இந்தியாவில் என்ஐஏவால் தேடப்பட்டவர் அமெரிக்காவில் எப்பிஐயால் கைது

நியூயார்க்: பஞ்சாப்பில் பல தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய தீவிரவாதியை அமெரிக்க புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர். பஞ்சாப்பை சேர்ந்தவர் ஹர்பிரீத் சிங் என்ற ஹேப்பி பாசியா என்ற ஜோரா. காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்பிரீத்சிங் சண்டிகரில் உள்ள ஒரு வீட்டில் கையெறி குண்டு வீசிய சம்பவத்தில் தொடர்புடையவர். கடந்த ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வழக்கு பதிவு செய்து ஹர்பிரீத்தை தேடி வந்தது. இதே போல் பஞ்சாப்பில் பல்வேறு இடங்களில் நடந்த தாக்குதல்களில் அவர் சம்மந்தப்பட்டுள்ளார். அவரை பற்றி தகவல் தந்தால் ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள சாக்ரமான்டோவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த ஹர்பிரீத்தை அமெரிக்க புலனாய்வு(எப்பிஐ) அதிகாரிகள் கைது செய்தனர். எப்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய ஹர்பிரீத் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். நவீன போன்களை பயன்படுத்தி வரும் அவர் போலீசுக்கு பிடி கொடுக்காமல் தப்பி வந்துள்ளார். ஹர்பிரீத் சிங் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் பாபர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்புடன் சேர்ந்த பல தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளார். சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நபர்களை கைது செய்வதில் சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்பதை இந்த வழக்கு எடுத்து காட்டுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் என்ஐஏவால் தேடப்பட்டவர் அமெரிக்காவில் எப்பிஐயால் கைது appeared first on Dinakaran.

Related Stories: