ஊட்டியில் 700 படுக்கை வசதிகளுடன் அமைந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது

ஊட்டி : நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ரூ.143.69 கோடியில் கட்டப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் திறந்து வைத்த நிலையில், இன்று (23ம் தேதி) முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. அனைத்து சிகிச்சைகளும் புதிய மருத்துமனையிலேயே மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலை மாவட்டமான நீலகிரி மக்கள் உயர்தர மருத்துவ வசதிகளுக்கு கோவை அல்லது கர்நாடகாவின் மைசூர், கேரளாவின் பத்தேரி உள்ளிட்ட நகரங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.

இதனால் போக்குவரத்து செலவுகள் மட்டுமின்றி அலைச்சலும் ஏற்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்க கூடிய பொதுமக்கள் உயர்தர மருத்துவ சிசிச்சை பெறும் வகையில் ஊட்டியில் அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தினர். இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு நீலகிரியில் புதிதாக மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதற்காக ஊட்டி எச்பிஎப் அருகே கோல்ப் மைதான சாலைக்கும், கூடலூர் சாலைக்கும் இடைேய தமிழக அரசு வனத்துறைக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலமும், அருகில் கால்நடைத்துறைக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலமும் தேர்வு செய்யப்பட்டது.

ஊட்டியில் புதிய மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிடம் கட்ட ரூ.499 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரியை திறந்து வைத்தார்.

அதே ஆண்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். பின்னர் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டது. சிம்லாவிற்கு அடுத்த படியாக மலைப்பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டாவது மருத்துவ கல்லூரி என்பது நீலகிரி மருத்துவக்கல்லூரிக்கு கிடைத்த சிறப்பாகும். மேலும் இந்தியாவிலேயே 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைந்துள்ள மலை பிரதேசம் என்றால் நீலகிரி என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பழங்குடி மக்களுக்கு என தனியாக 50 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்மருத்துவமனையை பொறுத்த வரை எம்ஆர்ஐ., சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே போன்ற அதிநவீன தொழில்நுட்பத்துடனும், 10 அறுவை சிகிச்சை அரங்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த நீலகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 6ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
தொடர்ந்து ஊட்டி ஜெயில்ஹில் பகுதியில் உள்ள பழைய மருத்துவமனையில் இருந்து இடமாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் இன்று (23ம் தேதி) முதல் அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் எச்பிஎப் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செயல்படும். மாவட்டம் முழுவதிலும் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக வரக்கூடிய பொதுமக்கள் அனைவரும் புதிய மருத்துவமனைக்கு வர வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி கூறியிருப்பதாவது: ஊட்டி எச்பிஎப் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இம்மருத்துவமனை இன்று (23ம் தேதி) முதல் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.

ஜெயில்ஹில் பழைய மருத்துவமனையில் செயல்பட்டு வந்த வெளிநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, அவரச சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, விபத்து பிரிவு உள்ளிட்ட அனைத்து மருத்துவ சிகிச்சைகளுகளும் புதிய மருத்துவமனையில் செயல்படும்.

ஜெயில்ஹில் மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவும், சேட் மருத்துவமனையில் மகப்பேறு பிரிவும் வழக்கம் போல் செயல்படும். இன்று முதல் அவசர சிகிச்சை நோயாளிகளை அழைத்து வரும் 108 ஆம்புலன்ஸ்கள் புதிய மருத்துவமனைக்கு வர வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. தனியார் ஆம்புலன்ஸ்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்.

The post ஊட்டியில் 700 படுக்கை வசதிகளுடன் அமைந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது appeared first on Dinakaran.

Related Stories: