அச்சு முறுக்கு

தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 1 கிலோ,

சர்க்கரை - 300 கிராம்,  

நெய் - 3 ஸ்பூன்,

தேங்காய் - 1,

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை :

முதலில் தேங்காயை துருவி கெட்டியாக‌ பாலெடுத்துக் கொள்ளவும். பச்சரிசியை நனைய‌ வைத்து டவலில் ஈரத்தை போக்கி, நீர் விடாமல் மிக்சியில் நைசாக‌  பொடி செய்யவும். ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி நன்றாக கலக்கிக் கொள்ளவும். அத்துடன் தேங்காய் பால் மற்றும் சர்க்கரை சேர்க்கவும். அதில் மாவை  சேர்த்து நன்கு கலக்கவும். தோசை மாவு பதத்தில், சரியான பக்குவத்தில் இருக்க வேண்டும். கெட்டியாக இருந்தால் முறுக்கு கடினமாக இருக்கும். நீர்க்க  இருந்தால் முறுக்கு மொறுமொறுப்பாக வரும். கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

அதில் முறுக்கு அச்சினை முக்கி சூடாக்கவும். அச்சு சூடாக இருந்தால்தான் மாவு அதில் ஒட்டும்.  சூடான‌ அச்சை மாவில் முக்கால் பாகம் அமிழ்த்தி எடுக்கவும்.  முழுவதும் அமிழ்த்தினால் முறுக்கு அச்சில் இருந்து கழன்று விழாது. கவனம் தேவை. மாவுடன் கூடிய அச்சை எண்ணெயில் அமிழ்த்தவும். மாவு சற்று வெந்ததும்  முறுக்கானது அச்சில் இருந்து பிரிந்து வந்துவிடும். முறுக்கு சிவந்து வந்ததும் எடுக்கவும். இதே போல் எல்லா மாவையும் முறுக்காக சுட்டு எடுக்கவும். சட்டியின்  அளவைப் பொறுத்து ஒரே நேரத்தில் இரண்டு மூன்று என்று பொரித்து எடுக்கலாம்.

Related Stories: