*வனத்துறையினர் விரட்டியடித்தனர்
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுமார் 2 கி.மீ. தொலைவில் பெண் காட்டு யானை நடமாடியதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து வனத்துறையினர் சுமார் 5 மணிநேரம் போராடி காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டினர்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது குட்டத்தட்டி. ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதியில் சிறிய மலை ஒன்று உள்ளது.
இந்த மலை மீது நேற்று முன்தினம் பெண் யானை நடமாட்டம் இருப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை ரேஞ்சர் செல்லமணிக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் முருகன் உத்தரவின்பேரில், செல்லமணி தலைமையில் வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதியில் விரட்டும் பணியை தொடங்கினர். மாலை 5 மணிக்கு யானையை விரட்டும் பணி தொடங்கிய நிலையில், இரவு 10 மணி வரை நீடித்தது. வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து விரட்ட முயன்றனர்.
ஆனால், யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்கும் இங்கும் போக்கு காட்டிக்கொண்டு இருந்தது. ஒரு புதர் மறைவில் பதுங்கி நின்றது. சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நேற்று முன்தினம் இரவு காட்டு யானையை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டி அனுப்பினர்.காட்டு யானை மலை மீது நின்ற இடமானது, ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில்தான் உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கலக்கம் அடைந்தனர். இருப்பினும், வனத்துறையினர் சாதுர்யமாக செயல்பட்டு காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இருப்பினும், இப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 யானைகள் குட்டத்தட்டி மலை பகுதியில் ஏறி நின்றது குறிப்பிடத்தக்கது.
