ஊட்டியவன், தப்பிப் பிழைக்க முடியுமா? எந்தவகையில் பார்த்தாலும் சரி! பெரியவர்கள், அறிவில்லா சிறுபிள்ளைகளின் பேச்சைக் கேட்கக் கூடாது.

“குலத்தைக்கெடுக்கும் துரியோதனனை விலக்கி விடுங்கள்! பிள்ளைப் பாசத்தால் அவ்வாறு செய்யாமல்போனால், குலமழிய நீங்களே காரணமாகப் போய் விடுவீர்கள். நீதியையும் தர்மத்தையும் விடாதீர்கள்!”என்று கெஞ்சாத குறையாகச் சொன்னாள் காந்தாரி. திருதராஷ்டிரன் கேட்கவில்லை.விளைவு? கௌரவர்களைஅழிவில்கொண்டுபோய் விட்டது.

(தொடரும்)

பி.என்.பரசுராமன்

Related Stories: