வேளச்சேரி, மார்ச் 16: மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம், எழில் நகர் பிளாக் 17ஐ சேர்ந்தவர் பாளையம் (47), இவர் மெரினா காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி. கடந்த 14ம் தேதி மாலை வீட்டில் இருந்தார். அப்போது வந்த மூன்று பேர் அவரது தலை, கை மற்றும் கால்களில் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் பாளையத்தை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சம்பவம் குறித்து மருத்துவமனை மருத்துவர்கள் பெரும்பாக்கம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மருத்துவமனைக்குச் சென்று வெட்டுப்பட்ட பாளையத்திடம் விசாரணை செய்தனர். முன்விரோதத்தில் கொருக்குப்பேட்டையை சேர்ந்த அரிஷ் (31), ராஜேஷ் (27), பாலாஜி (28) ஆகியோர் வெட்டி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று மூன்று பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
