மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இந்தாண்டு ரூ.35 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்க இலக்கு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

* ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த கோரிக்கைகளில், ரூ.11 ஆயிரத்து 200 கோடி மதிப்பில் 818 பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மட்டும், ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான 210 பணிகளைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாட்டை ஊக்குவித்திட கடந்த நிதியாண்டில், 4 லட்சத்து 79 ஆயிரத்து 350 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.30 ஆயிரத்து 75 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த நிதியாண்டில் ரூ.35 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* 7000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.100 கோடியில் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும். 40,000 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி ரூ.90 கோடியில் வழங்கப்படும்.

* 4,000 தனிநபர் நிறுவனங்கள் மற்றும் 75 குழு நிறுவனங்களுக்கு இணை மானிய நிதி திட்டத்தின் மூலம் முறையான நிதி நிறுவனங்களிடமிருந்து ரூ.150 கோடி கடன் உதவி வழங்கப்படும்.

* டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ரூ.100 கோடியில் 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். திருவெறும்பூர், மன்னார்குடி, உத்திரமேரூர், உசிலம்பட்டி, மேட்டூர், கீழ்பொன்னாத்தூர், கலசப்பாக்கம், தாராபுரம், பென்னாகரம், கீழ்வேளூர், சேந்தமங்கலம், தாம்பரம், குறிஞ்சிப்பாடி, சேலம்-ஆத்தூர், கும்பகோணம், மேலூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்- ஆத்தூர், குளச்சல், மொடக்குறிச்சி, பண்ரூட்டி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 22 சட்டமன்றத் தொகுதிகளில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கங்கள் ரூ.66 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

The post மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இந்தாண்டு ரூ.35 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்க இலக்கு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: