பயணிகள் கோரிக்கை பூச்சி தாக்குதல் ஏற்படாமல் தடுக்க நெற்பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் பணி

தஞ்சாவூர், டிச.15: தஞ்சாவூர் மாவட்டதில் பனி மூட்டம் அதிகம் இருப்பதால் பயிர்களில் பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருக்க வயல்களில் மருந்து தெளிக்கும் பணியில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த அம்மையகரம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெல்பயிர்களில் பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை காப்பாற்ற மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் தமிழகத்தின் நெல் களஞ்சியமாக விளங்கி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, குறுவை, தாளடி என மூன்று கோபம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். மேலும் தஞ்சையில் கரும்பு, வாழை, தென்னை, எள், சோளம், வெற்றிலை உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செய்யப்படும். இருப்பினும் அதிகபட்சமாக நெல் சாகுபடி தான் நடைபெறும். தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்காக மாவட்டம் முழுவதும் 3.50 லட்சம் ஏக்கர் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் தற்போது வரை சுமார் 3.40 லட்சம் ஏக்கரில் சாகுபடி பணிகள் நடைபெற்று உள்ளது. சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கு தேவையான யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தஞ்சை மாவட்டதில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாசத்திரம், அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், அம்மாபேட்டை, மாரியம்மன் கோவில், சாலியமங்கலம், ஆடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக விவசாயிகள் வயல்களை தயார் செய்வது, நாற்று தயாரிப்பது, களை எடுப்பது, மருந்து தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பா சாகுபடி பொருத்தவரையில் விவசாயிகள் நீண்ட நாட்கள் ரகமான நெல்லை தான் சாகுபடி செய்வார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் முழுமையாக மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் மிஞ்சிய பரப்பளவில் சாகுபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்தது. இதனால் சம்பா, சாகுபடி மேற்கொண்ட இடங்களில் அதிகளவில் களைகள் மண்டி உள்ளது. காலை வேளையில் வெயில் அடித்தாலும் மாலையில் மழை பெய்கிறது. இதனால் பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருக்க ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் மருந்து தெளிக்கும் பணிகளும் மேற்கொண்டுள்ளனர். தஞ்சாவூரை அடுத்த அம்மையகரம் பகுதியில் வயல்களில் மண்டி உள்ள களைகளை எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது பனி மூட்டம் அதிகம் அளவில் காணப்படுவதால் பூச்சிகள் தொல்லை அதிக அளவில் உள்ளது. தற்போது பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில்:
தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிர் என்றால் அது நெல்தான். குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகமும், கோடை நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல்தான் விவசாயிகளால் பயிரிடப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மை துறையில் பல்வேறு நிலை பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், பணிகளில் தேக்கமும், தொய்வும் ஏற்பட்டுள்ளது. எனவே வேளாண்மை துறை அதிகாரிகள் பூச்சி தாக்குதல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: