ஜூரிச்: சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலையில் உள்ள பிரபல சுற்றுலா நகரத்தில் மது பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 பேர் கருகி பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சுவிட்சர்லாந்தின் ஆல்பஸ் மலையில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா புகழ்பெற்ற மலைவாசஸ்தலமாகும். வலாய் மாகாணத்தில் அமைந்துள்ள இந்நகரத்திற்கு குளிர்காலத்தையொட்டி ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
இந்த ஆண்டும் புத்தாண்டை கொண்டாட ஏராளமான வெளிநாட்டவர்கள் கிரான்ஸ் மொன்டனாவில் குவிந்திருந்தனர். அங்குள்ள பல்வேறு பார்களில் ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டு களை கட்டியது. இந்நிலையில், லே கான்ஸ்டலேஷன் என்ற பாரில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து வந்த நிலையில் அதிகாலை 1.30 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
அந்த சமயத்தில் பாரில் 100க்கும் மேற்பட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது. தீ சிறிது நேரத்தில் பார் முழுவதும் பரவியதால் பலராலும் தப்பிக்க முடியவில்லை. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 10 ஹெலிகாப்டர்கள், 40 ஆம்புலன்ஸ்கள் கொண்டு வரப்பட்டு, தீயிலிருந்து மீட்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் சுமார் 40 பேர் உடல் கருகி இறந்திருக்கலாம் என சுவிஸ் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இறப்பு எண்ணிக்கையை உயர் அதிகாரிகள் யாரும் உறுதிப்படுத்தவில்லை. பலருக்கும் படுகாயம் ஏற்பட்டதால் ஐசியு வார்டுகள் விரைவில் நிரம்பின. சுமார் 100 வரையிலும் காயமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இறந்தவர்களில் பலரும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். தீ விபத்து நடந்த சமயத்தில் பலரும் அலறியடித்து உயிர் பிழைக்க பாரில் இருந்து வெளியே ஓடி வரும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின. முதலில் இந்த பாரில் வெடிகுண்டு வெடித்ததாக தகவல் பரவிய நிலையில், இதை மறுத்துள்ள போலீசார் இது தீவிபத்து தான் என உறுதிபடுத்தி உள்ளனர். எதனால் இந்த தீ விபத்து நடந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.
