குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம் செய்து நியூயார்க் மேயராக மம்தானி பதவியேற்றார்: புத்தாண்டு தினத்தில் புதுமைகள் படைத்தார்

நியூயார்க்: புத்தாண்டு பிறந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, பழைய சுரங்க ரயில் நிலையத்தில் நடைபெற்ற தனிப்பட்ட விழாவில் குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம் செய்து நியூயார்க் நகரத்தின் 112வது மேயராக ஜோரான் மம்தானி பதவியேற்றார்.

அமெரிக்காவின் மிகப்பெரிய நகரமான நியூயார்க்கின் மேயர் தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவா மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்கவரும், முன்னாள் நியூயார்க் மாகாண ஆளுநருமான ஆண்ட்ரூ கியூமோ ஆகியோரை தோற்கடித்து மம்தானி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தார். டிரம்ப் எதிர்ப்பை மீறி வென்ற அவரை நேரில் அழைத்து பேசி அதிபர் டிரம்பும் நண்பராகி விட்டார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மம்தானி, புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் மீரா நாயர் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர் மஹ்மூத் மம்தானி ஆகியோரின் மகன் ஆவார். உகாண்டாவின் கம்பாலாவில் பிறந்து வளர்ந்த அவர் 7 வயதாகும் போது அவரது குடும்பம் அமெரிக்காவின் நியூயார்க்குக்கு குடிபெயர்ந்தது. மம்தானி 2018ல் தான் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்.

இந்நிலையில், மம்தானி தனது பதவியேற்பிலும் பல புதுமைகள் படைத்தார். புத்தாண்டு பிறந்த அடுத்த சில நிமிடங்களில், நியூயார்க்கின் பயன்படுத்தப்படாத பழைய சிட்டி ஹால் சுரங்க ரயில் நிலையத்தில் மம்தானி பதவியேற்றார்.

தனது தாத்தாவின் குர்ஆன் மற்றும் புகழ்பெற்ற கருப்பின எழுத்தாளர் ஆர்டுரோ ஸ்காம்பர்க் வைத்திருந்த குர்ஆன் சாட்சியாக சத்தியப்பிரமாணம் எடுத்து, நியூயார்க் நகரை வழிநடத்தும் முதல் தெற்காசிய மற்றும் முஸ்லிம் என்ற பெருமையை பெற்றார். குர்ஆன் மீது சத்தியம் செய்து பதவியேற்ற முதல் நியூயார்க் மேயராக மம்தானி உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

* சுரங்க நிலையத்தை தேர்ந்தெடுத்தது ஏன்?
தனது தனிப்பட்ட பதவியேற்பு விழாவை கைவிடப்பட்ட சுரங்க ரயில் நிலையத்தில் நடத்தியது ஏன் என்பது குறித்து மேயர் மம்தானி கூறுகையில், ‘‘இந்த ரயில் நிலையம் நியூயார்க்கின் 28 சுரங்க ரயில் நிலையங்களில் ஒன்றாக இருந்தது. 1904ல் செயல்பாட்டிற்கு வந்து 1945 சேவை நிறுத்தப்பட்டது. இது உழைக்கும் மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் சிறந்த நினைவுச்சின்னமாக இருந்தது. எனவே இது ஒரு முடங்கிப்போன ஒரு நினைவாக இருக்க வேண்டியதில்லை. இது எப்போதும் நினைவுகூறப்பட வேண்டும் என்பதற்காக இங்கு பதவியேற்றேன்’’ என்றார்.

Related Stories: