தமிழ்நாட்டை நிதி நெருக்கடியில் விட்டு சென்றதுதான் அதிமுக சாதனை: கொளத்தூரில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு

பெரம்பூர்: தமிழ்நாட்டை நிதி நெருக்கடியில் விட்டு சென்றதுதான் அதிமுகவின் சாதனை என  திருவிக நகரில் நடந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மாநகராட்சி தினக்கூலி ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகள்  வழங்கும் நிகழ்ச்சி கொளத்தூர்  தொகுதிக்கு உட்பட்ட திருவிக நகரில் நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு, மாநகராட்சி தினக்கூலி ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின்போது கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: தமிழ்நாட்டில் எந்த ஆட்சி வந்தாலும் சில அமைச்சர்களை மட்டுமே தெரியும். தற்போது அனைத்து அமைச்சர்களும் மக்களுக்கு தெரியவந்துள்ளது. அந்தளவுக்கு தமிழக அரசின் பணி இருக்கிறது.  அடித்தட்டு மக்களாக இருக்கும் தூய்மை பணியாளர்களை அடையாளம் கண்டு உதவி செய்கின்ற நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். கடந்த தேர்தலில் எல்லா கட்சிகளையும் ஒருங்கிணைத்து 40 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெறுகின்ற மகத்தான பணியை ஸ்டாலின் உருவாக்கினார். அனைத்து மாநிலங்களிலும் மோடிக்கு ஆதரவு அலை வீசிக்கொண்டிருந்த நேரத்தில் தமிழகத்தில் மட்டும்தான் மோடிக்கு எதிர்ப்பு அலை வீசியது. அப்படிப்பட்ட அலையை உருவாக்குகின்ற ஒருங்கிணைப்பு வேலையை செய்தவர் ஸ்டாலின். அதன்பிறகு சட்டமன்ற தேர்தலில் ஆட்சியில் இருந்த அதிமுக, அவர்களுக்கு துணைபோன அனைவரையும் வீட்டுக்கு அனுப்பி முகவரி இல்லாத சூழ்நிலையை உருவாக்கினார். அதிமுக ஆட்சி காலத்தில் 5 லட்சத்து 75 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளார்கள். ஒரு ஆண்டுக்கு நாம் கட்டவேண்டிய வட்டி மட்டும் 26000  கோடி ரூபாய். கடனுக்கு மேல் கடன் வாங்கி அனைத்தையும் சாப்பிட்டுவிட்டு  தற்போதைய தமிழக அரசுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தி சென்றுவிட்டனர். கொரோனா இரண்டாம் அலை, அதன்பிறகு 10 மாவட்டங்களில் வெள்ளம் என மோசமான நிலையை கடந்து அதில் வெற்றியடைந்து தமிழகத்தை தலைநிமிர ஆட்சி செய்துகொண்டிருக்கிறார் முதல்வர். 4 மாநில தேர்தலில் பாஜக வெற்றிபெற்றுவிட்டாலும் பரவாயில்லை. 2024ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில்  பாஜகவை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்ற அடிப்படையில், ஆக்கப்பூர்வமான திட்டங்களை உருவாக்குகின்ற பணியில் மதசார்பற்ற அனைத்து கட்சி தலைவர்களையும் தமிழக முதல்வர் சந்திக்க உள்ளார். இவர்கள் பாஜகவை விரட்டுவதற்கான வியூகத்தை எடுக்க உள்ளார்கள். 2024ல் மதசார்பற்ற கூட்டணி ஆட்சி வரும் என்ற நம்பிக்கை உள்ளது.  இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், தேபஜவகர், இளைஞரணி மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்….

The post தமிழ்நாட்டை நிதி நெருக்கடியில் விட்டு சென்றதுதான் அதிமுக சாதனை: கொளத்தூரில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: