பட பிரச்னைகளை தீர்ப்பது ஹீரோக்களின் கடமை: சிவகார்த்திகேயன்

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘மாவீரன்’. இதில் அவருடன் அதிதி சங்கர், யோகி பாபு, சரிதா, சுனில், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார். பரத் சங்கர் இசை அமைத்துள்ளார், விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகிற 14ம் தேதி வெளிவருகிறது. படம் குறித்து சிவகார்த்திகேயன் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: மண்டேலா படத்தை பார்த்து விட்டு அதனால் ஈர்க்கப்பட்டுதான் இந்த படத்தில் நான் நடிக்கிறேன். சமூக அக்கறையோடு கூடிய கதையை பொழுதுபோக்கு அம்சங்களோடு எழுதியிருந்தார் மடோன்.

அதனாலேயே ‘மாவீரன் படத்தில் நடிக்கும் ஆர்வம் வந்தது. படத்தில் நான் படக்கதை வரையும் ஓவியனாக நடித்திருக்கிறேன். நான் வரையும் ஒரு படக்கதையின் தலைப்பு ‘மாவீரன்’. படத்தில் ஃபேன்டசி விஷயங்கள் இருக்கிறது. இதற்கு முன் நடித்திராத வகையிலான சண்டை காட்சிகள் இருக்கிறது. அதிதி சங்கர் பத்திரிகையாளராக நடித்திருக்கிறார். படம் தயாரிப்பது, தயாரிப்பாளருக்கு ஏற்படும் பிரச்னைகளில் தலையிட்டு தீர்க்க முயற்சிப்பது போன்ற விஷயங்களை தவிர்த்து நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தலாமே என்று கேட்கிறார்கள். என்னை பொறுத்தவரை ஒரு நடிகர் பட தயாரிப்பு நிறுவனம் நடத்தாவிட்டாலும் இதுபோன்ற பிரச்னைகளை சந்தித்துதான் ஆக வேண்டும்.

நமக்கு சம்பளம் வந்தால் போதும் தயாரிப்பாளருக்கு பிரச்னை வந்தால் நமக்கென்ன என்று ஒதுங்கி இருக்க முடியாது. அது நான் நடித்துள்ள படம். அதன் லாப நஷ்டங்களில் எனக்கு பங்கிருக்கிறது. அந்த படத்திற்கு வரும் பிரச்னைகளை முடிந்த வரை தீர்த்து வைப்பது எனது கடமை என்று நினைக்கிறேன். ‘மாவீரன்’ படத்திற்கு நான் குறைந்த சம்பளம் வாங்கியதாக வெளியான தகவல்கள் தவறு. எனக்கான சம்பளத்தை நான் வாங்கி இருக்கிறேன். அதே நேரத்தில் எல்லா படத்தின் சம்பளமும் எனக்கு வந்து சேரவில்லை. ‘ரஜினி முருகன்’ படம் வெற்றிப்படம்தான் ஆனால் எனக்கு முழு சம்பளம் வரவில்லை. இன்னொரு படத்தின் சம்பளத்தை கோர்ட் வரை சென்றுதான் வாங்க வேண்டியது இருந்தது.

இதையெல்லாம் தாண்டித்தான் ஒரு நடிகனாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியது இருக்கிறது. முன்னணி இயக்குனர்கள் படத்தில் நடிக்கவில்லையே என்கிறார்கள். என் வாழ்க்கையில் நான் எடுத்த ரிஸ்க்தான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. நான் ரிஸ்க் எடுக்கவில்லை என்றால் எம்பிஏ முடித்த உடன் வேலைக்கு சென்றிருப்பேன். ஒரு காமெடியனாக என்னை மாற்றினேன். அதில் வெற்றி பெற்றேன். அதற்காக காமெடியனாகவே தொடர்ந்து பயணிக்க முடியாது என்பதால் வெவ்வேறு புதிய சிந்தனைகளுடன் வரும் இயக்குனர்களுடன் பயணித்து வெவ்வேறு விதமான கதை களங்களில் நடிக்கிறேன்.

The post பட பிரச்னைகளை தீர்ப்பது ஹீரோக்களின் கடமை: சிவகார்த்திகேயன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: