மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் 15 பேருக்கு சான்றிதழ்

புழல்: மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் 15 பேருக்கு சான்றிதழ்களை மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ வழங்கினார். புழல் பாலாஜி நகரில் உள்ள மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சென்னை மாவட்டம் மாதவரம் வட்டம் 1433ம் ஆண்டு வருவாய் தீர்ப்பாய கணக்கு முடிப்பு ஜமாபந்தி நேற்று நடந்தது. முதல் நாளான நேற்று புத்தகரம், மாத்தூர், கொசப்பூர், மஞ்சம்பாக்கம், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பட்டா, பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, ஜாதி சான்றிதழ் தொடர்பாக மனு அளித்தனர்.

மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் ஜமாபந்தியை தொடங்கி வைத்து 15 பேருக்கு ஜாதி, குடும்பத்தின் முதல் பட்டதாரி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் மாதவரம் மண்டல குழு தலைவர் நந்தகோபால், தண்டையார்பேட்டை கோட்டாட்சியர் இப்ராஹிம், மாதவரம் தாசில்தார் வெங்கடாஜலபதி, சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் மாதவரம் ராமகிருஷ்ணன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கனிமொழி, திருமலை துரைசாமி, 19வது வார்டு திமுக செயலாளர் தாமரைச்செல்வன், 23வது வார்டு முன்னாள் திமுக செயலாளர் புழல் சரவணன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், விஏஓக்கள் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். ஜமாபந்தியை முன்னிட்டு, வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சுதர்சனம் எம்எல்ஏ மரக்கன்று நட்டார். ஜமாபந்தியின் இரண்டாவது நாளான இன்று கதிர்வேடு, சூரப்பட்டு, புழல், வடபெரும்பாக்கம், செட்டிமேடு ஆகிய பகுதிகளுக்கு மனுக்கள் பெறப்படுகிறது. பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தீர்வு காணப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆலந்தூர்: ஆலந்தூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று நடந்தது. சென்னை மாவட்ட ஆட்சியர் ரேஷ்மா சித்தார்த் ஜகடே தலைமை வகித்தார். துணை ஆட்சியர் புனிதவதி, ஆலந்தூர் வட்டாட்சியர் துளசிராம் முன்னிலை வகித்தனர். இதில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர். கூட்டத்தில் கலந்துகொண்ட பலர் ஓய்வூதியம், மகளிர் உதவிதொகை, ரேஷன் அட்டை போன்றவற்றை கேட்டு மனு கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி கூறினார். கூட்டத்தில் வருவாய் அலுவலர் சோரன் செங்குட்டுவன், கிராம நிர்வாகி பாலு உள்பட பலர் கலந்துகொண்டனர். 2வது நாளாக இன்றும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது ஆதம்பாக்கம், தலைக்கனாஞ்சேரி பகுதி மக்களின் குறைகள் கேட்கப்படும் என தாசில்தார் முரளிராம் தெரிவித்தார்.

The post மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் 15 பேருக்கு சான்றிதழ் appeared first on Dinakaran.

Related Stories: