க்ரோக் ஏஐ மூலம் ஆபாச படங்களை பதிவிட்டால் எக்ஸ் கணக்கு நிரந்தர முடக்கம்: இந்திய அரசின் உத்தரவை தொடர்ந்து எக்ஸ் நிறுவனம் அதிரடி உத்தரவு

 

புதுடெல்லி: ‘க்ரோக் ஏஐ மூலம் பெண்கள், சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவேற்றினால், அவை நீக்கப்படுவதோடு, அவற்றை பதிவிட்ட கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும்’ என எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலி க்ரோக் மூலம் பெண்கள், சிறுமிகளின் புகைப்படத்தில் உடையை மட்டும் மாற்றி ஆபாச புகைப்படமாக மாற்றும் வசதி உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு இந்தியா, மலேசியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, க்ரோக் செயலி மூலம் உருவாக்கப்பட்ட அத்தனை ஆபாச, சட்டவிரோத உள்ளடக்கங்களை 72 மணி நேரத்தில் நீக்க வேண்டும், இல்லாவிட்டால் போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த 2ம் தேதி உத்தரவிட்டது.

இதை ஏற்றுக் கொண்ட எக்ஸ் நிறுவனம் தற்போது உலக அளவில் இப்பிரச்னைக்கு தீர்வு காண அதிரடி உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளது. உலகளாவிய அரசாங்க விவகாரங்களுக்கான எக்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கணக்கில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘எக்ஸ் நிறுவனத்தின் ஏஐ சேவையான க்ரோக்கை பயன்படுத்தி சட்டவிரோத உள்ளடக்கத்தை பதிவேற்றுபவர்கள் கடும் விளைவுகளை எதிர்கொள்வார்கள். அவர்கள் பதிவிட்ட சட்டவிரோத பதிவுகள் நீக்கப்படும். அதோடு அந்த உள்ளடக்கத்தை பதிவேற்றிய கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும்.

இந்த விஷயத்தில் தேவைக்கேற்ப அந்தந்த நாடுகளின் உள்நாட்டு சட்ட திட்டங்களுக்கு இணங்க எக்ஸ் நிறுவனம் இணைந்து செயல்படும்’ என கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான எக்ஸ் தளத்தின் விதிகள் குறித்த இணைப்பும் அந்த அறிக்கையில் பகிரப்பட்டுள்ளது. முன்னதாக, அனைத்து சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஆன்லைன் தளங்கள் தங்கள் இணக்க கட்டமைப்பை உடனடியாக ஆய்வு செய்து, தங்கள் தளத்தில் ஆபாச மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய அரசு கடந்த மாதம் 29ம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: