சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு

திருமலை: திருப்பதியில் 9 நாட்களாக நடந்த நவராத்திரி பிரம்மோற்சவம் நேற்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கடந்த 14ம் தேதி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவை நடந்தது. அப்போது மலையப்பசுவாமி லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் கொட்டும் மழையில் மாடவீதியில் வலம் வந்தார். இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி கோயிலில் இருந்து அதிகாலை உற்சவ மூர்த்திகளும், சக்கரத்தாழ்வாரும் ஊர்வலமாக வராகசுவாமி கோயிலுக்கு எழுந்தருளினர்.

பின்னர் வராக சுவாமி கோயில் எதிரே மலையப்ப சுவாமி, தாயார்கள், சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட சுகந்த திரவியங்களை கொண்டு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்கு பின் புனித நீராடினால் சகல பாவங்களும், தோஷங்களும் விலகி கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம் என்பதால், குளத்தை சுற்றியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். இதனையடுத்து கடந்த 9 நாட்களாக நடந்த நவராத்திரி பிரம்மோற்சவம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

Related Stories: