ஐம்புலன்களும் உமையையே நோக்கட்டும்..

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் - 35

மறைகின்ற வாரிதியோ - (பாடல்-20)

கரும நெஞ்சால் -  (பாடல்-3)

இந்த மூன்றையும் இணைத்த வடிவத்தை ‘காளி’ என்றாள். இந்த காலத்தின் வழி ஏற்படுகின்ற ‘நிலை மாற்றம் அற்று’ போவது ‘அழித்தல்.’ பால் தயிர் ஆவதும், தயிர் வெண்ணையாவதும், வெண்ணை நெய்யாவதும், ஒன்றிற்கு ஒன்று அடிப்படையானதும், மாறுபாடுடையதுமாகும். அந்த வகையில் மாற்றமே அழிவாக சொல்லப்படுகிறது. கால நாசத்திற்கு முற்றிலும் எதிரானதே ருத்ர நாசமாகும். இந்த மூவகை அழிவையும் சேர்த்தே ‘அழித்தும்’ என்ற வார்த்தையால் குறிப்பிட்டார்.

‘திரிபவராம்’ - திரி என்கின்ற சொல்லானது யாதொரு கொள்கையுமின்றி, பயனுமின்றி ஒரு செயலை இயல்பாகச் செய்வதாகும். அப்படி கொள்கையாலும், பயனாலும் ஏற்படும் விளைவே அதைச் செய்பவருக்கு மாற்றத்தை ஏற்படுத்தாதபோது அச்செயலையும் திரி என்ற வார்த்தையாலேயே குறிப்பிடுவர். உதாரணமாய் ஒரு குழந்தையின் செயலையும், ஒரு மனநிலை சரியில்லாதவரின் செயலையும் திரிவது என்ற சொல்லால் குறிப்பிடலாம்.

அதுபோல் இறைவன் இந்த உலகினை படைக்கிறார், காக்கிறார், அழிக்கிறார். அது கொள்கையில்லாதது அப்படி படைப்பதனால் பயனைத் தராது. கொள்கையும், பயனுமில்லாது இயல்பாகச் செய்யப்படுவது. இந்த கூற்று சரிதான் என்று யோசித்தால் இறைவனை பைத்தியமாகவும் அவன் செயலை குழந்தைத் தன்மை உடையதாகவுமே சிந்திக்கத் தோன்றும். அவ்வாறு இல்லை உயிர்களுக்கான உடலை இறைவன் படைத்தும், காத்தும், அழித்தும் செய்கின்ற செயலானது அந்த உடலைப் பெறுகின்ற ஆன்மாவுக்கு பயனுடையதாக ஆகும். இறைவனுக்கு பயனுடையதாக ஆகாது. அந்த மூன்று செயலைச் செய்ய வேண்டும் என்ற கொள்கையில்லாமல், முயற்சி இல்லாமல் இயல்பாகவே செய்கிறான் இறைவன்.

இது எவ்வாறு எனில் ஒரு தீ சுடரில் சுடுகின்ற தன்மை, அழிக்கின்ற தன்மை, ஒளிர்கின்ற தன்மை இவையாவும் இயல்புகளேயாம். அதை யாரும் ஏற்படுத்தவில்லை. இறைவன் தன் இயல்பால் ஏற்றுகிறானேயன்றி கொள்கையால், முயற்சியால் அல்ல அதனால்தான் அபிராமி பட்டர் ‘திரிபவர்’ என்ற வார்த்தையால் குறிப்பிட்டார். இந்த திரிபவர் என்ற சொல்லால் ஆகமங்கள் மூன்று மூர்த்திகளை குறிப்பிடுகிறது. பிக்ஷாடனர், கங்காளர், அகோராஸ்திரர். இந்த மூன்று மூர்த்திகளுமே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய செயல்களைச் செய்பவர்கள். மேலும் திரிதல் என்ற சொல்லானது நடப்பதையும் குறிக்கும். மேற்கண்ட மூன்று இறை திருஉருவங்களுமே நடந்த திருக்கோலத்தில் அமைந்திருக்க வேண்டும் என்கிற சில்ப சாஸ்திரம், மூன்றாகயிருக்கிற இம்மூர்த்திகள். மூன்றும் தனித்தனியே அமைந்துள்ளது.

மூன்றும் இணைந்து ஒரே தோற்றமாக அமைவதும் உண்டு. அதையும் திரிபவர் திரிமூர்த்தி என்றே அழைப்பர். ஏகபாத உற்பத்தி மூர்த்தி, ஏகபாத லயமூர்த்தி, லிங்கோத்பவர் என்ற திருஉருவங்களையும், ‘‘படைத்தும், காத்தும் அழித்தும் திரிபவர்’’ என்ற சொல்லால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என்ற மூவரையும் மூவராகிய ஒருவரையும் ‘திரிபவர்’ என்ற சொல் குறிக்கும்.

‘கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணைங்கே’:

‘கமழ்’ வாசனையோடு கூடிய கடம்ப மரத்துப் பூவை தன் குழலில் அணிந்ததால் வரும் நறுமணத்தைக் கொண்ட கூந்தலையுடைய தேவ ஜாதியைச் சார்ந்த பூவுலகத்தில் வாழும் ஒருவகை மானுடனைவிட மேலான, இறைவனைவிட தாழ்வான இடைப்பட்ட ஒரு தேவதையை குறிக்கும் சொல் ‘கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கு’ என்பது. இந்த தேவதையை குலதெய்வமாகக் கொண்டவர்கள் கடம்பர் எனப்படுவர். இவ்வினத்தவர் பண்டைய காலத்தில் கடம்ப மரத்தில் முருகப் பெருமானையும், அதன் மலரில் மகாயக்ஷி என்ற உமையம்மையையும் எழுந்தருளச் செய்து வழிபடுவர். வழிபாட்டின் வழி நிகழ்காலம், கடந்த காலம், எதிர்காலம் மூன்றையும் தெளிவாக அறியும் வல்லமை பெறுவர். அந்த வல்லமையைக் கொண்டு மக்களுக்குத் தேவையான நற்செய்திகளைச் சொல்லி அதனால் வரும் பொருளைக் கொண்டு வாழக்கூடிய பழக்கமுடையவர்.

இவர்களுள் கடம்ப மலரில் உமையம்மையை எழுந்தருளச் செய்து வழிபட்ட பிறகு அந்தப் பூவை கூந்தலில் சூடியும், கடம்ப மரத்தில் முருகனை எழுந்தருளச் செய்து வணங்கிய பிறகு அந்த மரத்திலிருந்து செய்யப்பட்ட கடம்ப மரக்கோலையும் கொண்டு, ஆடவர் ஆடவருக்கும், பெண்டிர்களுக்கு பெண்டிரும் குறி சொல்வர். இந்த பழக்கத்தையே அபிராமி பட்டர் இவ்வரியில் ‘‘கமழ்பூங் கடம்பு சாத்தும் குழல் அணங்கே’’ என்று குறிப்பிடுகிறார். பொதுவாக ஆலயத்தில் பணிபுரியும் அந்தணர்கள் அதே மகாயக்க்ஷியை உபாசனை செய்து தரிசிப்போருக்கு அருள்வாக்கு சொல்வர். இதையே வாக்கு சித்தி என்ற பெயரால் குறிப்பிடுவர். அந்த வாக்கு சித்தியை தந்த உமையம்மையையே ‘‘கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே’’ என்கிறார். ஒரே தேவதையே சைவ நெறியில் (சவ்யமாக) அந்தணர்களும் அசைவ நெறியில் உயிர்பலியிட்டு (அபசவ்யமாக) கடம்பர்களும் வழிபட்டனர். இதையே லலிதா ஸஹஸ்ர நாமம் சவ்யாப சவ்ய மார்கஸ்தாயை - என்று குறிப்பிடுவதிலிருந்து மேலும் உறுதி செய்யலாம். மேற்கண்ட தகவல்களைக் கொண்டு ‘கமழ்பூங் கடம்பு சாத்தும் குழல் அணங்கே’ என்ற வார்த்தையால் மகாயக்ஷியை குறிப்பிட்டார்.

‘மணம் நாறும் நின் தாளினை’

‘மணம் நாறும்’ என்ற சொல்லானது வாசனை மிகுந்த என்ற பொருளைத் தருகிறது ‘தாள்’ என்ற சொல்லால் தாமரையையும், தாமரை இதழையும் குறித்து நின்றது திருவடியை தாமரையாக உவமித்ததன் சிறப்பு என்ன? திருவடி என்று கூறியிருக்கலாமே என்றால் தாமரைக்கும் திருவடிக்கும் ஐந்து ஒத்த தன்மைகள் உள்ளன.

1. தாமரையில் உள்ள இதழானது

மெய்யிற்கும்

2. தாமரையின் தேனானது வாயிற்கும்

3. நிறமானது கண்ணிற்கும்

4. வாசனையானது மூக்கிற்கும்

5. தாமரையை சுற்றும் வண்டினுடைய ரீங்காரம் செவிக்கும் இன்பம் தருவதைப்போல அம்மையின் திருவடியை சுற்றிய கழல் ஒலியும் செவிக்கும் இன்பம் தரும். உமையம்மையின் திருவடி தாமரையும், வணங்குவோரின் ஐம்புலன்களுக்கும் இன்பத்தை தருவதாகும்.

தாள் இணை என்று சொன்னதனால் அர்த்தநாரி என்ற பாதி பெண் வடிவமுள்ள திருவுருவின் இரண்டு திருவடியில் ஒன்று பரமனின் திருவடியையும், ஒன்று பார்வதியின் திருவடியையும் குறிக்கும். தாமரை சூரியனைக் கண்டு மலர்வதைப்போல் உமையம்மையின் திருவடியானது பக்தர்களின் அன்பாகிய பண்பின் ஒளியால் மலரும் தன்மையுடையது.

‘மணம் நாறும்’ என்று சிறப்பித்துச் சொன்னதால் தாமரை இயல்பான மணமுடையது. உமையம்மையின் திருவடியோ கஸ்தூரி மஞ்சள் மற்றும் வாசனை கலந்த பொருள்களால் சுமங்கலிப் பெண்களால் அவள் கால்களில் தீட்டப்பட்ட நறுமண சாந்தினால் மணம் மிக்கதாகத் திகழ்கிறது. ‘நின்தாளினை’ என்று சொன்னதால் உமையம்மையை முன்னிலையில் நின்று அவள் திருவடியின் அழகைக் காண்கிறார் அபிராமி பட்டர். அது எல்லாவற்றையும்விட சிறப்பானது ஏன் என்றால் அருணகிரி நாதர் அழைக்க மயிலின் திருவடியை முன்நிலையில் கண்ட மன்னனுக்கு ஒளியினால் கண் இழந்தார் என்பது அருண புராணம். ஆனால் உமையம்மையின் திருவடியோ அவ்வாறு தீங்கிழையாது.

காணும் வகையில் அமைந்தது வல்லமை மிக்க அவள் ஆற்றலால் அல்ல அதைவிட அவள் கருணையினால் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

‘என் நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே’

என் என்பதால் அபிராமி பட்டர் தன்னையும் நாத்தங்கு என்பதால் தன் நாவால் இறைவியைப் பற்றிய கூறிய கருத்தாக்கத்தை புன்மொழி என்பதால் (எல்லையற்ற- சொல்லுதற்கு அரிய) நான்கு வரிகளே அமைந்த எளிய தாழ்ந்த இந்த சிறு சொற்களால் அமைந்த பாடல் வரிகளுள் அடங்கி விட்டது என்பதை நினைத்துப் பார்த்தால் அது சிரிப்பாகவே (இளிவு) உள்ளது. அது உண்மைத்தன்மை உடையதாக ஆகாது. திறம்படக் கூறியதாகவும் ஆகாது என்பதை நகையுடைத்தே என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். சாஸ்திரமானது இறைவியைப் பற்றி கூறுவதென்பது இயலாது என்பதையும் வடமொழியில்  ‘அவாங் மனச கோசரம்’ - மனதிற்கும் வாக்கிற்கும் எட்டாதது என்று குறிப்பிடுகிறது.

அதையே அபிராமி பட்டர்

‘மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின்திரு மூர்த்தி’ (பாடல் - 87)

என்பதிலிருந்தும் உறுதி செய்யலாம். ‘‘என் நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே’’ என்ற வரியால் நாவினில் தோன்றும் சொற்களில் அடங்காத உன் மகிமையை அந்தாதியானது பாடல் வரிகளில் அடக்குவதென்பது நகுதற்கு இடமாகவே அமைகிறது. அப்படி கூறுதென்பது இறைவியின் அருளினாலேதான் சாத்தியம் என்பதை ‘பண்ணளிக்கும் சொற்’ (பாடல் - 15) என்பதிலிருந்து அறியலாம். ஏத்தும் அடியவர்கள் சாமானியர்களாக அல்லாமல்  அவர்களே படைத்தும், காத்தும், அழிக்கும் வல்லமை பெற்றவர்களாகத் திகழ்கிறார்கள். அப்படிப்பட்ட மிகுந்த சிறப்புக்களைக் கொண்ட உமையம்மையை வழிபடுவோரைப் பற்றி பாடுதல் என்பது இயலாத நிலையில் அடியவருக்கு அருள்புரியும் உமையம்மையைப்பற்றி சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது என்ற முயற்சியை இகழ்கிறார் பட்டர்.

(தொடரும்)

Related Stories: