வங்கதேசத்தில் தொடர் அட்டூழியம் மேலும் ஒரு இந்துவை எரித்த கும்பல்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை

டாக்கா: வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து நபர் கும்பலால் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வங்கதேசத்தில் கடந்த மாதம் 19ம் தேதி மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் , தீபு சந்திர தாஸ் என்ற இந்து வாலிபரை கும்பலால் அடித்து மரத்தில் கட்டி தீ வைத்து கொடூரமாக கொல்லப்பட்டார்.

அதைத் தொடர்ந்து கடந்த 24ம் தேதி அம்ரிட் மாண்டல் என்ற இந்து வாலிபர் கும்பலால் அடித்து கொல்லப்பட்டார். பின்னர் 40 வயது இந்து நபர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில், மேலும் ஒரு இந்து நபர் கும்பலால் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. வங்கதேசத்தின் ஷரியத்பூரில் வசித்த 50 வயது கோகோன் தாஸ் என்பவர் கடந்த 31ம் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரை சூழ்ந்த கும்பல் கூரான ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய கோகோன் தாஸ் மீது அந்த கும்பல் தீ வைத்தது. அதிர்ஷ்டவசமாக அருகில் குளம் இருந்ததால் அதில் குதித்த அவர் உயிர் தப்பினார். கடுமையான தீக்காயத்துடன் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு கோகோன் தாஸ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். இந்த கொடூர சம்பவம் நடந்த சமயத்தில், வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் இறுதி சடங்கில் பங்கேற்க வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வங்கதேசத்தில் இருந்துள்ளார்.

ஜெய்சங்கரின் வங்கதேச பயணம் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் புதிய அத்தியாயம் எழுதப்படும் என வங்கதேச வெளியுறவு துறை நம்பிக்கை தெரிவித்த நிலையில், 4வது இந்து நபர் தாக்கப்பட்டுள்ளார். வங்கதேசத்தில் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்ற பிறகு, அங்கு சிறுபான்மையினர்களான இந்துக்கள் மீது 2,900 வன்முறை சம்பவங்கள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: