இங்கிலாந்தில் பயிற்சி பெற்றதாக கூறிவந்த ‘டுபாக்கூர்’ இருதயவியல் நிபுணர் செய்த அறுவை சிகிச்சையால் 12 பேர் பலி

போபால்: இங்கிலாந்தில் பயிற்சி பெற்றதாக கூறிவந்த டுபாக்கூர் இருதயவியல் நிபுணர் செய்த அறுவை சிகிச்சையால் 12 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தில் தன்னை இங்கிலாந்தில் பயிற்சி பெற்ற இருதயவியல் நிபுணர் என்று கூறிக்கொண்டு நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் என்பவர் மருத்துவமனையை நடத்தி வந்தார். மேலும் தனது பெயர் ஜான் கெம் என்றும், இங்கிலாந்தில் பயிற்சி பெற்ற இருதயவியல் நிபுணரும் என்றும் கூறிவந்தார். ஆனால் உண்மையில் அவர் மருத்துவப் படிப்பு படிக்காதவர் என்றும், மருத்துவ தொழில் நடத்துவதற்கான எவ்வித அனுமதியும் பெறவில்லை என்பது அங்கு சென்ற நோயாளிகள் மூலம் தெரியவந்தது.

அதையடுத்து மாவட்ட மருத்துவ கண்காணிப்பு அதிகாரிகள், அந்த போலி மருத்துவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘இங்கிலாந்தில் பயிற்சி பெற்ற இருதயவியல் நிபுணர் என்று கூறிக் கொண்டு, இருதய நோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்குள் ஏழு முதல் பன்னிரண்டு பேர் அவரிடம் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இறந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அவரால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை குறித்து விசாரிக்கப்படுகிறது’ என்று கூறினர்.

இதுகுறித்து குழந்தைகள் நலக் குழுவின் மாவட்டத் தலைவர் தீபக் திவாரி கூறுகையில், ‘எங்களது உறவினர் ஒருவருக்கு இருதய நோய் பாதிப்பு ஏற்பட்டதால், நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் நடத்தி வரும் மருத்துவமனையில் சேர்த்தோம். அவரது படிப்பு உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்த பின்னர் எங்களது உறவினரை வேறு மருத்துவனையில் சேர்த்தோம். உண்மையில் அவர் தான் வெளிநாட்டில் பயிற்சி பெற்ற இருதயவியல் நிபுணர் என்று கூறி மக்களிடம் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

அவர்கள் நடத்திய விசாரணையில், நரேந்திர விக்ரமாதித்ய யாதவால் அறுவை சிகிச்சை பெற்றவர்களில் ஏழு நோயாளிகள் இறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 12 ஆக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

குற்றம்சாட்டப்பட்ட போலி டாக்டர் நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் மீது ஐதராபாத்தில் கிரிமினல் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது’ என்றார். இவ்விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் பிரியங்க் கனூங்கோ வௌியிட்ட பதிவில், ‘குற்றச்சாட்டுக்கு ஆளான மருத்துவமனை, பிரதமரின் ஆயுஷ்மான் யோஜனாவுடன் தொடர்புடையது. இந்த மருத்துவமனை அரசின் பணத்தை தவறாக பயன்படுத்தி உள்ளது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

The post இங்கிலாந்தில் பயிற்சி பெற்றதாக கூறிவந்த ‘டுபாக்கூர்’ இருதயவியல் நிபுணர் செய்த அறுவை சிகிச்சையால் 12 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: