ஐதராபாத்: ‘நேஷனல் கிரஷ்’ என்று ரசிகர்களால் சொல்லப்படும் ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதை சமீபத்தில் ஒப்புக்கொண்டார். மேலும், ராஷ்மிகா மந்தனாவுடன் டேட்டிங்கில் இருப்பதை கடந்த வாரம் விஜய் தேவரகொண்டா ஒப்புக்கொண்டார். ஆனால், எப்போது திருமணம் செய்வார்கள் என்பது பற்றி இருவருமே வாய் திறக்கவில்லை.
கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் கணிசமான படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் மனைவி வேடத்தில் நடித்துள்ள ‘புஷ்பா 2: தி ரூல்’ என்ற படத்தின் வெளியீட்டை அதிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார். பான் இந்தியான படமான இது, வரும் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் முதல் பாகத்தில் நடிக்க 2 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியிருந்த ராஷ்மிகா மந்தனா, 2ம் பாகத்தில் நடிக்க 10 கோடி ரூபாய் வரை வாங்கியுள்ளதாகவும், தற்போது இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் அவரும் ஒருவர் என்றும் தகவல் பரவி வருகிறது.
இதுபற்றி ராஷ்மிகா மந்தனாவிடம் கேட்டபோது, ஆவேசத்துடன் மறுத்தார். அவர் கூறுகை யில், ‘எனது சம்பளம் பற்றி வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை. அது எல்லாமே வதந்தி. ‘புஷ்பா 1: தி ரைஸ்’ படத்தில் சிறப்பாக நடித்த அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது கிடைத்தது. 2ம் பாகத்தில் நடித்துள்ள எனக்கு தேசிய விருது கிடைக்குமா என்று கேட்கிறார்கள். ஒருவேளை, கிடைத்தாலும் கிடைக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.