அரியலூர், டிச.15: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் 2வது கட்டமாக அரியலூர் மாவட்டத்தில் 16,525 மகளிருக்கு வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்துகொண்டு 16,525 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவ ட்ட கலெக்டர் ரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டும் வகையில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்ற சிறப்பு மிக்க திட்டத்தின் முதற்கட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான 2023 ஆம் ஆண்டில், தாய் தமிழ்நாட்டின் தலைமகன் – பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15 நாளன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 1,57,494 மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் 2 ஆவது கட்ட விரிவாக்கத்தினை தொடங்கி வைத்து, வாலாஜாநகரம் ஊராட்சி, தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விரிவாக்கத்தினை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் துவக்கி வைத்து 16,525 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.
அதன்படி அரியலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களில் 16,525 விண்ணப்பங்கள் ஏற்க்கப்பட்டு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் 2ஆவது கட்ட விரிவாக்கத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வீதம் அரியலூர் வட்டத்தில் 6,148 பயனாளிகளுக்கு ரூ.61,48,000 மதிப்பிலும், உடையார்பாளையம் வட்டத்தில் 5,906 பயனாளிகளுக்கு ரூ.59,06,000 மதிப்பிலும், செந்துறை வட்டத்தில் 2,115 பயனாளிகளுக்கு ரூ.21,15,000 மதிப்பிலும், ஆண்டிமடம் வட்டத்தில் 2,356 பயனாளிகளுக்கு ரூ.23,56,000 மதிப்பிலும் என மாதம் ஒன்றுக்கு ரூ.1000 வீதம் 16,525 பயனாளிகளுக்கு ரூ.1,65,25,000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் 2ஆவது கட்ட விரிவாக்கத்தின் கீழ் மகளிருக்கு வங்கிப் பற்று அட்டைகளை வழங்கிய பின்னர் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் முத்தான திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்குகின்ற திட்டத்தின் விரிவாக்கமாக 2ம் கட்ட நிகழ்ச்சி சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் ரூ.1 கோடியே 14 லட்சம் பேர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர். இன்று முதல் கூடுதலாக 17 லட்சம் மகளிர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற உள்ளனர்.
இத்திட்டமானது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ம் நாளன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் துவங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்பது 2 ஆண்டுகளை கடந்து மிகவும் வெற்றிகரமாக தமிழ்நாட்டு மகளிருடைய வாழ்வில் ஒரு அங்கமாக மாறியுள்ளது. கொரோனா காலத்திற்கு பிறகு தமிழ்நாட்டின் நிதிநிலையை சீர்படுத்தி அதற்கு பிறகு இத்திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தினார்கள். இத்திட்டமானது வெற்றிகரமான திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலைஞர் உரிமைத் தொகை வேண்டி விண்ணப்பம் அளித்த மகளிருக்கு 2வது கட்டமாக இன்றையதினம் கலைஞர் உரிமைத் தொகை 16,525 மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1,74,019 மகளிர் பயன்பெறுகின்றனர்.
ஒரு திட்டத்தினை துவங்கி தொடர்ந்து செயல்படுத்தி வருவது என்பது மிகவும் முக்கியமானதாகும். தமிழ்நாடு முதலமைச்சர் இதனை சாதித்து காட்டியுள்ளார்கள். தேர்தல் காலத்தில் அறிவித்த திட்டங்கள் மற்றும் அறிவிக்காத திட்டங்கள் என புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் என பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அவற்றிற்கு மகுடம் வைத்தது போன்ற திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமாகும். இந்த திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய சிறப்பான அளவில் செயல்படுத்தப்படவில்லை. சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய இராமநாதபுரம் மாவட்டத்தினை சேர்ந்த வயதான மூதாட்டி கோழிகள், ஆடுகள் வாங்கி வாழ்வதாரத்தை பெருக்கி கொண்டேன் என சொல்லும்போது ஏழை, எளிய மக்களின் வாழ்வில் இத்திட்டம் எத்தகைய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இதுவே சான்றாகும். தமிழ்நாட்டில் உள்ள மகளிர் தமிழ்நாடு முதலமைச்சர் தங்களது சகோதரராக ஏற்றுக்கொள்கின்ற காட்சியை காணமுடிந்தது என போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவ ட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, அரியலூர் நகர்மன்றத்தலைவர் சாந்தி கலைவாணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மனோகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, உடையார்பாளையம் பேரூராட்சி மன்றத் தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார், மாவட்ட நிலை அலுவலர்கள், இதர அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
