திருவனந்தபுரம்: எர்ணாகுளம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்காக வெளிநாட்டிலிருந்து நிதி வாங்கிய விவகாரத்தில் மோசடி நடந்துள்ளதாக எழுந்த புகாரில் கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மீது சிபிஐ விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு கேரளாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது எர்ணாகுளம் மாவட்டத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு புனர்ஜனி என்ற திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுக்க பரவூர் தொகுதி எம்எல்ஏவும், எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி. சதீசன் திட்டமிட்டார்.
கடந்த 2020ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் துபாய்க்கு சென்ற இவர் அங்கு இதற்காக நிதி சேகரித்ததாகவும், இதில் மோசடி நடந்துள்ளதாகவும் கூறி ஜெய்சன் என்பவர் கேரள லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார். இது தொடர்பாக கடந்த 2023ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டது. இதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாட்டிலிருந்து நிதி வாங்கியதில் மோசடி நடைபெறவில்லை என தெரியவந்தது. ஆனாலும் இதில் அந்நிய செலாவணி விதி மீறல்கள் நடந்துள்ளதா என்பது குறித்து சிபிஐ விசாரணை நடத்தலாம் என்று அப்போதைய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் யோகேஷ் குப்தா கேரள அரசுக்கு சிபாரிசு செய்திருந்தார்.
கடந்த வருடம் இது தொடர்பாக இவர் கேரள அரசுக்கு ஒரு கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில் இந்த கடிதம் கொடுத்து 1 வருடத்திற்குப் பின் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் தான் கேரள அரசு தன் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும், இதை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திப்பேன் என்றும் சதீசன் கூறியுள்ளார்.
