தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் காங். வேட்பாளர்கள் தேர்வு குழு நியமனம்

 

கவுகாத்தி: தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான ஸ்கிரீனிங் கமிட்டியை காங்கிரஸ் நியமித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபல் நேற்று முன்தினம் வௌியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி ஆகியவற்றில் பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி சட்டீஸ்கர் முன்னாள் துணை முதல்வர் டி.எஸ்.சிங் தியோ தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான தேர்வு குழு தலைவராக செயல்படுவார். இதில், காங்கிரஸ் தலைவர்கள் யசோமதி தாக்கூர், ஜி.சி.சந்திரசேகர், அனில் குமார் யாதவ் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர். காங்கிரஸ் மூத்த தலைவர் மதுசூதன் மிஸ்திரி கேரளா தேர்வு குழு தலைவராகவும், காங்கிரஸ் ராஜ்யசபா எம்பிக்கள் சையத் நசீர் ஹூசைன் மற்றும் நீரஜ் டாங்கி மற்றும் அபிஷேக் தத் ஆகியோர் உறுப்பினர்களாகவும் செயல்படுவர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் பி.கே.ஹரிபிரசாத் மேற்குவங்க தேர்வு குழு தலைவராகவும், முகமது ஜாவேத், மம்தா தேவி மற்றும் பி.பி.சிங் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருப்பர். அசாம் மாநில வேட்பாளர் தேர்வு குழு தலைவராக காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி செயல்படுவார். இந்த குழுவில் அவரது நெருங்கிய உதவியாளர்களான இம்ரான் மசூத், ஸ்ரீ வெல்லா பிரசாத் மற்றும் சப்தகிரி சங்கர் உலகா ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: