புனித வெள்ளியையொட்டி புதுச்சேரி வீதிகளில் இன்று சிலுவைப் பாதை ஊர்வலம் முதல்வர் ரங்கசாமி அறிக்கை

புதுச்சேரி, ஏப். 18: இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாச ஜெபத்தில் இருந்ததை நினைவுகூரும் தவக்காலமானது மார்ச் 5ம்தேதி (சாம்பல் புதன்) துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளியும் சிலுவைப்பாடு நினைவு கூறப்பட்டன. கடந்த ஞாயிறன்று குருத்தோலை பவனி இடம்பெற்ற நிலையில், புனித வெள்ளி இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தேவாலயங்களில் மும்மணி நேர சிறப்பு வழிபாடும் மற்றும் ஆராதனையும் இடம்பெறுகிறது. தொடர்ந்து பெரிய சிலுவைப்பாதை பேரணி நடக்கிறது. கோயிலை சுற்றியுள்ள பகுதிகளிலும், வீதிகளிலும் சிலுவையை சுமந்தபடி செல்லும் நிகழ்வுகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று இயேசுவின் பாடுகளை தியானிக்கின்றனர்.

புதுச்சேரி ஜென்மராக்கினி மாதா பேராலயத்தில் பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் வீதிகளில் நாளை காலை சிலுவைப் பாதை வழிபாடுகள் நடைபெறுகிறது. இதேபோல் நெல்லித்தோப்பு, இதய ஆண்டவர் பசிலிக்கா, தட்டாஞ்சாவடி பாத்திமா உள்ளிட்ட தேவாலயங்களிலும் சிலுவை பேரணியும், மாலையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து ஈஸ்டர் பெருவிழா வருகிற 20ம்தேதி கொண்டாடப்படுகிறது. அத்துடன் தவக்காலமும் முடிவுக்கு வருகின்றது.

இதனிடையே புனித வெள்ளியை முன்னிட்டு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இயேசு கிறிஸ்துவின் அளப்பரிய தியாகத்தைப் புனித வெள்ளி நமக்கு நினைவூட்டுகிறது. இயேசு கிறிஸ்து எவ்வாறு ஒவ்வொருவரிடமும் அன்பு காட்டினார், மனித குலம் மீட்படைய வேண்டும் என்பதற்காக அவர் எவ்வாறு தனது உயிரைத் தியாகம் செய்தார் என்பதை நாம் நினைத்துப் பார்ப்பதற்கான தருணத்தை இந்நாள் வழங்குகிறது. இந்தப் புனிதமான நாளில் கர்த்தரின் கரங்களில் ஆறுதல் அடைந்து, அவரின் தெய்வீக இருப்பை உணருங்கள். இறைவனின் அன்பின்ஒளி உங்கள் மீது பிரகாசிக்கட்டும், வாழ்க்கை மேலும் சிறக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

The post புனித வெள்ளியையொட்டி புதுச்சேரி வீதிகளில் இன்று சிலுவைப் பாதை ஊர்வலம் முதல்வர் ரங்கசாமி அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: