உவரி சுயம்புலிங்கசுவாமி கோயில் தைப்பூச திருவிழாவில் தேரோட்டம்

திசையன்விளை: உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் தைப்பூச விழாவில் நேற்று  தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர். உவரி  சுயம்புலிங்க சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு விழா கடந்த ஜன.13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. 9ம் திருவிழாவான நேற்று காலை 4 மணிக்கு மங்கள வாத்தியத்துடன் தைப்பூச திருவிழா துவங்கியது. தொடர்ந்து 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட பூஜை நடந்தது. காலை 5.30 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகை தேருக்கு புறப்பாடு நடந்தது.

தொடர்ந்து காலை 7.15 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. குமரி மாவட்டம், இருளப்பபுரம் சிவதேவஸ்தான சிவ அருள்நெறி கூட்டத்தினர் தேவார திருமுறை பாராயண பஜனை பாடினர். கோயிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தேர்பாதை வழியாக பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கடற்கரையோரம் அமைந்துள்ள பாதையில் தேரில் சுவாமி வலம் வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.  தேர்நிலையம் வந்தவுடன் தீர்த்தவாரி, மூலவர் உற்சவர் சிறப்பு அபிஷேகம், மதியம் உச்சிகால சிறப்பு பூஜை, உற்சவர் சந்திரசேகரர் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை சாயரட்சை பூஜை, இரவு ராக்கால பூஜை,  சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகை வீதி உலாவும் தொடர்ந்து வாணவேடிக்கை சமய சொற்பொழிவு, தொடர் அன்னதானமும் நடந்தது.

10ம் திருவிழாவான இன்று  காலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, 8.30 மணிக்கு பஞ்சமூர்த்தி திருவீதி உலா, 10.30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு  உச்சிகால சிறப்பு பூஜை நடக்கிறது. இரவு 7 மணிக்கு சாயரட்சை பூஜை, 8 மணிக்கு ராகுகால பூஜை நடக்கிறது. இரவு 9 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகை தெப்பத்திற்கு எழுந்தருளல் மற்றும் தெப்ப உற்சவம், 11 மணிக்கு  தீபாராதனை நடக்கிறது. காலை முதல் சிறப்பு அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகளை  உவரி இன்ஸ்பெக்டர் சந்தி செல்வி செய்துள்ளார்.

Related Stories: