அமெரிக்காவால் வெனிசுலா அதிபர் கைது: இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

புதுடெல்லி: வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் கைது செய்துள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா அதிரடியாக சிறைபிடித்துச் சென்றுள்ளது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு உடனடி கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், இந்தியாவின் நீண்டகால வர்த்தக கூட்டாளியாக வெனிசுலா இருந்தபோதிலும், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது. இதனை ‘அப்பட்டமான ஆக்கிரமிப்பு’ என்றும் ‘ஒரு நாட்டின் தலைவரை கடத்தும் செயல்’ என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.

வெனிசுலாவில் தற்போது சுமார் 50 வெளிநாடு வாழ் இந்தியர்களும், 30 இந்திய வம்சாவளியினரும் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெனிசுலாவில் நிலவும் பதற்றமான சூழலை கருத்தில் கொண்டு, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ‘இந்தியர்கள் யாரும் தவிர்க்க முடியாத காரணங்கள் இன்றி வெனிசுலாவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச விதிகளுக்கும், கச்சா எண்ணெய் வர்த்தக உறவுகளுக்கும் இடையில் ஒன்றிய அரசு சிக்கித் தவிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: