சென்னை திருவிக நகர் பகுதியில் தாழ்வழுத்த மின்பாதையில் மேம்பாட்டு பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: சென்னை திருவிக நகர் பகுதியில் தாழ்வழுத்த மின்பாதையில் மேம்பாட்டு பணிகள் விரைவில் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திரு.வி.க. நகர் தொகுதி எம்எல்ஏ தாயகம் கவி (திமுக) பேசியதாவது: திரு.வி.க. நகர் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, 70வது வார்டு, இஎஸ்ஐ-ஏ குடியிருப்புப் பகுதியில் மின்மாற்றி அமைக்க வேண்டும்.

வார்டு எண் 71ல் பெரம்பூர் நெடுஞ்சாலை, மேட்டுப்பாளையம், கர்நாட்டிக் மில் குடியிருப்பு, அதேபோல் வார்டு எண் 72ல் தாஸ் நகர் 2வது தெரு, தாஸ் நகர் 8வது தெரு, அம்பேத்கர் நகர் 2வது தெரு, திரு.வி.க. நகர் 8வது தெரு, வ.உ.சி. நகர் 12வது தெரு, பவானி அம்மன், கஸ்தூரிபாய் காலனி பி பிளாக், வாசுகி தெரு, ஜோசப் தெரு, வார்டு எண் 73ல் கிரேன் நகர் 2வது தெரு, பிரகாஷ் ராவ் காலனி,

பென்ஷனர்ஸ் லேன், வார்டு எண் 74ல் பிரிஸ்லி நகர், டேங்க்மென் ரோடு, வார்டு எண் 75ல் சுப்பராயன் 4வது தெரு, வார்டு எண் 76ல் வெங்கடேசபத்திரன் தெரு, படவட்டமன் கோயில் தெரு, வெங்கட்டம்மாள் சமாதி தெரு, கண்ணம்மாள் தெரு, நாராயணமிஷன் தெரு ஆகியவற்றில் மின்மாற்றி அமைத்து தர வேண்டும். ஸ்ட்ராஹென்ஸ் சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பில் எதிர்கால மின் தேவையைக் கருத்தில் கொண்டு அங்கு ஒரு துணை மின்நிலையம் வேண்டும்,’’ என்றார்.

இதற்கு பதிலளித்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: சென்னை மாநகராட்சி, வார்டு எண் 70, இஎஸ்ஐ குடியிருப்பு பகுதிக்கு தற்போது 500 கே.வி.ஏ மின்மாற்றி மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின்மாற்றியின் திறன் தற்போது உள்ள மின் பளுவிற்கு போதுமானதாக இருக்கிறது. இப்பகுதியில், தாழ்வழுத்த மின்பாதையில் மேம்பாட்டு பணிகள் விரைவில் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய இடங்களிலே எங்கெல்லாம் குறைந்த மின்னழுத்தம் இருக்கிறதோ அங்கே இருக்கக்கூடிய மின்மாற்றிகளை தேவையான மின் பளுவிற்கு ஏற்ப மாற்றியமைக்கக்கூடிய அந்தப் பணியினை தமிழ்நாடு மின்சார வாரியத்தினுடைய மின் பகிர்மான கழகம் மேற்கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று பளுவினை கருத்தில்கொண்டு புதிய மின்மாற்றிகளை அமைப்பதற்கு அரசு நிச்சயம் ஆவன செய்யும்.

புதிய துணை மின்நிலையங்களைப பொறுத்தமட்டில் பல உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் சுமார் 388 துணை மின் நிலையங்களை அமைப்பதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு 330 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 246 துணை மின் நிலையங்களுக்கு பணிகளை மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.

சுமார் 202 துணை மின் நிலையங்களை அமைப்பதற்காக 2,300 கோடி ரூபாய் நிதியைப் பெற்று அதை செய்வதற்கான கருத்துருவினை ஒன்றிய அரசினுடைய பரிசீலனைக்கு அரசு அனுப்பியுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் பணிகளை மிக வேகமாக நம்மால் செய்ய முடியும். அதற்கிடையில் எங்கெல்லாம் அவசரத் தேவைகளாக இருக்கிறதோ அந்த இடங்களிலும் நம்முடைய நிதியைக் கொண்டு மின் நிலையங்களை அமைப்பதற்கான முயற்சிகளையும் மின்சார வாரியம் மேற்கொண்டிருக்கிறது. இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

The post சென்னை திருவிக நகர் பகுதியில் தாழ்வழுத்த மின்பாதையில் மேம்பாட்டு பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: