மெட்ரோ ரயில் பணிக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததால் தமிழகம் ₹12,000 கோடிக்கான திட்டப்பணிகளை இழந்துவிட்டது: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை, ஜூன் 27: மெட்ரோ ரயில் பணிக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததால் தமிழகம் ரூ.12 ஆயிரம் கோடிக்கான திட்டப் பணிகளை இழந்துவிட்டது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். சட்டப் பேரவையில் நேற்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை, எரிசக்தி துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை ஆகிய துறைகளின் மானியக் ேகாரிக்ைக மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: ஒன்றிய நிதி அமைச்சர் டெல்லியில் கடந்த 22ம்தேதி கூட்டிய மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் எடுத்து வைத்த கருத்துகளை இங்கு அனைவரது கவனத்திற்கும் கொண்டு வருகிறேன். குறிப்பாக 2022-23ம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட உரையில் ஒன்றிய நிதி அமைச்சர், சென்னை மெட்ரோ ரயிலுக்கான 2ம் கட்ட திட்டப் பணிகளுக்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் செலவிடப்படும் திட்டமாக அறிவித்தார். அதை தொடர்ந்து 21-11-2020 அன்று சென்னையில் அவர் இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த திட்டம் 17-8-2021 அன்று திட்ட முதலீட்டு வாரியத்தால் பிஐபியால் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் கூட பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக கடந்த 3 ஆண்டுகளாக அது காத்திருக்கிறது. தமிழக மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காத அதேவேளையில், ஒன்றிய அரசு, 2022ம் ஆண்டு நாக்பூர் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கும், கொச்சி மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கும் ஒப்புதல் அளித்திருக்கிறது. 2023ம் ஆண்டு குருகிராம், புனே மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அது ஒப்புதல் அளித்திருக்கிறது. தமிழக மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கான ஒப்புதல் நிலுவையில் இருக்கக்கூடிய நிலையிலும் கூட, தமிழக முதல்வர், இந்த திட்டத்திற்கான முழுச் செலவினத்தையும் தமிழ்நாட்டின் சொந்த மாநில நிதியிலிருந்து மேற்கொண்டிருக்கிறார்.

இந்த திட்டத்திற்கான முழுச் செலவையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டதால், தமிழ்நாடு அரசுக்கு மிக கடுமையான நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. இந்த நியாயமற்ற செயலினால் மாநில அரசுக்கு இந்த ஆண்டு மட்டும் ஏறத்தாழ ரூ.12,000 கோடி கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது. மாறாக இந்த ரூ.12,000 கோடியை இந்த திட்டத்திற்காக செலவழிப்பதற்கு பதிலாக அரசினுடைய மற்ற திட்டங்களுக்கெல்லாம் நாம் ஒதுக்கீடு செய்து செலவழிந்திருந்தால், அதன்மூலம் 25,000 புதிய பேருந்துகளை வாங்கியிருக்கலாம். 30,000 கிமீ தூரத்திற்கு கிராம சாலைகளை அமைத்திருக்கலாம். முதல்வர் அறிவித்த 10,000 கி.மீ சாலைகள் என்பது 30,000 கிலோ மீட்டர் சாலையாக உயர்ந்திருக்கும். அதேபோல் மூன்றரை லட்சம் வீடுகளை புதிதாக கட்டியிருக்க முடியும். 50,000 புதிய வகுப்பறைகளை உருவாக்கியிருக்கலாம்.

மிக்ஜாம் புயல், தென்மாவட்ட வெள்ளம் இதற்காக ரூ.37,906 கோடி ஒன்றிய அரசிடம் நிவாரணத் தொகையாக கேட்டால், ஒன்றிய அரசு நமக்கு வெறும் ரூ.276 கோடிதான் கொடுத்துள்ளது. இது எந்தவகையில் நியாயம் என்பதைத்தான் ஒன்றிய அரசிடம் கேட்கிறேன். இதுதான் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு இழைத்திருக்கும் மிகப்பெரிய அநீதியாகும். மாநில அரசுகள் தங்களுடைய வரி விதிக்கக்கூடிய அதிகாரங்களை விட்டுக் கொடுத்திருக்கிறது. ஆனால் 30-6-2022க்கு பிறகு இனிமேல் அந்த வரியை நமக்கு கொடுக்க முடியாது என்று ஒன்றிய அரசு இழப்பீட்டை நிறுத்தியதன் காரணமாக ஏறத்தாழ ரூ.20,000 கோடி நமக்கு இன்றைக்கு வரவேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய திட்டங்களையெல்லாம் உத்தரபிரதேசத்திற்கு செல்வதற்கு யார் காரணம் என்பதை அறிவீர்கள். இந்த ஜிஎஸ்டியை பொறுத்தவரை, நமக்கு கிடைக்க வேண்டிய நியாயமான வரியை ஒன்றிய தர வேண்டும். ஒன்றிய அரசு நமக்கு கொடுக்கக்கூடிய அவர்களுடைய பங்களிப்பைக் குறைத்துக்கொண்டே வருகிறார்கள். நமது நிதித் துறையினுடைய பல்வேறு அமைப்புகளை பொறுத்தமட்டில், உலகினுடைய தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களைக் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி துறையின் ஜிஎஸ்டி செயல்பாட்டினை மேம்படுத்துவதற்கான ஒரு துணை குழுவையும் இந்த முறை அமைத்திருக்கிறோம். மின் கொள்முதலை பொறுத்தவரை புதுப்பிக்கப்பட்ட இணையதளம் வழியாக மட்டுமே மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளோம். 2023-24ம் நிதியாண்டில் 1.69 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 1.75 லட்சம் எண்ணிக்கையிலான ஒப்பந்தப் புள்ளிகள் இதிலே பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

பழைய ஓய்வூதியம் செயல்படுத்த சாத்தியக்கூறுகள் ஆய்வு
பேரவையில் உறுப்பினர்கள் ஈஸ்வரன், வெங்கடேஷ்வரன் ஆகியோர் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தைப் பற்றி குறிப்பிட்டார்கள். பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்துவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு பல்வேறு பணியாளர் சங்கங்களின் உடைய கருத்துகளைக் கேட்டறிந்திருக்கிறது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் அளித்துள்ள பல்வேறு கருத்துகளின் அடிப்படையிலும் ஆய்வு செய்து அளித்துள்ள பரிந்துரைகளின் மீதான அரசினுடைய கொள்கை முடிவு, அரசினுடைய பரிசீலனையில் இருக்கிறது.

The post மெட்ரோ ரயில் பணிக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததால் தமிழகம் ₹12,000 கோடிக்கான திட்டப்பணிகளை இழந்துவிட்டது: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: