தெலங்கானாவில் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்து: பலி எண்ணிக்கை 37ஆக உயர்வு: 35 பேருக்கு தீவிர சிகிச்சை

திருமலை: தெலுங்கானா ரசாயன தொழிற்சாலை ரியாக்டர் வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்தது. தெலங்கானா மாநிலம், செங்காரெட்டி மாவட்டம், பட்டன்சேரு தொழிற்பேட்டையில் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் ஷிப்டில் ஏராளமான தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென தொழிற்சாலையில் உள்ள ஒரு ராட்சத பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

பணியில் இருந்த ஏராளமான தொழிலாளர்கள் சிலர் தூக்கி வீசப்பட்டனர். மேலும் பலர் தீயில் சிக்கிக்கொண்டனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறினர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 8 வாகனங்கள் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயை கட்டுக்குள் கொண்டுவருவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் தீணைப்பு வீரர்கள், தீயில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 12 தொழிலாளர்கள் சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சையில் இருந்தவர்களில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் 35 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பலியான தொழிலாளர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் ஒடிசா, சட்டீஸ்கர், உத்தரபிரதேசம், தெலங்கானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தெலங்கானாவில் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்து: பலி எண்ணிக்கை 37ஆக உயர்வு: 35 பேருக்கு தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: