மார்த்தாண்டம், ஜூலை 24: குழித்துறை நகராட்சி சார்பில் 100வது வாவுபலி பொருட்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பொருட்காட்சி நடைபெறும் குழித்துறை தபால் நிலையம் சந்திப்பு குழித்துறை- ஆலஞ்சோலை சாலையில் இரவு மதுபோதையில் வாலிபர் ஒருவர் பைக்கில் வந்தார். பின்னர் அவர் திடீரென சாலையின் குறுக்கே தனது பைக்கை நிறுத்திவிட்டு போக்குவரத்திற்கு இடையூராக பிற வாகனங்களில் வந்த நபர்களை மிரட்டினார்.
மேலும் மதுபோதையில் சாலையில் ரகளையில் ஈடுபட்டார். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக ரகளையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் போலீசார் யாரும் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். சிலர் போதையில் இருந்த வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சாலையின் குறுக்கே நிறுத்தியிருந்த பைக்கை எடுக்காமல் ரகளையை தொடர்ந்தார்.
அப்போது சிலர் செல்போன்களில் வீடியோ எடுப்பதை பார்த்த போதை வாலிபர் பைக்கை எடுத்து அங்கிருந்து வேகமாக சென்று விட்டார். இதையடுத்து போக்குவரத்து சீரானது. பொருட்காட்சி நடைபெறும் பகுதியில் அதிகளவில் மக்கள் திரள்வதாலும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்கவும் போலீஸ் பாதுகாப்பை தீவிரபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
The post குழித்துறையில் நடுரோட்டில் பைக்கை நிறுத்தி வாலிபர் ரகளை appeared first on Dinakaran.
