கந்தர்வகோட்டை அருகே உயிரி மருத்துவ கழிவு ஆலைக்கு எதிராக அறவழி போராட்டம்: மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூ.வலியுறுத்தல்

புதுக்கோட்டை, டிச. 14: கந்தர்வகோட்டை அருகே உயிரி மருத்துவ கழிவு ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் அறவழி போராட்டம் தொடர்பாக மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் சங்கர் கூறியிருப்பதாவது,
கந்தர்வகோட்டை தாலுகா பிசானத்தூரில் தனியார் உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் கடந்த 50 நாடகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் அப்பகுதி மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து அங்கு உயிரி மருத்துவக்கழிவு ஆலை அமைக்கக்கூடாது என பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து மாநில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அங்கு ஆலை அமைக்கப்படாது எனத் தெரிவித்துள்ளார். ஆனால், பிசானத்தூரில் உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படாது என எழுத்துப்பூர்வமாக அறிவிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் என்பது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலோ, போக்குவரத்துக்கு இடையூறாவோ அமையவில்லை. அங்கு உள்ள கோவிலில் அமைதியாக, அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் அப்பகுதி மக்களின் அச்சத்தை போக்குவதற்கு மாறாக காவல்துறையினரை வைத்து அவர்களை மிரட்டுவதும், தடியடி நடத்துவதும் ஏற்புடையது அல்ல. தொடர்ந்து ஏராளமான போலீசாரை அங்கு குவித்து அப்பகுதி மக்களை கலக்கமடைய செய்வதும் நியாயம் இல்லை. பிசானத்தூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக தேசிய அளவில் விருதுபெற்ற ஊராட்சியாகும். இங்கு இருந்துதான் தாலுகாவின் தலைநகரமான கந்தர்வகோட்டை பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டால் குடிநீரில் நச்சுத் தன்மை ஏற்படுவதற்கும், விவசாயம் முற்றிலும் பாதிப்படையும் சூழலும் ஏற்படும் சூழலிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட்டு பிசனாத்தூர் பகுதியில் தனியார் உயிரி மருத்துவக் கழிவு ஆலை தொடர்பாக உடனடியாக கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். காவல்துறையினரின் அத்துமீறிய நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். அப்பகுதி மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: