நெஞ்சத்து அழுக்கை நீக்கும் தாயே

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் - 36

உடைத்தனை வஞ்சப் பிறவியை உள்ளம் உருகும் அன்பு படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே

அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே பாடல் எண் - 27

வழிபாட்டின் பெயரில் எந்த ஒரு செயலை செய்தாலும் செய்கின்ற நம் அனைவருக்கும் ஐந்து கேள்விகள் அடுத்தடுத்து எழும்.

1, நாம் எதை செய்யவேண்டும் 2, எதை செய்யக்கூடாது, 3, செய்தது சரிதானா, 4, நினைத்த பயனை அது வினைவிக்குமா?, 5, செய்ய வேண்டிய வரிசையாது? போன்ற பலவாகும். இவைகளை எல்லாம் யாரை வைத்து உறுதிசெய்து கொள்வது, சொல்லுகிற நபர் சரியாகத்தான் சொல்லுகிறாரா என்று நாம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும். ஒரே விடை அனுபவம் தான். அனுபவத்தை பெற்று தராத எந்த ஒரு செயலும் சமய சாதனமாக ஆகமுடியாது. அதைக் கொண்டே நாம் எடை போட்டுக்கொள்ள வேண்டும். ஆன்மிகத்தை பொறுத்தவரை விஞ்ஞானம் போல் காரணகாரிய அடிப்படையில் அமைந்து தெளிவான தீர்வுகளில்லை என்று தான் நினைக்கிறோம். ஆனால் அபிராமிபட்டரோ, ஏனைய அருளாளர்களோ அவ்வாறு கூறாமல், இதைச் செய் என்று கட்டளையிட்டு இதைச் செய்ய வேண்டும் என்று மட்டும் சில வார்த்தைகளை சொல்லிச் சென்றிருக்கின்றனர்.

அந்த வகையில் நாம் முதன்மையாக நம்புவது வேதம், ஆகமம், என்ற சாத்திரங்களேயாகும். என்றாலும் இந்த சாத்திரங்களை சரியாக பொருள் பட புரிந்து கொள்கிறோமா என்றால் அதற்கும் சரியான விடையில்லை இம்மாதிரி சூழலில் தான் ‘‘உடைத்தனை’’ என்ற இந்த பாடல் மிக சரியாக நமக்கு உதவுவது புரியும், இது அபிராமிபட்டர், அபிராமி, அனுபவம் இவை எல்லாவற்றையும் ஒருங்கே கொண்டுவந்து சேர்க்கும். இனி பாடலுக்குள் நுழைவோம் உடைத்தனை என வரிசையிலேயே பொருள் காண விழையாமல் சற்று முன்பின்னாக மாற்றி அமைத்து பொருள் காண்பதென்பது இப்பாடலை புரிந்து கொள்வதற்கு பேருதவியாக அமையும்.

1) நின் அருள் ஏதேன்று சொல்லுவதே.

2) நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை.

3) பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை.

4) உள்ளம் உருகும் அன்பு படைத்தனை.

5) உடைத்தனை வஞ்சப் பிறவியை என்ற வகையில் புரிந்து கொள்ள முயல்வோம்.

அல்லையேல் அவற்றிற்கு உண்டான தொடர்பு புரியாது அடிப்படை தெரியாது போக வாய்ப்புள்ளது இனி ஒவ் ஒன்றாய் காண்போம்.

‘‘நின் அருள்’’ ஏதேன்று’’ ‘‘நின்’’ என்கின்ற வார்த்தையால் உமையம்மையை குறிப்பிடுகின்றார். ‘‘நின் அருள்’’- என்பதால் சாக்த ஆகமங்கள் உமையம்மையை வணங்குவதனால் ஏற்படும் பயனைக் குறிப்பிடுகின்றன.‘‘ஏது’’ என்ற சொல் இருவகையில் பொருள் கொள்ளத் தக்கது வடமொழியில் ஹேது - என்ற வார்த்தையின் தமிழ் ஒளி பெயர்ப்பே ஏது என்பதாகும். ஹேது என்பதற்கு காரணம் என்பது பொருள்.

உமையம்மையின் அருளைப் பெறுவதற்கு காரணமாக சொல்லப்படுவது எதுவோ அதையே அபிராமி பட்டர் நின் அருள் ஏதென்று சொல்லுவதே’’ என்பதாக குறிப்பிடுகிறார்.

1. இறைவியினுடைய அருள் ஆற்றல்

2. ஆன்மாவிற்கு உண்டான அழுக்கின் அளவு (மலபரிபாகம்)

3. குருவருளின் ஆற்றல்( தீக்ஷா விலாசம்)

4. இறையன்பு விளைத்தல்

5. உடல் பற்று அறுத்தல்

6. உயிர் உணர்வு அடைதல்

7. இறை அனுபவமாதல்

8. வீடுபேறு (மோட்ஷம்)

இந்த எட்டிற்கும் அஷ்டோபகாரம் என்று பெயர் ( எண்வகை உதவி) இறைவியால் ஆன்மாக்களுக்கு செய்யப்படுவது. இந்த எண்வகை உதவியையே நான்( உலக உயிர்கள் அனைத்தும்) இறையருளை பெறுவதற்குக் காரணமாக அமைந்தது. இந்த காரணத்தையே ‘‘ஏது’’- (ஹேது) என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். தமிழில் ‘‘ஏது’’ என்பதை முயற்சி என்கிறது தமிழ் பேரகராதி. மேற்கண்ட அஷ்டோப காரத்தை பெற முயற்சிப்பவரே அருளைப் பெறுவதற்கு உரியவராவர்.

வழக்கு சொல்லில் ‘‘ஏது’’ என்பது உணர்ச்சியின் வெளிப்பாடாக (வலியுறுத்தலாக) பயன்படுத்தப்படுகின்றது. உதாரணமாக ‘‘என்னென்று சொல்றது ஏதுன்னு சொல்லுறது’’ என்ற வாக்கியத்தில் ஏது என்ற சொல்லானது வியப்பை சூட்டுவதாக அமைகிறது.

‘‘உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம்’’-2

‘‘மொழிக்கும் நினைவிற்கும் எட்டாத’’ -87

‘‘அதிசயமான வடிவுடையாள்’’- 17

என்கின்ற சொற்களை எல்லாம் இந்த ‘‘ஏது’’ என்ற சொல்லால் மேலும் வலியுறுத்துகிறார் அபிராமிபட்டர். சொல்லுவதே - என்ற சொல்லின் கடைசி எழுத்தான த்+ஏ= தே ஏகாரம், வியப்பு, தனிநிலை, இரண்டையும் குறிக்கும் தன்மை வாய்ந்தது. உமையம்மையால் பெற்ற அருளை வேறுயாராலும் தர இயலாது தன்னிகரற்றது என்பதையும், இறையருள் சக்தியாலன்றி இதற்கு முன்னும், மானுட முயற்சியாலும், அறிய முடியாததாக (வியப்பாக) இருப்பது, என்று உமையம்மையின் இறையருள் தன்மையின் உயர்வை விளக்கிச் சொல்கிறார்.

‘‘நின் அருள் ஏதென்று சொல்லுவதே’’ என்ற வாக்கியத்தால் அனைத்திற்கும் காரணமானதும், விளக்க முடியாததும், வியப்பானதும் என்பதை அறிந்துணர்ந்து அனுபவத் தன்மையின் வெளிப்பாட்டையே இச்சொல்லால் விளக்கி கூறுகிறார்.

‘‘நெஞ்சத்து அழுக்கை யெல்லாம் நின் அருள் புனலால் துடைத்தனை’’

சாக்த தந்திரத்தை பொறுத்தவரை உமையம்மையானவள் அடியவர்களுக்கு தன் அருளை குருவடிவமாகவே வந்து வழங்குவாள். மேலும் குருவானவர் உமையம்மையின் அருளை திரு (மந்திரம்) வடிவாகவே வழங்குவார். முடிவாக உமையம்மையின் அருள் சக்தியானது படைத்து, காத்து, அழித்து, மறைத்து, அருளல் என்ற ஐந்து செயல்கள் கொண்டு ஒன்பது வாயில்களையுடைய இந்த உடலில் அனுபவத்தை விளை வித்தலையே இறைவினவள் செய்கிறாள் என்கிறது

‘‘அழுக்கை யெல்லாம் துடைத்தனை’’

‘‘நெஞ்சத்து அழுக்கையெல்லாம்

துடைத்தனை’’

‘‘நின் அருட்புனலால் துடைத்தனை’’

‘‘ நின் அருட்புனலால் நெஞ்சத்து அழுக்கையெல்லாம் துடைத்தனை’’ என்று வரிசைப் படுத்திக் கொள்ளவேண்டும்.

‘‘அழுக்கை யெல்லாம் துடைத்தனை’’ என்பதற்கு உடலுக்கு அழுக்கு- நோய், உள்ளத்திற்கு அழுக்கு- தீயகுணம், அறிவிற்கு அழுக்கு- அறியானம், ஆன்மாவிற்கு அழஉக்கு- வினைபயன், இந்த நால்வகை அழுக்கையும் உமையம்மையானவள் ஆரோக்கியம் தருகிற மருந்தாகவும், (அருமருந்தே -25) குணக் குன்றே-95 என்று உள்ள நலனை தருகிறவளாகவும் நியாமையை நீக்குகிற ‘‘என் அறிவாய்’’- 11 கரும நெஞ்சால் 3 என்பதால் கர்மாவை அழிப்பவளாகவும். உமையம்மையே இருக்கிறாள் என்பதையும் இதையே ஆன்மாக்களுக்கு வினையின் பயனை அளிப்பவளாகவும் இருக்கிறாள், என்கிறது அதையே துர்கா சூக்தம் ‘‘கர்ம பலே சுஜீஷ்டாம்’’ என்ற வரியால் அறியலாம். இந்த நான்கையுமே ‘‘அழுக்கையெல்லாம் துடைத்தனை’’

‘‘நெஞ்சத்து அழுக்கையெல்லாம் ’’ என்பதை மனதில் தோன்றுகிற ‘‘ஷட்வர்கம்’’ என்று வடமொழியில் கூறப்படும் ஆசை (காமம்) சினம் (குரோதம்) பொருள் பற்று (லோபம்) மயக்கம் (மோகம்) பொறாமை (மாச்சர்யம்) அகம்பாவம்(மதம்) என்ற தீய குணங்களை நெஞ்சத்து அழுக்கை யெல்லாம் துடைத்தனை என்ற வார்த்தையால் போக்கினாள் என்கிறார்.

ஆசை கடலுள் அகப்பட்டு - 32

இதுவோ உன்தன் மெய்யருளே - 57 என்று சினந்து கூறுகிறார்

எனது உனது என்று இருப்பார் சிலர் - 81

இது போன்ற பாடல்களில் அறுவகை பகையைப் பற்றி வெளிப்படுத்தியிருப்பது மேலும் உறுதி செய்கிறது.

- முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

Related Stories: