கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் சர்வதேச அளவிலான விளையாட்டு அரங்கம்: பிரபாகரராஜா எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: பேரவையில் விருகம்பாக்கம் எம்எல்ஏ எ.எம்.வி.பிரபாகரராஜா (திமுக) பேசியதாவது: சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கம், வேளச்சேரி ஏஜிபி வளாகம் அனைத்தையும் உலகத்தரத்திற்கு உயர்த்திக் கொண்டிருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையம் தற்போது கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. அந்த இடத்தில் சர்வதேச அளவிலான ஒரு விளையாட்டு அரங்கம் அமைத்து தர வேண்டும்.

கலைஞர் நகரில் இருக்கக்கூடிய உணவுப் பொருள் கிடங்கு மிகவும் பழுதடைந்திருக்கிறது. அதை நவீனமயமாக்க வேண்டும். கலைஞர் நகரிலுள்ள கூட்டுறவுக்கு சொந்தமான இடத்தில் சட்டமன்ற தொகுதிக்கென ஒரு அலுவலகம் இல்லை. அதையும் அங்கு அமைத்துத் தர வேண்டும். குறிப்பாக, வணிகர்களுக்கு இந்த உரிமம் பிரச்னை மோசமான நிலைமையில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் அதை முறையாக பதிவு செய்வதற்கு கஷ்டப்படுகிறார்கள். கலைஞர் அதை 5 வருடங்களுக்கு ஒரு முறையாக கொண்டு வருகிறேன் என்றிருக்கிறார்.

வணிகர்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தும் முதலமைச்சர், அந்த ஒரு வருட உரிமம் முறையை 3 வருடமாக மாற்ற வேண்டும். 40 வருடங்களாக இருக்கக்கூடிய ராணி நகர், சிவலிங்கபுரத்தில் குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும். அடையாறு ஆற்றங்கரையில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும்.

சிறுபான்மை மக்களுக்கு தொகுதியில் ஒரு கபஸ்தானம் அமைத்து தர வேண்டும். அரசு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஒரு கமிட்டி அமைத்து தந்திருக்கிறார். நிச்சயமாக சென்னையின் பெல்ட் ஏரியா பகுதிகளில் வசிக்கும் தகுதிவாய்ந்த அனைவருக்கும் பட்டா, கிரைய பத்திரத்தை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் சர்வதேச அளவிலான விளையாட்டு அரங்கம்: பிரபாகரராஜா எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: