பால் குடித்துவிட்டு உறங்கியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு கைக்குழந்தை உயிரிழப்பு: போலீசார் விசாரணை

பெரம்பூர்: புளியந்தோப்பில் பால் குடித்துவிட்டு உறங்கியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒருமாத கைக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. புளியந்தோப்பு கே.எம்.கார்டன், 6வது தெருவில் வசித்து வருபவர் அஜித்குமார் (27). இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திவ்யா என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு கடந்த மாதம் 21ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ரன்சிகா என பெயர் வைத்தனர்.

தற்போது திவ்யா, கேஎம் கார்டன் ஒன்றாவது தெருவில் உள்ள தனது அம்மா வீட்டில் உள்ளார். நேற்று முன்தினம் காலை குழந்தைக்கு திவ்யா தாய்ப்பால் கொடுத்துள்ளார். அதன்பிறகு குழந்தை வாந்தி எடுத்துள்ளது. இதையடுத்து, புளியந்தோப்பு திருவேங்கடசாமி தெருவில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு கொண்டு போய் குழந்தையை திவ்யா காண்பித்துள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை நன்றாக உள்ளது எனக்கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து திவ்யா தூங்க வைத்துள்ளார். காலை 5 மணிக்கு திவ்யா எழுந்து பார்த்தபோது குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் லேசாக வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யா, உடனடியாக தனது மாமனார் செல்வத்தை அழைத்துக்கொண்டு, குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் காண்பித்துள்ளார்.

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யா மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுதனர். தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத்திணறி குழந்தை இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பால் குடித்துவிட்டு உறங்கியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு கைக்குழந்தை உயிரிழப்பு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: