இன்று துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க ஊட்டி வந்த ஆளுநருக்கு கருப்புக்கொடி

கோவை: ஊட்டியில் இன்றும், நாளையும் நடக்கும் துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த ஆளுநர் ரவிக்கு எதிராக விமானநிலையத்தில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் துணை வேந்தர்கள் மாநாடு இன்றும், நாளையும் நடக்கிறது. இந்த மாநாட்டில், சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் கோவை வந்தார். பின்னர் காரில் ஊட்டி புறப்பட்டு சென்றார்.

முன்னதாக துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, கோவை விமான நிலையம் அருகே திராவிடர் விடுதலை கழகம் மற்றும் தமிழ்ப் புலிகள் கட்சியினர் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதாகும் படி போலீசார் அவசரப்படுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உச்ச நீதிமன்றத்தை மதிக்காமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசிற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாகவும், சட்டவிரோதமாக துணைவேந்தர்கள் மாநாட்டை அவர் நடத்துவதாகவும் குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. ஊட்டியில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்பு கொடியுடன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றுதந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதற்காக இன்று காலை 11 மணிக்கு அனைத்து முற்போக்கு அமைப்புகள் சார்பில் ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, ஊட்டி ராஜ்பவன் முன்பு கருப்புக்கொடியுடன் முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். இதில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், ஆதிதமிழர் பேரவை, திராவிட தமிழர் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, திராவிட சுயமரியாதை இயக்கம், மக்கள் அதிகாரம், மே 17 இயக்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழ் சிறுத்தைகள் கட்சி, சிபிஐ (எம்எல்), திராவிட மக்கள் இயக்கம் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* துணை ஜனாதிபதி தன்கரை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் கவர்னர் மற்றும் குடியரசு தலைவர் குறிப்பிட்ட காலத்திற்குள் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கும் உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்புகளுக்கு எதிராக பாஜ எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் ஆகியோர் விமர்சனம் செய்து கருத்து தெரிவித்திருந்தனர். உச்சநீதிமன்றத்தின் மாண்பை குறைக்கும் வகையில் கருத்து தெரிவித்த துணை ஜனாதிபதியை கண்டித்து, சென்னை உயர் நீதிமன்றம் ஆவின் கேட் முன்பு, திருப்பூர் நீதிமன்றம் எதிரே, திருச்சி நீதிமன்ற வாயில் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நேற்று வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மற்றும் பாஜ எம்.பி நிஷிகாந்த் துபே ஆகிய இருவரையும் கண்டித்தும், உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் வக்கீல்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

The post இன்று துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க ஊட்டி வந்த ஆளுநருக்கு கருப்புக்கொடி appeared first on Dinakaran.

Related Stories: