நுகர்ப்பொருள் வாணிப கழக கிடங்குகள் ரூ.40 கோடி செலவில் மேம்படுத்தப்படும்: பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை: தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழகத்தின் 31 சொந்த கிடங்கு வளாகங்களில் சாலை மற்றும் சுற்றுச்சுவர் கட்டமைப்புகள் ரூ.40 கோடியில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார். பேரவையில் நேற்று நடைபெற்ற உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட அறிவிப்புகள்:

* தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழக கிடங்குகளில் பூச்சி தாக்குதல் தடுப்பு பணிக்காக 2 ஆயிரம் புற ஊதாக்கதிர் விளக்கு பொறிகள் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

* சென்னை வடக்கு, சென்னை தெற்கு, திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, சிவகங்கை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 100 அமுதம் ரேஷன் கடைகள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

* தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழகத்தின் கிடங்குகள் மற்றும் நவீன அரிசி ஆலைகளின் வளாகங்களில் பசுமைச்சூழல் மேம்படுத்தப்படும்.

* தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றும் பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், அடையாளர் மற்றும் காவலர்களை உள்ளடக்கிய 4,710 பணியாளர்களுக்கு நடப்பாண்டில் ரூ.2 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் சீருடைகள் வழங்கப்படும்.

* தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழகத்தில் பணிபுரியும் 488 தரக்கட்டுப்பாட்டு பணியாளர்களுக்கு இன்றியமையா உணவு பொருட்களின் தரத்தை உறுதி செய்வதற்காக ரூ.25 லட்சம் செலவில் பயிற்சி அளிக்கப்படும்.

* தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், தென்காசி, தேனி, கடலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒவ்வொன்றும் தலா ரூ.30 லட்சம் வீதம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

* தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான 6 நவீன அரிசி ஆலைகளில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படும்.

* செங்கல்பட்டு, கடலூர் மற்றும் ராமராதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் 13 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட புதிய வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்கள் ரூ.29 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.

* திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ரூ.25 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் 18 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய 6 நவீன நெல் சேமிப்பு தளங்கள் அமைக்கப்படும்.

* பொது விநியோக திட்டத்தில் கிடங்குகளின் கொள்ளளவை மேம்படுத்த தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழகத்துக்கு 28 ஆயிரத்து 250 டன் கொள்ளளவு கொண்ட 26 கூடுதல் சேமிப்பு கிடங்குகள் 17 மாவட்டங்களில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

* தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் 11 சேமிப்பு கிடங்கு வளாகங்களில் உள்ள மின்னனு எடை மேடைகள் 60 டன் எடையளவு கொண்ட குழியற்ற மின்னணு எடை மேடையாக ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மாற்றி அமைக்கப்படும்.

* தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள பழமையான 9 சேமிப்பு கிடங்கு வளாகங்களில் உள்ள 53 கிடங்கு கட்டிடங்கள் ரூ.22 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.

* குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறைக்கு ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் வருடியுடன் கூடிய 41 ஸ்கேன் பிரிண்டர் மற்றும் 16 மடிக்கணினிகள் வழங்கப்படும். இவ்வாறு சட்டபேரவையில் அமைச்சர் சக்கரபாணி அறிவிப்புகளை வெளியிட்டார்.

The post நுகர்ப்பொருள் வாணிப கழக கிடங்குகள் ரூ.40 கோடி செலவில் மேம்படுத்தப்படும்: பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: