மேற்குவங்க மாநில தேர்தல் முடிந்ததும் அலிபூர் சிறை தான் திரிணாமுல் கட்சி ஆபீஸ்: மத்திய பாஜ அமைச்சர் சர்ச்சை பேச்சு

கொல்கத்தா: மேற்குவங்க மாநில தேர்தல் முடிந்ததும் அலிபூர் சிறை தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகமாக இருக்கும் என்று மத்திய பாஜ அமைச்சர் பேசியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் செல்வாக்கு கட்சிக்குள் அதிகரித்து வருவதாக கூறி, அக்கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சிலர் பாஜகவில் இணைந்தனர். வரும் மார்ச், ஏப்ரல் மாதம் வாக்கில் மேற்குவங்கத்தில் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் திரிணாமுல் கட்சிக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் கட்சியின் இளைஞரணி தலைவர் வினய் மிஸ்ராவின் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் கால்நடை கடத்தல் வழக்கு தொடர்பாக சிபிஐ சோதனை நடத்தியது. இந்நிலையில், மத்திய பாஜக அமைச்சர் பாபுல் சுப்ரியோ மஹிஷாதலில் நடைபெற்ற பேரணியில் பேசுகையில், ‘மேற்குவங்க தேர்தலுக்கு பின்னர், அலிபூர் மத்திய சிறையானது திரிணாமுல் கட்சியின் அலுவலகமாக செயல்படும். அக்கட்சியின் தலைவர்கள் அங்கே இருப்பார்கள். திரிணாமுல் கட்சியில் இருந்து விலகி பாஜக கட்சியில் இணைந்த தலைவர்களை, ஒரு குடும்பமாக இணைந்து தேர்தல் களத்தில் உழைக்க வேண்டும். மேற்குவங்கத்தை புயல் நெருங்குகிறது. அந்த புயல் ஆளும் திரிணாமுல் கட்சியை வீழ்த்தும். திரிணாமுல் கட்சி ஒரு மோசமான நிறுவனமாக செயல்படுகிறது. அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, அலிபூர் சிறையில் நீல – வெள்ளை நிறத்தில் (கட்சி கொடியின் நிறம்) ஓடியங்கள் வரைவதுதான் உங்களது வேலையாக இருக்கும்’ என்று பேசினார். இவரது பேச்சு குறித்து ஆளும்கட்சி தலைவர்கள் மத்தியில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 29 மற்றும் 30 தேதிகளில் மேற்குவங்கம் செல்ல உள்ளதாகவும், அவர் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன….

The post மேற்குவங்க மாநில தேர்தல் முடிந்ததும் அலிபூர் சிறை தான் திரிணாமுல் கட்சி ஆபீஸ்: மத்திய பாஜ அமைச்சர் சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: